தமிழோடு வாழ்பவன்..

My photo
சுபாங் ஜாயா, சிலாங்கூர், Malaysia
மனிதத்தை மதிக்கும் மனிதன்..

Tuesday, February 22, 2011

இண்டர்லோக்


இன்றைய தேதியில், மலேசியர்கள் மத்தியில்.. குறிப்பாக தமிழர் மலாய்க்காரர்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படும் ஒரு நாவல், இண்டர்லோக். மலேசிய அரசாங்கத்தால் 1971 ஆண்டு சிறந்த நாவல் என்று பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்ட நாவல்தான் இந்த இண்டர்லோக். இந்த நாவலை இயற்றிய அப்டுல்லா, நாட்டின் சிறந்த இலக்கியவாதியாகவும் கௌரவிக்கப் பட்டவர்.



சரி, ஏன் இந்தப் புத்தகம் புகைச்சலைக் கிளப்பி உள்ளது? அப்படி எதைப் பற்றி எழுதி உள்ளார் ஆசிரியர்?



நாவலில், சுதந்திரத்துக்கு முன்னர் இந்தியர்களும் சீனர்களும் இந்தாட்டிற்கு வெள்ளையர்களால் கொண்டுவரப்பட்ட காலக்கட்டத்தை சித்தரிக்கிறார் ஆசிரியர். முறையே ஒரு மலாய்க் குடும்பம், ஒரு சீனர் குடும்பம் இறுதியாக ஒரு இந்தியர் குடும்பம், அவர்களின் பின்ணனி ஆராயப்படுகிறது. கடைசி பாகத்தில், மலாய்க்காரர் சீனருக்கும் இந்தியருக்கும் பெரும் உதவிகள் புரிந்து நல்லவராகின்றார். அவருக்கு காலமெல்லாம் கடமைப்பட்டுக் கிடக்க வேண்டியது அந்த சீனர் மற்றும் இந்தியரின் கடமையாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றது. மலாய்க்காரர் ‘பூமிபுத்ரா’ (பூமி, புத்திரன் எல்லாமே சமஸ்கிரீத வார்த்தைகள்) அதாவது மலேசிய நாட்டின் புதல்வர்கள், அல்லது இந்த நாட்டுக்குச் சொந்தக்காரர்களாகவும், சீனர் மற்றும் இந்தியர் முழுக்க முழுக்க வந்தேறிகளாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். உண்மையில், இந்நாட்டின் பூர்வீகக் குடிகள் தவிர மற்ற அனைவருமே இங்கு குடிபுகுந்து வந்தவர்கள்தான். மலாய்க்காரர்கள் உட்பட.



சரி, அதனால் என்ன? இது ஒரு நாவல்தானே என்று நினைக்கத் தோன்றும். உண்மைதான், ஆனால்.. இந்த நாவல், ஐந்தாம் படிவ மாணவர்களுக்கு கட்டாயமாக போதிக்கப் பட வேண்டிய இலக்கிய நூல் வரிசையில் இடம் பிடித்ததுதான் இந்த புகைச்சலுக்கு காரணம்.



சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும் இங்கே குடியுரிமை கிடைத்ததே பெரிய விஷயம், வேறு உரிமைகளை கேட்காதீர்கள் என்று மனோதத்துவ ரீதியில் வலியுறுத்துவதற்க்காக அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாவல் இது! மலேசியாவில் மட்டும்தான் இரண்டு விதமான குடியுரிமை உள்ளது. ஒன்று மேலே நான் குறிப்பிட்ட ‘பூமிபுத்ரா’ குடியுரிமை. மற்றொன்று இந்தியர் வம்சாவளியினருக்கும் சீன வம்சாவளியினருக்கும் ஆனது. அதிலும், நாட்டின் அதிகார மதமான இஸ்லாத்தை தழுவி விட்டால், சில காலத்தில் இந்தியரோ சீனரோ ‘பூமிபுத்ரா’ ஆகிவிடலாம்!



இந்த பூமிபுத்ரா குடியுரிமையால் என்ன பயன்??



