தமிழோடு வாழ்பவன்..

My photo
சுபாங் ஜாயா, சிலாங்கூர், Malaysia
மனிதத்தை மதிக்கும் மனிதன்..

Tuesday, July 28, 2009

என் தாயாரும் கிரெடிட் கார்டும்!

கிரெடிட் கார்டு (Credit Card) என்பது நமக்கெல்லாம் பரீட்சயம் ஆகும் முன்பே, பாடசாலைப் பக்கமே ஒதுங்காத என் தாயார் மட்டுமல்ல.. இன்னும் எத்தனையோ பேர் இந்த கிரெடிட் கார்டுகளை பயன் படுத்தி இருந்தார்கள். அதிலும், நம்மை எல்லாம் விட நேர்த்தியாகவும், புத்திசாலித்தனமாகவும் வட்டியே இல்லாத கிரெடிட் கார்டுகளை காலங்காலமாக பயன் படுத்தி இருக்கிறார்கள் என்று ஒரு முறை வானொலியில் சொன்னேன்.. உடனே தொலைபேசி அலறத் தொடங்கி விட்டது ஆர்வத்தில்..!

உங்களுக்கு ஏதாவது புரிகிறதா?!

மலேசியத் தோட்டப்புறத்தில் பிறந்தவன் நான். எங்கள் தோட்டங்களில் எல்லாம் ஒரு பழக்கம் இருக்கும். அதாவது, மீன் வியாபாரி, காய்கறி வியாபாரி, பலசரக்குக் கடை வியாபாரிகள் எல்லாம் '555' என்ற எண் பொறித்த (மலாய் மொழியில் Buku Tiga Lima என்று பிரபலம்) புத்தகத்தை வைத்திருப்பார்கள். அந்த புத்தகமோ, இன்றைய கிரெடிட் கார்டு அளவைப் போலத்தான் இருக்கும்.

இவர்களிடம் பொருள் வாங்குபவர்களுக்கு இந்த புத்தகத்தை ஆளுக்கு ஒன்றாக கொடுத்துவிட்டு, அவர்கள் வாங்கும் பொருட்களின் மதிப்பை அந்த புத்தகத்தில் எழுதிவிட்டு, தாங்களும் ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்துக் கொள்வார்கள். இந்த முறை இன்னமும் கூட சில தோட்டங்களில் நடைமுறையில் இருக்கிறது. மாதம் முடிந்ததும், சம்பளத் தேதி முடிந்ததும், வீடு வீடாய் சென்று கணக்கை சரிபார்த்து மொத்தத் தொகையை பெற்ற்றுக் கொள்வார்கள். அல்லது, வாடிக்கையாளர்கள் கடையில் சென்று பணத்தை செலுத்தி விடுவார்கள். பணம் செலுத்தாவிட்டால் அடுத்த மாதத்திற்கு உண்டான பொருட்களை வாங்க முடியாது.

இந்த '555' நோட்டுப் புத்தகத்தைத் தான் நான் கிரெடிட் கார்டு என்று சொன்னேன் அன்று. இதில் வசதி என்னவென்றால், மாத பாக்கியை தாமதமாக தந்தாலும் கிரெடிட் கார்டு போல் வட்டி இல்லை! பல வியாபாரிகள் பொருட்களை நமது வசிப்பிடத்திற்கே கொண்டு வந்து அத்தியாவசியப் பொருட்களை வினியோகிப்பதும், பணத்தை நம்மைத் தேடி வந்து பெற்றுக் கொள்வதும்தான் இதன் தனிப் பெரும் சிறப்பு. இது இப்போதுள்ள கிரெடிட் கார்டில் சாத்தியமா?

அந்த காலத்தில், ஒருவரின் நன்னடத்தை, வாக்குச் சுத்தம் போன்றவற்றை கொண்டு அவர்களுக்கு எவ்வளவு கடன் தரலாம் என்று நிர்ணயித்தனர். அதனால், பிரச்சனைகள் குறைவாக இருந்தன. இன்று..?! கிரெடிட் கார்டினால் உலக அளவில் பிரச்சனைகள்!!!

