தமிழோடு வாழ்பவன்..

My photo
சுபாங் ஜாயா, சிலாங்கூர், Malaysia
மனிதத்தை மதிக்கும் மனிதன்..

Tuesday, March 17, 2009

ஒரு வழிப் பாதை.. !

ரவி, STPM முடித்த மாணவன். சாதாரண குடும்பத்தில் பிறந்தவன். அவன் நன்கு படித்து, மருத்துவராகி நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் சேவையாற்ற வேண்டும் என்று அவனது விதவைத் தாயார் அவன் படிப்பதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தார். அவனது தாயாரின் கனவை நனவாக்கவும்.. தனது எதிர்காலத்தை செழிப்பாக்கவும்.. ரவி.. முழு மூச்சாக, கல்வியில் மட்டும் கவனம் வைத்து, படிப்பை தொடர்ந்து, பரீட்சை எழுதி நல்ல மதிப்பெண்களையும் பெற்றிருந்தான். பல்கலைக்கழக வாய்ப்பிற்காக காத்திருக்கின்றான். பதில் வந்தது. ஆவலுடன் அஞ்சலைப் பிரித்தவனுக்கு, படித்தவனுக்கு, மகிழ்ச்சியைவிட அதிர்ச்சியே அதிகமாக இருந்தது.. ஆம்.. அவனுக்கு உள்நாட்டு பல்கலைக் கழகமொன்றில் பட்டப் படிப்பை தொடர வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால்.. அவன் விரும்பிய, அவன் தாயார் எதிர்பார்த்த.. மருத்துவத் துறையில் அல்ல. மாறாக, பொறியியல் துறையில்!

ரவியின் தாயாருக்கு வருத்தம்.. ரவிக்கோ பெருத்த ஏமாற்றம். ஏமாற்றம் எரிமலைப் பிழம்பு போல நெஞ்சில் அனல் கக்கி அவனுக்கு சினத்தை மூட்டியது. அவனது தாயாரின் வாடிய முகமோ அவனது சினத்தை சீண்டி அதிகமாக்கியது.. ஏமாற்றத்தோடு அன்றைய இரவு கண்ணயர்ந்தான்..

பொழுது விடிந்தது.. அன்பே உருவான அவனது அன்னை அவனை எழுப்பினார். “எந்தத் துறையானால் என்ன.. இந்தத் துறையிலும் உன்னால் சாதிக்க முடியும்.. நல்ல விதை எந்த நிலத்திலும் நின்று முளைக்கும்”, என்று அவனுக்கு ஆறுதல் கூறி, அந்த வாய்ப்பை நழுவ விட வேண்டாமென அறிவுறை கூறினார். தாயின் வாக்கே தன் போக்கென அவனும் பல்கலைக் கழகம் சென்றான். தன் தாயாரின் அன்புக் கட்டளையை கருத்தில் கொண்டு கற்றான். பல்கலைக் கழகத்தில் சிறந்த மாணவன் என்ற விருதோடு பட்டமும் பெற்றான். ஈன்றாள் அன்று அகம் குளிர்ந்தாள். இவன் மனம் மகிழ்ந்தான்.

பொறியியல் துறையில் பெற்ற அறிவு.. மருத்துவத் துறையில் இருந்த ஆர்வம்.. இரண்டும் அவனை ஒரு புதிய மருத்துவக் கருவியை கண்டுபிடிக்க தூண்டின. முயற்சி திருவினை பயத்தது. பார் போற்றும் பெயர் பெற்றான்.. அவனது இத்துனை வளர்ச்சிக்கும் தன் அன்னையின் அரவணைப்பே காரணம் என் பறை சாற்றினான். அப்போது அவனை ஈன்றவள் பெரிதுவந்தாள். அகக்கண்ண்கள் கலங்கி அதன் துளிகள் நிஜக் கண்களில் துளிர்த்தன.
அன்றைய இரவு.. சாதித்து விட்டோம் என்ற அமைதியோடு அன்னையின் மடியில் கண்ணயர்ந்தான்.

மீண்டும் பொழுது விடிந்தது.. அன்னை அவனை எழுப்பினாள்.. பதில் இல்லை.. அசைத்தாள்.. அசையவில்லை.. “ஐயகோ.. !!” என்று கதறினாள்..

அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறான் மகன்.. அவனது அசைவற்ற உடலையும் சேர்த்து! “அம்மா.. அழாதிங்க.. எனக்கு ஒன்னுமில்லை..!” அவள் காதுகளில் இவன் கத்துவது கேட்ட பாடில்லை! திகைக்கிறான்..

“என்ன? ஒன்றும் புரியவில்லையா?” ஒலித்தது ஒரு குரல்.. எங்கேயோ கேட்ட குரல்.. “அப்போழுதே சொன்னேனே.. அவசரப் படாதே என்று.. என் பேச்சை கேட்டாயா.. இப்பொழுது பார்.. உன் உணர்வற்ற உடலை கட்டியணைத்து கதறும் தாயின் கண்ணீரைக் கூட உன்னால் துடைக்க முடியாது.. பார்.. நன்றாகப் பார்..” என்றது அந்த குரல்..

“ஏன்.. என்ன ஆச்சி எனக்கு?”
“மறந்து விட்டாயா.. நேற்று இரவு மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லையே என்று விஷம் குடித்தாயே.. அதற்குள் மறந்து விட்டாயா?

“அப்படியென்றால்.. நான் படித்து பட்டம் வாங்கியது? விருது வாங்கியது..? கருவி கண்டு பிடித்தது??

“எல்லாம் நடந்திருக்கும்.. நீ அவசரப்படாமல் இருந்திருந்தால்..”

“அப்போ நீ..”

“நான் உன்னோட மனசாட்சி..! நீ இறந்து ஆறு மணி நேரமாகுது..”

“வேண்டாம்.. நான் சாக மாட்டேன்.. நான் சாக மாட்டேன்.. அம்மா..அம்மா..”

“அட பைத்தியமே.. நினைத்தவுடன் திரும்பிச் செல்லக் கூடிய இடத்திற்கா நீ வந்திருக்கிறாய்? இனி உன் விதி உன் கையில் இல்லை.. இது ஒரு வழிப் பாதை..!!”

-அசுபம்-

1 comment:

து. பவனேஸ்வரி said...

அருமையான கதை... எஸ்.பி.ம். , எஸ்.டி.பி.எம். தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கும் இந்தத் தருணத்திற்கு ஏற்ற கதை. நல்லதொரு சிந்தனை. வாழ்த்துக்கள்.