தமிழோடு வாழ்பவன்..

My photo
சுபாங் ஜாயா, சிலாங்கூர், Malaysia
மனிதத்தை மதிக்கும் மனிதன்..

Saturday, January 28, 2017

காங்கேயம்..


ஏறு தழுவ வீரு கொண்ட
வீரத் தமிழா..
ஆறு சொல்லி கூடி வந்தாய்
கூறு தமிழா..

அடி மேல் அடித்தால்
அம்மிதான் நகரும்- நீ
இடிபோல் முழங்கினாய்
இந்தியாவே நகர்ந்தது..!!

அரசியல் வாதியால் ஆகாததை
ஆறே நாட்களில் சாதித்தாய்இனி
அரசியலுக்கு நீ வந்தால்
பூரிப்பாள் நம் பாரதத் தாய்..!

இங்கே இருப்பவன் எல்லாம்
ஏலம் போன அரசியல்வாதிகள்
சேலைக்கு அடங்கும் சுயநலவாதிகள்..!!

இனி ஒரு விதி செய்
அதை
உறுதியாய் உடனே செய்..!

பெப்சி கோலா மட்டும் இல்லை– இங்கே
இனி இறக்குமதியே தேவை இல்லை..!!

ஜீன்ஸ் டீசர்ட் துறந்தால்
நெசவாளி வாழ்வான்
பீசா பர்கரை மறந்தால்
விவசாயி வாழ்வான்.. !!

பெப்சி கோலா மட்டும் இல்லை – இங்கே
இனி இறக்குமதியே தேவை இல்லை..!!

இனி ஒரு விதி செய்
அதை
உறுதியாய் உடனே செய்..!

சினிமா தாகம்
வெளி நாட்டு மோகம்
எல்லாம் மறப்பாய்..
உன் தாய் நாடு வளமாக
இன்றே வகுப்பாய்..!

தை பிறந்தால் வழி பிறக்கும்
இந்த 2017 தைக்கு பிறகு
தமிழ்நாடே சிறக்கும்..!!

இனி ஒரு விதி செய்
அதை
உறுதியாய் உடனே செய்..!

பீட்டா என்பது பொருட்டல்ல- நீ
டாட்டா சொல்வது பெரிதல்ல- உன்
பாட்டன் வழியில் வாழ்ந்தாலே – வால்
ஆட்ட மாட்டான் எவனும் இனி..

தமிழ்நாடு என்பது பெரும் சந்தை – அங்கே
தமிழினம் வாடுவது பெரும் விந்தை..
தமிழனின் பொருட்கள் வாழ்ந்தாலே
தமிழனும் வாழ்வான் மறவாதே..!!

இனி ஒரு விதி செய்
அதை
உறுதியாய் உடனே செய்..!

காங்கேயம் காளைகளால்
சரித்திரம் படைத்தாய் - இனி
அதுவே சின்னமென்று
சாதிக்க வருவாய்..!!

மஞ்சள் முருங்கை எல்லாம்
மாற்றானிடம் விட்டது போதும்!
உரிமமும் உரிமைதான்
ஊருக்கு உரைப்பாய்..

காங்கேயம் என்பது உன் சின்னம் - இனி
வெங்காயம் ஆனாலும் காங்கேயம்!
காங்கேயம் என்பதை உரிமம் செய் - அதை
வாங்காமல் துயில் இல்லை உறுதி செய்!

கட்சியும் காங்கேயம் – வியாபார
புரட்சியும் காங்கேயம்..
நிச்சயம் வெல்லும் காங்கேயம்
உச்சிக்கு உயரும் காங்கேயம்..!!

காங்கேயம் சின்னத்தை – இனி
சட்டையில் பொறிப்பாய்
அதில் வரும் உரிம நிதியை
கட்சிக்கு சேர்ப்பாய்..!!

இனி,
உலகம் முழுவதும் காங்கேயம்..
உலகத் தமிழனும் பங்கேற்பான் – இதில்
கலகம் புரிந்திட நினைத்தாலே - அவனை
விலக்கி வைக்கவும் காங்கேயம்..!!

வாழ்க வாழ்க காங்கேயம்..!!
வாழ்க எங்கள் ஜல்லிக்கட்டு
வாழ்க வாழ்க காங்கேயம்
வானும் அதிர்ந்திட மார்தட்டு..!!!!

                       -கவித்தமிழ் கிருஷ்ணமூர்த்தி



Monday, September 21, 2015

ஆராரோ ஆரிரரோ..

இந்த உலகின் எந்த மூலையிலாவது, இந்த ஆராரோ ஆரிரரோ தாலாட்டைக் கேட்காத தமிழ்க் குழந்தைகள் இருக்க முடியுமா? அதனை பாடாத தமிழ்த் தாய்மார்கள்தான் இருக்க முடியுமா? தமிழே தெரியாத தமிழ் பெண் என்றாலும் இந்த தாலாட்டும் அதன் சந்தமும் தெரியாமல் இருக்க முடியுமா?

