தமிழோடு வாழ்பவன்..

My photo
சுபாங் ஜாயா, சிலாங்கூர், Malaysia
மனிதத்தை மதிக்கும் மனிதன்..

Wednesday, December 22, 2010

நல்ல தமிழ் பேசுவது ஈழச் சகோதரர்களா?

அண்மையில் ஒரு மலேசிய வானொலியில் பேட்டி ஒன்றை கேட்க நேர்ந்தது.. அயல் நாட்டில், ஆங்கிலேய நாட்டில், தமிழ்த் தொலைக்காட்சியில் பணிபுரியும் ஒரு பெண் குயிலின் பேட்டி அது. மிகவும் நேர்த்தியாகவும், அழகாகவும் தமிழ் பேசியது அந்த குயில். அந்த குயில் பெற்றோரின் உதவியால் சொந்தமாக தமிழ் படித்து அயல் நாட்டில் அரங்கேற்றம் கண்டு, தமிழை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. உண்மையிலேயே, குரலில் நல்ல தெளிவு, தன்னம்பிக்கை, தன்னடக்கம்... என்னை வெகுவாக கவர்ந்தது அந்த பேட்டி - ஒரு சில நெருடல்களுக்கு இடையே!

அவர் சொன்ன சில விஷயங்கள் என்னை குழப்பி விட்டன! அயல் நாட்டில் குடிபெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் தான் உண்மையில் நல்ல தமிழ் பேசுகிறார்கள் என்று அவர் கூறியது என்னை நெருடியது!

ஈழச் சோதரர்கள் மீது எனக்கு பாசமும் நேசமும் பற்றும் பொறுப்பும் இருக்கிறது.. அது நானே மறுத்தாலும் மறைக்க முடியாத உண்மை! இருந்தாலும் அவர் கூறிய கூற்று.. என்னை நெருடியது!

ஈழச் சகோதரர்கள் பேசும் தமிழில் பல வார்த்தைகள் தமிழ் அகராதியில் காணக் கிடைக்காத பொழுது, அவர்கள்தான் நல்ல தமிழ் பேசுகிறார்கள் என்று அவர் சொன்ன கருத்து... என்னை வெகுவாகப் பாதித்தது! உதாரணத்திற்கு, ஆம் என்பதற்கு 'ஓமோம்' (நண்பரின் பின்னூட்டுக்குப் பிறகு திருத்தப் பட்டது) என்கிறார்கள். இது தமிழா? ஈழச் சகோதரர்கள் என்னை மன்னிக்க வேண்டும். நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றம் தானே!

அடுத்து ஒரு வாக்கியம் சொன்னார், பேட்டியின் இருதியில். "முடிந்த அளவுக்கு எல்லோரும் நல்ல தமிழில் பேசுவோம்" என்று. இந்த 'முடிந்த அளவுக்கு' என்னும் வார்த்தை சரியானதா? அந்த குயிலின் மேல் எனக்கு வருத்தமில்லை. நன்றாகத்தான் பேசினார். இருந்தாலும், இந்த வார்த்தை சரியான வார்த்தையா? அதென்ன.. முடிந்த அளவுக்கு?! இயன்ற அளவுக்கு என்றுதானே சொல்லி இருக்க வேண்டும்! 'முடிந்த 'அளவுக்கு என்றால் பொருட் குற்றம் ஏற்படாதா?

இது யாரையும் குறை சொல்ல எழுதும் பதிவல்ல.. ஒரு தெளிவு வேண்டி எழுதும் பதிவு. என்னைப் பொருத்த வரை, மலேசியத் தமிழர்களும், சிங்கப்பூர் தமிழர்களும் மற்ற இடங்களில் புலம்பெயர்ந்த தமிழர்களை விட சற்று அதிகமாக நல்ல தமிழை பேசுகின்றனர். அறிஞர் அண்ணா மலேயாவுக்கு வந்த போது, காலைப் பசியாற வாருங்கள் என்று அழைத்தவர்களை அவர் எப்படி மெய்மறந்து புகழ்ந்தார் என்பதை கேள்விப் பட்டிருக்கிறேன்.

ஆக, தமிழ் வல்லுனர்கள்.. இயன்றால் தெளிவு சொல்லுங்கள்.. நன்றி!

-கிருஷ்ணமூர்த்தி