தமிழோடு வாழ்பவன்..

My photo
சுபாங் ஜாயா, சிலாங்கூர், Malaysia
மனிதத்தை மதிக்கும் மனிதன்..

Monday, July 6, 2009

இன்னும் ஒரு முறை..

அது ஒரு கோடைக் காலம். நிலம் வரண்டு போயிருந்ததால், விவசாயி ஒருவன் மிகுந்த கவலை கொண்டான்.. பயிர்கள் வாடிவிடும் என்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் கலங்கினான்.. அப்போது அந்த ஊருக்கு ஒரு துறவி வந்தார். அவரிடம் விவசாயி யோசனை கேட்க சென்றான். துறவியோ நிஷ்டையில் இருந்தார். அவரை தொந்தரவு செய்ய மனமில்லாமல் விவசாயி காத்திருந்தான்.

துறவி கண் முழித்தார். விவசாயி வணங்கினான். துறவி ஆச்சர்யத்தோடு அவனைப் பார்த்துவிட்டு என்ன விஷயம் என்று வினவினார். அதற்கு விவசாயி, "சுவாமி, தாங்கள் முற்றும் உணர்ந்தவர். இந்த கோடைக்காலத்தில் நதியெல்லாம் வரண்டு விட்டது. எனது பயிர்களுக்கும் எனக்கும் நீர் இல்லாமல் தவிக்கிறேன். நீங்கள்தான் எனக்கு உதவி செய்ய வேண்டும்..", என்றான்.

அதற்கு துறவி, "இந்த லோகத்தில், எல்லாம் இருக்கிறது.. உன் தோட்டத்திலேயே தண்ணீரும் இருக்கிறது. கிணறு தோண்டினால், தண்ணீர் கிடைக்கும்..", என்று கூறிவிட்டு மீண்டும் கண் மூடி நிஷ்டையில் ஆழ்ந்தார்.

மகிழ்ந்த விவசாயி.. தன் தோட்டத்திற்குச் சென்று தோண்ட ஆரம்பித்தான். முதல் நாள் பத்து அடி ஆழம் தோண்டினான். தண்ணீர் வரவில்லை. மறுநாள், இன்னும் ஐந்தடி தோண்டினான்.. அப்போதும் தண்ணீர் வரவில்லை..! வாட்டமடைந்த விவசாயி, மீண்டும் துறவியிடம் சென்றான்.

"சுவாமி, தாங்கள் சொன்னது போல் தோண்டிப் பார்த்தேன்.. நீர் வரவில்லை!", என்றான். அதற்கு துறவி, " முயற்சியையும் நம்பிக்கையும் கைவிடாதே.. தொடர்ந்து தோண்டு.. தண்ணீர் வரும்.." என்றார்.

தோட்டத்திற்கு வந்த விவசாயி, மீண்டும் தோண்டினான்.. இருபது அடி.. முப்பது அடி.. நாற்பது அடி.. தோண்டித் தோண்டி களைத்துப் போன விவசாயி, நம்பிக்கை இழந்துவிட்டான். இனி துறவியின் பேச்சை நம்பி புண்ணியமில்லை என்று எண்ணி அந்த தோட்டத்தை விட்டுவிட்டு சென்று விட்டான்.

சில நாட்கள் கழித்து, அந்தப் பக்கமாக வந்த வழிப்போக்கன் ஒருவன், அந்த தோட்டத்தை பார்த்தான். ஆளே இல்லாமல் வாடி இருந்த தோட்டத்தையும்.. தோண்டப்பட்ட கிணறையும் பார்த்துவிட்டு.. நடந்தவற்றை யூகித்துக் கொண்டான். நம்பிக்கையோடு அந்த குழியில் இறங்கி தோண்ட ஆரம்பித்தான்.. ஐந்தடி ஆழம் தொடர்ந்து தோண்டியதும்.. தண்ணீர் வரும் அறிகுறி தெரிந்தது! மகிழ்சியில் துள்ளிக் குதித்தான்...!

இந்தக் கதையின் சாரம்: முயற்சி என்பதே நம்பிக்கையின் அடிப்படையில் செய்யப் படுவதுதான். நம்பிக்கை இழந்துவிட்டால், முயற்சி பலன் அளிக்காது! எடுத்த காரியம் வெற்றி அடையும் வரை தொடர்ந்து ஒரே சிந்தனையில் முயன்றால், நினைத்த காரியம் கைகூடும்! அத்தனை அடிகள் ஆழம் தோண்டிய அந்த விவசாயிக்கு.. இன்னும் ஐந்து அடிகள் தோண்டும் பொறுமை இருந்திருந்தால்!

2 comments:

sivanes said...

//முயற்சி என்பதே நம்பிக்கையின் அடிப்படையில் செய்யப் படுவதுதான்//

உண்மைதான் நண்பரே, முயற்சி என்பதே நம்பிக்கையின் அடிப்படையில் செயல்படுவதுதான்! நாளை என்பதே நிலையில்லாதது இந்த வாழ்வில்! எனினும் நம்பிக்கை எனும் அச்சாணியில்தான் இந்த அகிலமே இயங்குகிறது என்பதே எனது கருத்தும்! நல்ல பதிவு.. நன்றியும்.. பாராட்டுக்களும்!

கிருஷ்ணா said...

பாராட்டுக்கு நன்றி தோழி!