இந்த தாலாட்டின் பொருள்தான் என்ன? காலங்காலமாய் அழியாமல் இருக்கும் இந்த தாலாட்டில் நிச்சயம் பொருள் பொதிந்திருக்க வேண்டும் அல்லவா? வாருங்கள்.. சற்றே அந்த பொருளை புரிந்து கொள்வோம்..

ஆராரோ ஆரிரரோ.. ஆராரோ ஆரிரரோ..

இதுதான், இந்த வரிகள்தான் எல்லா தமிழ் தாலாட்டுக்களுக்கும் மையம்.

இந்த ஆராரோ என்றால் என்ன? தமிழ் சித்தர்கள் பாடல்கள் பலவற்றில், யார் எனும் வார்த்தைக்கு பதிலாக ஆர் என்ற வார்த்தையையே பயன் படுத்தினார்கள். ஆக, ஆர் என்றால், யார் என்று பொருள் கொள்ள வேண்டும். இப்பொழுது இந்த பதத்தை பிரித்துப் படியுங்கள்.

ஆர் ஆரோ.. ஆர் ரிராரோ...
யார் யாரோ.. யார் இவரோ..

இதன் பெய்ப்பொருள் என்ன? இந்த ஜென்மத்தில் என் வயிற்றில் பிறந்த மகனே.. நீ முன்னம்.. முற்பிறவில் யாரோ? யார் யாரோ? பல முன் ஜென்மங்களில் யாருக்கெல்லாம் மகனாய் பிறந்தாயோ?

மீண்டும் ஒரு ஆரிரரோ..

ஆர் ஆரோ.. ஆர் ரிராரோ...
யார் யாரோ.. யார் இவரோ..

இப்பொழுது;

இந்த ஜென்மத்தில் என் வயிற்றில் பிறந்த மகனே.. நீ இனி.. அடுத்த பிறவில் யாரோ? யாராய் பிறப்பாயோ? அடுத்து வரப்போகும் பல ஜென்மங்களில் யாருக்கெல்லாம் மகனாய் பிறப்பாயோ?

எவ்வளவு பெரிய சித்தாந்த தெளிவினை இந்த ஆராரோ தாலாட்டில் வைத்து பாடியுள்ளனர் என்று தெரிந்த பொழுது.. தமிழனாக பிறந்ததற்கு, தமிழ் கற்றறிந்ததற்கு கோடி தவம் செய்த மகிழ்ச்சி உள்ளத்தில் பெருக்கோடியது!

K.கிருஷ்ணமூர்த்தி

(குறிப்பு: இந்தச் செய்தியை எங்களுக்கு சொன்னவர், டாக்டர் பால தருமலிங்கம் ஐயா அவர்கள். மலேசிய இந்து அகாடமியின் (மலேசிய இந்து கல்விக்கழகம்) தேசியப் பொதுச் செயலாளர். )


Tuesday, February 22, 2011

இண்டர்லோக்


இன்றைய தேதியில், மலேசியர்கள் மத்தியில்.. குறிப்பாக தமிழர் மலாய்க்காரர்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படும் ஒரு நாவல், இண்டர்லோக். மலேசிய அரசாங்கத்தால் 1971 ஆண்டு சிறந்த நாவல் என்று பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்ட நாவல்தான் இந்த இண்டர்லோக். இந்த நாவலை இயற்றிய அப்டுல்லா, நாட்டின் சிறந்த இலக்கியவாதியாகவும் கௌரவிக்கப் பட்டவர்.



சரி, ஏன் இந்தப் புத்தகம் புகைச்சலைக் கிளப்பி உள்ளது? அப்படி எதைப் பற்றி எழுதி உள்ளார் ஆசிரியர்?



நாவலில், சுதந்திரத்துக்கு முன்னர் இந்தியர்களும் சீனர்களும் இந்தாட்டிற்கு வெள்ளையர்களால் கொண்டுவரப்பட்ட காலக்கட்டத்தை சித்தரிக்கிறார் ஆசிரியர். முறையே ஒரு மலாய்க் குடும்பம், ஒரு சீனர் குடும்பம் இறுதியாக ஒரு இந்தியர் குடும்பம், அவர்களின் பின்ணனி ஆராயப்படுகிறது. கடைசி பாகத்தில், மலாய்க்காரர் சீனருக்கும் இந்தியருக்கும் பெரும் உதவிகள் புரிந்து நல்லவராகின்றார். அவருக்கு காலமெல்லாம் கடமைப்பட்டுக் கிடக்க வேண்டியது அந்த சீனர் மற்றும் இந்தியரின் கடமையாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றது. மலாய்க்காரர் ‘பூமிபுத்ரா’ (பூமி, புத்திரன் எல்லாமே சமஸ்கிரீத வார்த்தைகள்) அதாவது மலேசிய நாட்டின் புதல்வர்கள், அல்லது இந்த நாட்டுக்குச் சொந்தக்காரர்களாகவும், சீனர் மற்றும் இந்தியர் முழுக்க முழுக்க வந்தேறிகளாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். உண்மையில், இந்நாட்டின் பூர்வீகக் குடிகள் தவிர மற்ற அனைவருமே இங்கு குடிபுகுந்து வந்தவர்கள்தான். மலாய்க்காரர்கள் உட்பட.