இங்கே பூமிபுத்ரா குடியுரிமை இருந்தால், பல சலுகைகள் கிடைக்கின்றது. முக்கியமாக வியாபாரம் செய்யும் அனுமதி(பெர்மிட்) சுலபமாக வழங்கப்படுகிறது. மற்றவர்கள், அதாவது இந்தியர்களும் சீனர்களும் பல வேளைகளில், பூமிபுத்ராக்களை பினாமியாக வைத்துத்தான் தொழில் புரிய வேண்டி இருக்கிறது!



உதாரணமாக, இந்தியர்கள் அதிகமாக ஈடுபடும் கனரக வாகன அனுமதிகள் பூமிபுத்ராக்களுக்கு மட்டுமே கிடைக்கும். அதனால் அந்த அனுமதிகளை பூமிபுத்ராக்களிடம் வாடகைக்கு எடுத்து பிழைப்பு நடத்த வேண்டி கட்டாயம் இந்தியர்களுக்கு. பூமிபுத்ராக்கள், கன ரக வாகனங்களை வாங்காமலேயே பல பெர்மிட்டுகளை வாடகைக்கு விட்டு அதிக இலாபம் பெறுகிறார்கள். அவர்கள் எந்த வேலையும் செய்ய வேண்டியதில்லை! இந்தியர்கள், கன ரக வாகனங்களை கடனுக்கு வாங்கி, வட்டி கட்டிக் கொண்டு, சந்தாவையும் செலுத்திக் கொண்டு, பூமிபுத்ராக்களுக்கு பெர்மிட் வாடகையும் செலுத்திக் கொண்டு, கடினமாக உழைத்தால், கொஞ்சம் இலாபம் பார்க்கலாம். அது கூட, போக்குவரத்து அதிகாரிகள், காவல்துரையினர் என்று பலருக்கு அடிக்கடி படியளக்க வேண்டும்! இதுதான் மலேசிய இந்தியர்களின் அவல நிலை. இப்படி நிறைய தொழில் செய்ய நம்மவர்களுக்கும் சீனர்களுக்கும் நேரடி அனுமதி கிடைப்பதில்லை!



இது போன்ற அவல நிலைகளை தட்டி கேட்க யாருமே இல்லாத தருணத்தில், ஹிண்ட்ராஃப் எனும் ஒரு சக்தி, மக்கள் சக்தி மலேசியாவில் ஒரு பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உலக மக்கள் அனைவருக்கும் இந்த அவல நிலையை எடுத்து இயம்பியது. அதன் பிறகு மக்கள் சற்று விழிப்புணர்வு பெற்றவர்களாய் ஆங்காங்கே கேள்விகள் கேட்க ஆரம்பித்து இந்தியர்களின் ஒரே பிரதிநிதி என்று மார்தட்டிக்கொண்டிருந்த ம.இ.கா. (மலேசிய இந்தியர் காங்கிரஸ்) கட்சியையும் புறக்கணித்து 2008 ஆண்டு தேர்தலில் வாக்களித்தனர். அதன் பின் விளைவுதான், இந்த இண்டர்லோக் நாவலின் மறு படையெடுப்பு!



ஏற்கெனவே இன்நாவல் பல்கலைக்கழகங்களில் பாட நூலாகப் பயன்படுத்தப் பட்டதுதான். மீண்டும் ஒரு சில மாறுதல்களோடு பாடநூலாகத் திணிக்கப்பட்டிருக்கிறது இவ்வருடம்.



சரி, இதனால் என்ன என்கிறீர்களா?



இந்த நாவலில் வரும் சீனர், இலாபத்துக்காக எதையும் செய்வார் என்று சித்தரிக்கப்பட்டிருக்கின்றது. அதை சீனர் சமூகம் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை! இந்தியர்களுக்கு மட்டும் என்ன வந்ததாம்??