மீண்டும் சொல்கிறேன், நாம் எவ்வளவு தான் நவீனமானாலும்.. நம் முன்னோர்கள் நம்மைவிட புத்திசாலிகள்..! என் தாயார் என்னைவிட புத்திசாலியான கிரெடிட் கார்டு பயனீட்டாளர்..!!!!

K. கிருஷ்ணமூர்த்தி

Sunday, July 19, 2009

இப்படியும் செய்யலாம்..!

நமது வாழ்க்கை முறை நாளுக்கு நாள், சுறுசுறுப்பாகிக் கொண்டே போகின்றது. ஆனால், நாமோ, நாளுக்கு நாள் சோம்பலாகிக் கொண்டே போகின்றோம்.. உதாரணத்திற்கு, remote control இல்லாமல் நம்மால் படம் பார்க்க முடிகிறதா?! remote control கானாமல் போய் விட்டால் ஒரு கையே காணாமல் போனது போலாகிவிடும்! இல்லையா?

நாம் சின்ன சின்ன வேலைகளை செய்யும் பொழுது கூட நமது உடலில் இருக்கும் calories அளவு குறைகின்றது! இதனால் ஓரளவு நமது உடல் எடையை நம்மால் கட்டுப்படுத்த முடிகிறது..

ஒரு அரை மணி நேரம் வீட்டில் தூசு தட்டிக்கொண்டிருந்தாலே.. நாம் உடலிலுள்ள 50 கலரிக்கள் எரிந்துவிடும். அது மட்டுமல்ல, இது 10 நிமிடங்கள் மெது நடனமாடுவதற்கு சமம்.

அரை மணி நேரம் துணிகளை, கைகளை மாற்றி மாற்றி ஐயர்ன் செய்வது, 11 நிமிடங்கள் aerobics செய்வடற்கு சமம். இதனால் 70 கலரிக்கள் எரிகின்றன.

அரை மணி நேரம் ஜன்னலை துடைப்பதால், 125 கலரிக்கள் குறைகின்றன.

படுக்கை அறையை தட்டி சுத்தம் செய்வதால், 130 கலரிக்கள் எரிந்து போகின்றன. இது 12 நிமிட மெதுவோட்டத்திற்ற்கு அதாவது, jogging செய்வதற்குச் சமம்.

விடுமுறை நாட்களில், அரை மணி நேரம் காரை கழுவினால், அது 143 கலரிக்களை எரிக்கிறது. இது, வயிற்றுப்பகுதிக்கு நல்லதொரு உடற்பயிற்சி.

அரை மணி நேரம், நாம் குளிக்கும் அறையை தேய்த்து கழுவுவதால், 200 கலரிக்கள் குறைகின்றன. இது ஒரு 45 நிமிடங்கள் நடனப்பயிற்சிக்கு சமம்.

மாடிப்படிக்கட்டுகளில், அரை மணி நேரம் ஏறி இறங்கி வந்தால், 285 கலரிக்கள் குறைகின்றனவாம். இது இருதயத்துக்கு நல்ல உடற்பயிற்சி. 19 நிமிடங்கள் வேகமாக ஸ்கிப்பிங் செய்வதற்கு சமம் இது!

இதனால்தான், நமது முன்னோர்களும் பெற்றோர்களும், நமது வேலைகளை நம்மையே செய்ய சொல்கின்றனர் போல் தெரிகிறது. இதனால் நமக்கு உடல் சோர்வு குறைந்து சுறுசுறுப்பு வருகிறது, பொறுப்புணர்ச்சி வருகின்றது.. உடலும் ஆரோக்கியமாக இருக்கின்றது! எல்லாம் சரி.. இன்று உங்கள் படுக்கையை யார் சுத்தம் செய்தது?!

Monday, July 6, 2009

இன்னும் ஒரு முறை..