சரி, அதனால் என்ன? இது ஒரு நாவல்தானே என்று நினைக்கத் தோன்றும். உண்மைதான், ஆனால்.. இந்த நாவல், ஐந்தாம் படிவ மாணவர்களுக்கு கட்டாயமாக போதிக்கப் பட வேண்டிய இலக்கிய நூல் வரிசையில் இடம் பிடித்ததுதான் இந்த புகைச்சலுக்கு காரணம்.



சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும் இங்கே குடியுரிமை கிடைத்ததே பெரிய விஷயம், வேறு உரிமைகளை கேட்காதீர்கள் என்று மனோதத்துவ ரீதியில் வலியுறுத்துவதற்க்காக அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாவல் இது! மலேசியாவில் மட்டும்தான் இரண்டு விதமான குடியுரிமை உள்ளது. ஒன்று மேலே நான் குறிப்பிட்ட ‘பூமிபுத்ரா’ குடியுரிமை. மற்றொன்று இந்தியர் வம்சாவளியினருக்கும் சீன வம்சாவளியினருக்கும் ஆனது. அதிலும், நாட்டின் அதிகார மதமான இஸ்லாத்தை தழுவி விட்டால், சில காலத்தில் இந்தியரோ சீனரோ ‘பூமிபுத்ரா’ ஆகிவிடலாம்!



இந்த பூமிபுத்ரா குடியுரிமையால் என்ன பயன்??



இங்கே பூமிபுத்ரா குடியுரிமை இருந்தால், பல சலுகைகள் கிடைக்கின்றது. முக்கியமாக வியாபாரம் செய்யும் அனுமதி(பெர்மிட்) சுலபமாக வழங்கப்படுகிறது. மற்றவர்கள், அதாவது இந்தியர்களும் சீனர்களும் பல வேளைகளில், பூமிபுத்ராக்களை பினாமியாக வைத்துத்தான் தொழில் புரிய வேண்டி இருக்கிறது!



உதாரணமாக, இந்தியர்கள் அதிகமாக ஈடுபடும் கனரக வாகன அனுமதிகள் பூமிபுத்ராக்களுக்கு மட்டுமே கிடைக்கும். அதனால் அந்த அனுமதிகளை பூமிபுத்ராக்களிடம் வாடகைக்கு எடுத்து பிழைப்பு நடத்த வேண்டி கட்டாயம் இந்தியர்களுக்கு. பூமிபுத்ராக்கள், கன ரக வாகனங்களை வாங்காமலேயே பல பெர்மிட்டுகளை வாடகைக்கு விட்டு அதிக இலாபம் பெறுகிறார்கள். அவர்கள் எந்த வேலையும் செய்ய வேண்டியதில்லை! இந்தியர்கள், கன ரக வாகனங்களை கடனுக்கு வாங்கி, வட்டி கட்டிக் கொண்டு, சந்தாவையும் செலுத்திக் கொண்டு, பூமிபுத்ராக்களுக்கு பெர்மிட் வாடகையும் செலுத்திக் கொண்டு, கடினமாக உழைத்தால், கொஞ்சம் இலாபம் பார்க்கலாம். அது கூட, போக்குவரத்து அதிகாரிகள், காவல்துரையினர் என்று பலருக்கு அடிக்கடி படியளக்க வேண்டும்! இதுதான் மலேசிய இந்தியர்களின் அவல நிலை. இப்படி நிறைய தொழில் செய்ய நம்மவர்களுக்கும் சீனர்களுக்கும் நேரடி அனுமதி கிடைப்பதில்லை!



இது போன்ற அவல நிலைகளை தட்டி கேட்க யாருமே இல்லாத தருணத்தில், ஹிண்ட்ராஃப் எனும் ஒரு சக்தி, மக்கள் சக்தி மலேசியாவில் ஒரு பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உலக மக்கள் அனைவருக்கும் இந்த அவல நிலையை எடுத்து இயம்பியது. அதன் பிறகு மக்கள் சற்று விழிப்புணர்வு பெற்றவர்களாய் ஆங்காங்கே கேள்விகள் கேட்க ஆரம்பித்து இந்தியர்களின் ஒரே பிரதிநிதி என்று மார்தட்டிக்கொண்டிருந்த ம.இ.கா. (மலேசிய இந்தியர் காங்கிரஸ்) கட்சியையும் புறக்கணித்து 2008 ஆண்டு தேர்தலில் வாக்களித்தனர். அதன் பின் விளைவுதான், இந்த இண்டர்லோக் நாவலின் மறு படையெடுப்பு!



ஏற்கெனவே இன்நாவல் பல்கலைக்கழகங்களில் பாட நூலாகப் பயன்படுத்தப் பட்டதுதான். மீண்டும் ஒரு சில மாறுதல்களோடு பாடநூலாகத் திணிக்கப்பட்டிருக்கிறது இவ்வருடம்.



சரி, இதனால் என்ன என்கிறீர்களா?