இந்நாவலில் வரும் மணியம் எனும் கதாப் பாத்திரம், இந்தியாவின் கேரள மாநிலத்திலிருந்து இங்கே கப்பலில் ஆடு மாடுகள் போல் வந்து சேருகிறார். அந்த கப்பலில் வந்த அணைத்து இந்தியர்களும் பல மொழி பேசுபவர்களாக இருந்தாலும், சாதியால் அணைவரும் ‘பறையர்கள்’. (இந்த சொல்லை பயன்படுத்துவதற்கு மண்ணியுங்கள். இதே வார்த்தையைத் தான் இந்த ஆசிரியர் பயன்படுத்தி இருக்கின்றார்) அவர்கள், இந்தியாவில் தீண்டத்தகாதவர்கள். அவர்களுக்கு இந்தியாவில் துளியும் மரியாதை கிடையாது. ஆனால், இங்கே வந்ததற்கு பிறகு, அவர்கள் வெகுவாக மாறிவிட்டார்கள். மேம்பாடு அடைந்து விட்டார்கள். இந்தியாவில் பிழைக்க வழி இல்லாமல் இங்கே வந்த ‘பறையர்கள்’ இங்கே நல்ல வாழ்க்கையை அனுபவிக்கின்றனர். அதற்கு காரணம் நல்ல மனம் கொண்ட, பெருந்தன்மை மிக்க மலாய்க்காரர்கள் என்று சூசகமாக சொல்லியிருக்கிறார் ஆசிரியர். அது மட்டுமின்றி பல இடத்தில், இந்தியர்களையும், இந்திய மாதர்களையும் மாசுபடுத்தி எழுதி, அனைத்து இந்தியர்களும் இப்படித்தான் என்றும் முத்திரை குத்தியுள்ளார்.



இப்படி இன்னும் பல இழிவுகளை நமக்களிக்கும் இந்த இண்டர்லோக் நாவல், மலேசிய அரசாங்கத்தால் 1971ஆம் ஆண்டு சிறந்த நாவலாக தேர்ந்தெடுக்கப் பட்டு பரிசு வழங்கப்பட்டுள்ளது! அதை இப்போது இரண்டுங்கெட்டான் வயதில் இருக்கும் பள்ளி மாணவர்களுக்கு கட்டாய இலக்கிய நூலாக போதிக்கப் பட்டுக்கொண்டிருக்கிறது. இந்தியர்கள் எவ்வளவு எதிர்த்தும் பலனில்லை!



இதற்கு இன்னொரு காரணமும் உண்டு என்றே எனக்கு தோன்றுகிறது. இப்பொழுது, இந்நாட்டில் உள்ள மலாய்க்காரர்கள் அரசியல் ரீதியில் இரண்டாகப் பிரிந்து கிடக்கிறார்கள். அவர்களை ஒன்று சேர்க்க வேண்டுமானால், “இஸ்லாத்துக்கோ அல்லது மலாய் சமூகத்தினருக்கோ ஆபத்து” என்று ஒரு மாயையை ஏற்படுத்தி விட்டால், மலாய்க்காரர்கள் ஒன்று படுவார்கள். அதற்கான பகடைக் காய்கள்தான் இந்தியர்கள்!



இன்னொரு காரணம், 2008-ஆம் ஆண்டில் தேர்தலில் இந்தியர்கள் ஹிண்ட்ராஃப் மக்கள் சக்தியின் பால் ஈர்க்கப்பட்டு எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்தனர். அதனால் ஐந்து மாநிலங்களில் நடுவண் அரசு தோல்வி கண்டது. ஐந்து மாநிலங்களில் எதிர்கட்சிகள் ஆட்சி அமைத்தனர். இதற்கு பழி வாங்குவதற்காகவும் இந்த நாவல் பயன்படுத்தப் பட்டிருக்கலாம்..



இந்த இண்டர்லோக் நாவலுக்கு எதிராக வரும் 27.2.2011 ஆம் தேதி கோலாலும்பூர் மாநகரில் மீண்டும் ஹிண்ட்ராஃப் ஒரு மக்கள் பேரணி நடத்த திட்டமிட்டு அதன் பணிகள் எல்லாம் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதன் ஏற்பாட்டாளர்கள் தினமும் போலீசாரால் கைது செய்யப் படுவதும், மீண்டும் விடுவிக்கப்படுவதுமாக தினமும் செய்தி வெளியாகிக் கொண்டிருக்கிறது!



சென்ற பேரணியில் என்ன நடந்தது என்று உலகமே அறியும். இம்முறை?? பொறுத்திருப்போம்..!


K.கிருஷ்ணமூர்த்தி



http://en.wikipedia.org/wiki/Interlok