அது ஒரு கோடைக் காலம். நிலம் வரண்டு போயிருந்ததால், விவசாயி ஒருவன் மிகுந்த கவலை கொண்டான்.. பயிர்கள் வாடிவிடும் என்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் கலங்கினான்.. அப்போது அந்த ஊருக்கு ஒரு துறவி வந்தார். அவரிடம் விவசாயி யோசனை கேட்க சென்றான். துறவியோ நிஷ்டையில் இருந்தார். அவரை தொந்தரவு செய்ய மனமில்லாமல் விவசாயி காத்திருந்தான்.

துறவி கண் முழித்தார். விவசாயி வணங்கினான். துறவி ஆச்சர்யத்தோடு அவனைப் பார்த்துவிட்டு என்ன விஷயம் என்று வினவினார். அதற்கு விவசாயி, "சுவாமி, தாங்கள் முற்றும் உணர்ந்தவர். இந்த கோடைக்காலத்தில் நதியெல்லாம் வரண்டு விட்டது. எனது பயிர்களுக்கும் எனக்கும் நீர் இல்லாமல் தவிக்கிறேன். நீங்கள்தான் எனக்கு உதவி செய்ய வேண்டும்..", என்றான்.

அதற்கு துறவி, "இந்த லோகத்தில், எல்லாம் இருக்கிறது.. உன் தோட்டத்திலேயே தண்ணீரும் இருக்கிறது. கிணறு தோண்டினால், தண்ணீர் கிடைக்கும்..", என்று கூறிவிட்டு மீண்டும் கண் மூடி நிஷ்டையில் ஆழ்ந்தார்.

மகிழ்ந்த விவசாயி.. தன் தோட்டத்திற்குச் சென்று தோண்ட ஆரம்பித்தான். முதல் நாள் பத்து அடி ஆழம் தோண்டினான். தண்ணீர் வரவில்லை. மறுநாள், இன்னும் ஐந்தடி தோண்டினான்.. அப்போதும் தண்ணீர் வரவில்லை..! வாட்டமடைந்த விவசாயி, மீண்டும் துறவியிடம் சென்றான்.

"சுவாமி, தாங்கள் சொன்னது போல் தோண்டிப் பார்த்தேன்.. நீர் வரவில்லை!", என்றான். அதற்கு துறவி, " முயற்சியையும் நம்பிக்கையும் கைவிடாதே.. தொடர்ந்து தோண்டு.. தண்ணீர் வரும்.." என்றார்.

தோட்டத்திற்கு வந்த விவசாயி, மீண்டும் தோண்டினான்.. இருபது அடி.. முப்பது அடி.. நாற்பது அடி.. தோண்டித் தோண்டி களைத்துப் போன விவசாயி, நம்பிக்கை இழந்துவிட்டான். இனி துறவியின் பேச்சை நம்பி புண்ணியமில்லை என்று எண்ணி அந்த தோட்டத்தை விட்டுவிட்டு சென்று விட்டான்.

சில நாட்கள் கழித்து, அந்தப் பக்கமாக வந்த வழிப்போக்கன் ஒருவன், அந்த தோட்டத்தை பார்த்தான். ஆளே இல்லாமல் வாடி இருந்த தோட்டத்தையும்.. தோண்டப்பட்ட கிணறையும் பார்த்துவிட்டு.. நடந்தவற்றை யூகித்துக் கொண்டான். நம்பிக்கையோடு அந்த குழியில் இறங்கி தோண்ட ஆரம்பித்தான்.. ஐந்தடி ஆழம் தொடர்ந்து தோண்டியதும்.. தண்ணீர் வரும் அறிகுறி தெரிந்தது! மகிழ்சியில் துள்ளிக் குதித்தான்...!

இந்தக் கதையின் சாரம்: முயற்சி என்பதே நம்பிக்கையின் அடிப்படையில் செய்யப் படுவதுதான். நம்பிக்கை இழந்துவிட்டால், முயற்சி பலன் அளிக்காது! எடுத்த காரியம் வெற்றி அடையும் வரை தொடர்ந்து ஒரே சிந்தனையில் முயன்றால், நினைத்த காரியம் கைகூடும்! அத்தனை அடிகள் ஆழம் தோண்டிய அந்த விவசாயிக்கு.. இன்னும் ஐந்து அடிகள் தோண்டும் பொறுமை இருந்திருந்தால்!