இந்த நாவலில் வரும் சீனர், இலாபத்துக்காக எதையும் செய்வார் என்று சித்தரிக்கப்பட்டிருக்கின்றது. அதை சீனர் சமூகம் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை! இந்தியர்களுக்கு மட்டும் என்ன வந்ததாம்??



இந்நாவலில் வரும் மணியம் எனும் கதாப் பாத்திரம், இந்தியாவின் கேரள மாநிலத்திலிருந்து இங்கே கப்பலில் ஆடு மாடுகள் போல் வந்து சேருகிறார். அந்த கப்பலில் வந்த அணைத்து இந்தியர்களும் பல மொழி பேசுபவர்களாக இருந்தாலும், சாதியால் அணைவரும் ‘பறையர்கள்’. (இந்த சொல்லை பயன்படுத்துவதற்கு மண்ணியுங்கள். இதே வார்த்தையைத் தான் இந்த ஆசிரியர் பயன்படுத்தி இருக்கின்றார்) அவர்கள், இந்தியாவில் தீண்டத்தகாதவர்கள். அவர்களுக்கு இந்தியாவில் துளியும் மரியாதை கிடையாது. ஆனால், இங்கே வந்ததற்கு பிறகு, அவர்கள் வெகுவாக மாறிவிட்டார்கள். மேம்பாடு அடைந்து விட்டார்கள். இந்தியாவில் பிழைக்க வழி இல்லாமல் இங்கே வந்த ‘பறையர்கள்’ இங்கே நல்ல வாழ்க்கையை அனுபவிக்கின்றனர். அதற்கு காரணம் நல்ல மனம் கொண்ட, பெருந்தன்மை மிக்க மலாய்க்காரர்கள் என்று சூசகமாக சொல்லியிருக்கிறார் ஆசிரியர். அது மட்டுமின்றி பல இடத்தில், இந்தியர்களையும், இந்திய மாதர்களையும் மாசுபடுத்தி எழுதி, அனைத்து இந்தியர்களும் இப்படித்தான் என்றும் முத்திரை குத்தியுள்ளார்.



இப்படி இன்னும் பல இழிவுகளை நமக்களிக்கும் இந்த இண்டர்லோக் நாவல், மலேசிய அரசாங்கத்தால் 1971ஆம் ஆண்டு சிறந்த நாவலாக தேர்ந்தெடுக்கப் பட்டு பரிசு வழங்கப்பட்டுள்ளது! அதை இப்போது இரண்டுங்கெட்டான் வயதில் இருக்கும் பள்ளி மாணவர்களுக்கு கட்டாய இலக்கிய நூலாக போதிக்கப் பட்டுக்கொண்டிருக்கிறது. இந்தியர்கள் எவ்வளவு எதிர்த்தும் பலனில்லை!



இதற்கு இன்னொரு காரணமும் உண்டு என்றே எனக்கு தோன்றுகிறது. இப்பொழுது, இந்நாட்டில் உள்ள மலாய்க்காரர்கள் அரசியல் ரீதியில் இரண்டாகப் பிரிந்து கிடக்கிறார்கள். அவர்களை ஒன்று சேர்க்க வேண்டுமானால், “இஸ்லாத்துக்கோ அல்லது மலாய் சமூகத்தினருக்கோ ஆபத்து” என்று ஒரு மாயையை ஏற்படுத்தி விட்டால், மலாய்க்காரர்கள் ஒன்று படுவார்கள். அதற்கான பகடைக் காய்கள்தான் இந்தியர்கள்!



இன்னொரு காரணம், 2008-ஆம் ஆண்டில் தேர்தலில் இந்தியர்கள் ஹிண்ட்ராஃப் மக்கள் சக்தியின் பால் ஈர்க்கப்பட்டு எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்தனர். அதனால் ஐந்து மாநிலங்களில் நடுவண் அரசு தோல்வி கண்டது. ஐந்து மாநிலங்களில் எதிர்கட்சிகள் ஆட்சி அமைத்தனர். இதற்கு பழி வாங்குவதற்காகவும் இந்த நாவல் பயன்படுத்தப் பட்டிருக்கலாம்..



இந்த இண்டர்லோக் நாவலுக்கு எதிராக வரும் 27.2.2011 ஆம் தேதி கோலாலும்பூர் மாநகரில் மீண்டும் ஹிண்ட்ராஃப் ஒரு மக்கள் பேரணி நடத்த திட்டமிட்டு அதன் பணிகள் எல்லாம் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதன் ஏற்பாட்டாளர்கள் தினமும் போலீசாரால் கைது செய்யப் படுவதும், மீண்டும் விடுவிக்கப்படுவதுமாக தினமும் செய்தி வெளியாகிக் கொண்டிருக்கிறது!



சென்ற பேரணியில் என்ன நடந்தது என்று உலகமே அறியும். இம்முறை?? பொறுத்திருப்போம்..!


K.கிருஷ்ணமூர்த்தி



http://en.wikipedia.org/wiki/Interlok

Wednesday, December 22, 2010

நல்ல தமிழ் பேசுவது ஈழச் சகோதரர்களா?

அண்மையில் ஒரு மலேசிய வானொலியில் பேட்டி ஒன்றை கேட்க நேர்ந்தது.. அயல் நாட்டில், ஆங்கிலேய நாட்டில், தமிழ்த் தொலைக்காட்சியில் பணிபுரியும் ஒரு பெண் குயிலின் பேட்டி அது. மிகவும் நேர்த்தியாகவும், அழகாகவும் தமிழ் பேசியது அந்த குயில். அந்த குயில் பெற்றோரின் உதவியால் சொந்தமாக தமிழ் படித்து அயல் நாட்டில் அரங்கேற்றம் கண்டு, தமிழை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. உண்மையிலேயே, குரலில் நல்ல தெளிவு, தன்னம்பிக்கை, தன்னடக்கம்... என்னை வெகுவாக கவர்ந்தது அந்த பேட்டி - ஒரு சில நெருடல்களுக்கு இடையே!

அவர் சொன்ன சில விஷயங்கள் என்னை குழப்பி விட்டன! அயல் நாட்டில் குடிபெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் தான் உண்மையில் நல்ல தமிழ் பேசுகிறார்கள் என்று அவர் கூறியது என்னை நெருடியது!

ஈழச் சோதரர்கள் மீது எனக்கு பாசமும் நேசமும் பற்றும் பொறுப்பும் இருக்கிறது.. அது நானே மறுத்தாலும் மறைக்க முடியாத உண்மை! இருந்தாலும் அவர் கூறிய கூற்று.. என்னை நெருடியது!

ஈழச் சகோதரர்கள் பேசும் தமிழில் பல வார்த்தைகள் தமிழ் அகராதியில் காணக் கிடைக்காத பொழுது, அவர்கள்தான் நல்ல தமிழ் பேசுகிறார்கள் என்று அவர் சொன்ன கருத்து... என்னை வெகுவாகப் பாதித்தது! உதாரணத்திற்கு, ஆம் என்பதற்கு 'ஓமோம்' (நண்பரின் பின்னூட்டுக்குப் பிறகு திருத்தப் பட்டது) என்கிறார்கள். இது தமிழா? ஈழச் சகோதரர்கள் என்னை மன்னிக்க வேண்டும். நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றம் தானே!

அடுத்து ஒரு வாக்கியம் சொன்னார், பேட்டியின் இருதியில். "முடிந்த அளவுக்கு எல்லோரும் நல்ல தமிழில் பேசுவோம்" என்று. இந்த 'முடிந்த அளவுக்கு' என்னும் வார்த்தை சரியானதா? அந்த குயிலின் மேல் எனக்கு வருத்தமில்லை. நன்றாகத்தான் பேசினார். இருந்தாலும், இந்த வார்த்தை சரியான வார்த்தையா? அதென்ன.. முடிந்த அளவுக்கு?! இயன்ற அளவுக்கு என்றுதானே சொல்லி இருக்க வேண்டும்! 'முடிந்த 'அளவுக்கு என்றால் பொருட் குற்றம் ஏற்படாதா?

இது யாரையும் குறை சொல்ல எழுதும் பதிவல்ல.. ஒரு தெளிவு வேண்டி எழுதும் பதிவு. என்னைப் பொருத்த வரை, மலேசியத் தமிழர்களும், சிங்கப்பூர் தமிழர்களும் மற்ற இடங்களில் புலம்பெயர்ந்த தமிழர்களை விட சற்று அதிகமாக நல்ல தமிழை பேசுகின்றனர். அறிஞர் அண்ணா மலேயாவுக்கு வந்த போது, காலைப் பசியாற வாருங்கள் என்று அழைத்தவர்களை அவர் எப்படி மெய்மறந்து புகழ்ந்தார் என்பதை கேள்விப் பட்டிருக்கிறேன்.

ஆக, தமிழ் வல்லுனர்கள்.. இயன்றால் தெளிவு சொல்லுங்கள்.. நன்றி!

-கிருஷ்ணமூர்த்தி

Tuesday, May 11, 2010

ஏட்டுக் கல்வியா? தொழிற் கல்வியா? சிறு தொழிலா??

நண்பர்களே.. உலகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது? நாட்டு நடப்பு என்ன தெரியுமா?

பதினாறு வயது மாணவன் ஒருவனுக்கு எப்படி அறிவுரை சொல்வது? முடியுமா நம்மால்?? இடைநிலைக் கல்வி முடித்த மாணவன் ஒருவன், பல்கலைக் கழகத்தில் சென்று படித்துக் கிழித்து பட்டமெல்லாம் வாங்கிவிட்ட நம்மைப் போன்றவர்களைப் பார்த்து கேட்பது எல்லாம் ஒன்றே ஒன்றுதான்.. "என்ன அங்கிள் படிக்கிறது?"

பெரியவர்கள், பெற்றோர்கள் நம்மைப் பார்த்து குழப்பத்தோடு கேட்பது.. "எங்க அனுப்பலாம் பையனை..?"

இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் உண்டா நம்மிடம்? சிலனேரம் மனதுக்குள்ளும்.. சிலநேரம் வெளிப்படையாகவும் நான் சொல்லும் பதில் இதுதான்..

"நல்லா படிச்சா.. நல்ல வேளைக்குப் போகலாம்..
படிக்காம இப்பவே எதாவது தொழிலை கத்துக்கிட்டா.. பின்னாளில் நல்ல லாபம் பார்க்கலாம்.. இப்பவே சின்னதா ஏதாவது தொழில் பண்ணா.. பின்னாடி பெரிய தொழிலதிபர் ஆகலாம்.. நல்லா படிச்ச நூறு பேருக்கு வேலை போட்டுக் கொடுக்கலாம்.."

நான் சொல்றது தப்புன்னா.. என்னை மண்ணிச்சிடுங்க..! ஆனா.. அதுதான் நிஜம்..

Monday, January 4, 2010

தாலி வந்த கதை

நண்பர் வேடிக்கை மனிதனின் 'தாலி புனிதமா?' http://sharavanaanu.blogspot.com/2009/12/blog-post.html என்ற கட்டுரையை படித்த பின்பு எனக்கு ஏதோ ஒரு விதத்தில் தெரிந்த.. தெரிய வந்த தாலியைப் பற்றிய தகவலை இங்கே பகிர்ந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது. இதை நண்பரின் கட்டுரைக்கு பின்னூட்டாக போட்டிருக்கலாம்.. சிறு கருத்தாக இருந்திருந்தால்..!

சரி.. இந்த தாலி வந்த வந்த கதைதான் என்ன..?

ஆரம்பத்தில், நாகரிகம் குறைந்திருந்த மனிதனிடம்.. பெண் மோகம் குறைவாகவே இருந்தது.. ஆனால் பின்னாளில் நாகரிகம் வளர வளர மனிதனின் பெண்ணாசை பெருத்துவிட்டது. (அதனால்தானே நான் மிருகத்திடமிருந்து மாறுபடுகிறோம்..! )

ஆரம்பத்தில், மிருகங்களைப் போலவே மனிதனும் தனக்கு தேவைப்பட்ட துணையை தானாக அடைந்தான்.. வலிமையுள்ள, பலசாலியான மனிதன் தன் கூட்டத்திற்கு அரசனானான் அல்லது தலைவனானான். தலைவனானால்.. தான் நினைத்த பெண்களுடன் சல்லாபிக்க ஏது தடை..? தனது ஆக்கிரமிப்பை மற்ற ஆண்களுக்கு உணர்த்த தான் மோகிக்கும் பெண்களின் கழுத்தில் ஒரு கயிற்றைக் கட்டி.. தனது அடையாளமாக ஏதாவது ஒரு சிறு பொருளை கட்டி விடுவான் அந்த தலைவன். உதாரணத்திற்கு, அவன் வேட்டையாடி கொண்டு வந்த புலி பற்கள்.. நகங்கள் போன்ற சின்னங்களை கட்டி விட்டான். இதைப் பார்க்கும் மற்ற ஆண்கள்.. அந்த கயிற்றை அனிந்திருக்கும் பெண் அந்த பலசாலித் தலைவனுக்கு சொந்தமானவள் என்று அறிந்து அந்தப் பக்கமே தலை சாய்க்க மாட்டார்கள்.

பின்னாளில், நாகரிகம் வளர வளர இந்த கயிற்றினால் தலைவனுக்கு சில பிரச்சனைகள் தோன்ற ஆரம்பித்தன. அவனுக்கு சொந்தமான பெண்களுக்குள் பொறாமை, போட்டி மற்றும் பல அடிப்படைப் பிரச்சனைகள் ஆரம்பமாயின.. அதனால், தனது அடையாளத்தை.. மாராப்பில் மறைத்து வைக்கச் சொன்னான். நாளடைவில் மற்ற ஆண்களுக்கும் கொஞ்சம் தைரியம் வர, தங்களுக்கு பிடித்த பெண்களை கைப்பிடிக்க ஆரம்பித்தனர். அவர்களும் தலைவனைப் பின்பற்றி ஏதாவது ஒரு சின்னத்தை பெண்களின் கழுத்தினில் கட்டிவிட ஆரம்பித்தனர்.

பின்னாளில் இது ஒரு கலாச்சாரமாக மாறிவிட, பொதுவான சின்னங்களை பயன்படுத்தினர். பெண்கள் திருமணம் ஆனதும், தாமதிக்காமல் குழந்தைப் பேறு கொள்ள வேண்டும் என்று நினைத்து, சில பெண் உறுப்புக்களை தாலியின் சின்னமாக அமைத்தனராம். அப்படி வந்ததுதான் பொட்டுத் தாலி (பெண்ணின் மார்பகம்), திருமாங்கல்யாம் (பிறப்புருப்பைச் சார்ந்திருக்கும் எலும்புகள்) போன்றவை.

இந்த பிறப்பு உறுப்புச் சின்னங்கள்தான் இன்னமும் நம் பெண்களின் கழுத்தில் தாலியாக அலங்கரித்து இருக்கிறது என்று பெரியவர் ஒருவர் சொன்ன கதையைத்தான் இங்கே எழுதியிருக்கிறேன். அவர் சொன்ன விசயங்களை நான் எனக்கு புரிந்த விதத்தில் எழுதியிருக்கிறேன். இந்த கதை என் சிற்றறிவால் ஏற்றுக் கொள்ளப் பட்ட கதை. மற்றவர்கள் கருத்துக் கூறினால் சிறப்பாக இருக்கும்..

நன்றி
K. கிருஷ்ணமூர்த்தி

பின்குறிப்பு : என் மனைவி தாலி அணிவதை நான் விரும்பாததால்.. இன்றுவரை அவளும் தாலி அணிவதில்லை..!

Thursday, October 29, 2009

மன இறுக்கம் தீர ஓர் உல்லாசப் பயணம்

இன்றுமுதல் சில நாட்களுக்கு தாய்லாந்தின் பூக்கெட் தீவிற்கு (மனைவியோடுதான்) உல்லாசப் பயணம் செல்கிறேன். சில மாதங்களாக ஏற்பட்ட மன உலைச்சல், அலைச்சல், இழப்புக்களினால் ஏற்பட்ட காயங்கள், சோகம், விரக்தி, வேலைப்பழுவினால் ஏற்பட்ட களைப்பு.. இவற்றை எல்லாம் பூக்கெட் தீவில் இறக்கி விட்டு வர வேண்டும் என்றே செல்கிறேன்.

அடுத்த வாரம் மீண்டும் இந்த வலைப்பதிவில் புதிய பதிவுகள் இட முயற்சிக்கின்றேன்..

"இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க..!"

Tuesday, August 25, 2009

சிறிய இடைவெளி

அன்பு வாசகர்களே..

கடந்த 7.08.2009-இல் எனது ஆருயிர் மாமா, எனது உயிரினும் மேலான சகோதரியின் கணவர், திரு வெங்கடேசன் அவர்கள் சிவபதம் அடைந்ததால்.. எனது இந்த வலைப்பதிவில் தொடர்ந்து இடுகைகள் இடம்பெறாமல் போனது. இன்னமும் மீளாத் துயரத்திலும் அதிர்ச்சியிலும் இருக்கும் நான் சில நாட்கள் கழித்து மீண்டும் எனது 'அத்வைத தாம்பத்யத்தையும்' பிற கவிதைகளையும் தொடர்வேன். நண்பர்கள், வாசகர்கள் அணைவரும் சற்று பொறுமை காப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் மற்ற அலுவலகளை கவனிக்கிறேன்.

கவித்தமிழின் பயணம் விரைவில் தொடரும்..

இக்கண்
K.கிருஷ்ணமூர்த்தி

Tuesday, July 28, 2009

என் தாயாரும் கிரெடிட் கார்டும்!

கிரெடிட் கார்டு (Credit Card) என்பது நமக்கெல்லாம் பரீட்சயம் ஆகும் முன்பே, பாடசாலைப் பக்கமே ஒதுங்காத என் தாயார் மட்டுமல்ல.. இன்னும் எத்தனையோ பேர் இந்த கிரெடிட் கார்டுகளை பயன் படுத்தி இருந்தார்கள். அதிலும், நம்மை எல்லாம் விட நேர்த்தியாகவும், புத்திசாலித்தனமாகவும் வட்டியே இல்லாத கிரெடிட் கார்டுகளை காலங்காலமாக பயன் படுத்தி இருக்கிறார்கள் என்று ஒரு முறை வானொலியில் சொன்னேன்.. உடனே தொலைபேசி அலறத் தொடங்கி விட்டது ஆர்வத்தில்..!

உங்களுக்கு ஏதாவது புரிகிறதா?!

மலேசியத் தோட்டப்புறத்தில் பிறந்தவன் நான். எங்கள் தோட்டங்களில் எல்லாம் ஒரு பழக்கம் இருக்கும். அதாவது, மீன் வியாபாரி, காய்கறி வியாபாரி, பலசரக்குக் கடை வியாபாரிகள் எல்லாம் '555' என்ற எண் பொறித்த (மலாய் மொழியில் Buku Tiga Lima என்று பிரபலம்) புத்தகத்தை வைத்திருப்பார்கள். அந்த புத்தகமோ, இன்றைய கிரெடிட் கார்டு அளவைப் போலத்தான் இருக்கும்.

இவர்களிடம் பொருள் வாங்குபவர்களுக்கு இந்த புத்தகத்தை ஆளுக்கு ஒன்றாக கொடுத்துவிட்டு, அவர்கள் வாங்கும் பொருட்களின் மதிப்பை அந்த புத்தகத்தில் எழுதிவிட்டு, தாங்களும் ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்துக் கொள்வார்கள். இந்த முறை இன்னமும் கூட சில தோட்டங்களில் நடைமுறையில் இருக்கிறது. மாதம் முடிந்ததும், சம்பளத் தேதி முடிந்ததும், வீடு வீடாய் சென்று கணக்கை சரிபார்த்து மொத்தத் தொகையை பெற்ற்றுக் கொள்வார்கள். அல்லது, வாடிக்கையாளர்கள் கடையில் சென்று பணத்தை செலுத்தி விடுவார்கள். பணம் செலுத்தாவிட்டால் அடுத்த மாதத்திற்கு உண்டான பொருட்களை வாங்க முடியாது.

இந்த '555' நோட்டுப் புத்தகத்தைத் தான் நான் கிரெடிட் கார்டு என்று சொன்னேன் அன்று. இதில் வசதி என்னவென்றால், மாத பாக்கியை தாமதமாக தந்தாலும் கிரெடிட் கார்டு போல் வட்டி இல்லை! பல வியாபாரிகள் பொருட்களை நமது வசிப்பிடத்திற்கே கொண்டு வந்து அத்தியாவசியப் பொருட்களை வினியோகிப்பதும், பணத்தை நம்மைத் தேடி வந்து பெற்றுக் கொள்வதும்தான் இதன் தனிப் பெரும் சிறப்பு. இது இப்போதுள்ள கிரெடிட் கார்டில் சாத்தியமா?

அந்த காலத்தில், ஒருவரின் நன்னடத்தை, வாக்குச் சுத்தம் போன்றவற்றை கொண்டு அவர்களுக்கு எவ்வளவு கடன் தரலாம் என்று நிர்ணயித்தனர். அதனால், பிரச்சனைகள் குறைவாக இருந்தன. இன்று..?! கிரெடிட் கார்டினால் உலக அளவில் பிரச்சனைகள்!!!

மீண்டும் சொல்கிறேன், நாம் எவ்வளவு தான் நவீனமானாலும்.. நம் முன்னோர்கள் நம்மைவிட புத்திசாலிகள்..! என் தாயார் என்னைவிட புத்திசாலியான கிரெடிட் கார்டு பயனீட்டாளர்..!!!!

K. கிருஷ்ணமூர்த்தி

Sunday, July 19, 2009

இப்படியும் செய்யலாம்..!

நமது வாழ்க்கை முறை நாளுக்கு நாள், சுறுசுறுப்பாகிக் கொண்டே போகின்றது. ஆனால், நாமோ, நாளுக்கு நாள் சோம்பலாகிக் கொண்டே போகின்றோம்.. உதாரணத்திற்கு, remote control இல்லாமல் நம்மால் படம் பார்க்க முடிகிறதா?! remote control கானாமல் போய் விட்டால் ஒரு கையே காணாமல் போனது போலாகிவிடும்! இல்லையா?

நாம் சின்ன சின்ன வேலைகளை செய்யும் பொழுது கூட நமது உடலில் இருக்கும் calories அளவு குறைகின்றது! இதனால் ஓரளவு நமது உடல் எடையை நம்மால் கட்டுப்படுத்த முடிகிறது..

ஒரு அரை மணி நேரம் வீட்டில் தூசு தட்டிக்கொண்டிருந்தாலே.. நாம் உடலிலுள்ள 50 கலரிக்கள் எரிந்துவிடும். அது மட்டுமல்ல, இது 10 நிமிடங்கள் மெது நடனமாடுவதற்கு சமம்.

அரை மணி நேரம் துணிகளை, கைகளை மாற்றி மாற்றி ஐயர்ன் செய்வது, 11 நிமிடங்கள் aerobics செய்வடற்கு சமம். இதனால் 70 கலரிக்கள் எரிகின்றன.

அரை மணி நேரம் ஜன்னலை துடைப்பதால், 125 கலரிக்கள் குறைகின்றன.

படுக்கை அறையை தட்டி சுத்தம் செய்வதால், 130 கலரிக்கள் எரிந்து போகின்றன. இது 12 நிமிட மெதுவோட்டத்திற்ற்கு அதாவது, jogging செய்வதற்குச் சமம்.

விடுமுறை நாட்களில், அரை மணி நேரம் காரை கழுவினால், அது 143 கலரிக்களை எரிக்கிறது. இது, வயிற்றுப்பகுதிக்கு நல்லதொரு உடற்பயிற்சி.

அரை மணி நேரம், நாம் குளிக்கும் அறையை தேய்த்து கழுவுவதால், 200 கலரிக்கள் குறைகின்றன. இது ஒரு 45 நிமிடங்கள் நடனப்பயிற்சிக்கு சமம்.

மாடிப்படிக்கட்டுகளில், அரை மணி நேரம் ஏறி இறங்கி வந்தால், 285 கலரிக்கள் குறைகின்றனவாம். இது இருதயத்துக்கு நல்ல உடற்பயிற்சி. 19 நிமிடங்கள் வேகமாக ஸ்கிப்பிங் செய்வதற்கு சமம் இது!

இதனால்தான், நமது முன்னோர்களும் பெற்றோர்களும், நமது வேலைகளை நம்மையே செய்ய சொல்கின்றனர் போல் தெரிகிறது. இதனால் நமக்கு உடல் சோர்வு குறைந்து சுறுசுறுப்பு வருகிறது, பொறுப்புணர்ச்சி வருகின்றது.. உடலும் ஆரோக்கியமாக இருக்கின்றது! எல்லாம் சரி.. இன்று உங்கள் படுக்கையை யார் சுத்தம் செய்தது?!