தமிழோடு வாழ்பவன்..

My photo
சுபாங் ஜாயா, சிலாங்கூர், Malaysia
மனிதத்தை மதிக்கும் மனிதன்..

Saturday, March 21, 2009

குழந்தை பாண்டம்

குயவர்கள் மண்பாண்டம் செய்வதை நீங்கள் பார்த்ததுண்டா?

சுழலும் சக்கரத்தில் களிமண்ணை வைத்து... பாண்டத்தை உருவாக்குவார்கள்.. ஒரு கையால் உள்ளிருந்து அணைத்தபடியும்.. மறு கையால் வெளியே இருந்து தட்டிக்கொடுத்தபடி அவர்கள் அந்த பாண்டங்களை உருவாக்குவார்கள்.. இந்த இரு கைகளின் அழுத்தமும் ஒரே அளவில் இருப்பது முக்கியம்.. பிறகு அவற்றை உலையில் போட்டு சூடு காட்டுவார்கள்.. அப்பொழுதுதான்.. அந்த பாண்டம் நமக்கு பயனளிக்க வல்லதாக இருக்கும்... ஏதாவது ஒரு கையின் அழுத்தம் அதிகமானாலும், அந்த பாண்டம் உருப்பெறாது!

குழந்தை வளர்ப்பும் அப்படித்தான்... பாசம் எனும் ஒரு கையால் அணைத்து... கண்டிப்பு என்னும் மறு கையால் கண்காணிப்போடு வளர்க்க வேண்டும்.. பாசம் கூடினாலோ.. கண்டிப்பு அளவுக்கு மீறினாலோ.. குழந்தைகள் நாம் நினைப்பதுதால் வளர மாட்டார்கள்.. இப்படி முறையாக வளர்த்த பிள்ளைகளை, வாழ்க்கை என்னும் உலையிலிட்டு சூடு காட்ட வேண்டும்.. அப்பொழுதுதான்.. நம் குழந்தைகள், நாட்டிற்கும் வீட்டிற்கும் நல்ல மக்களாக திகழ்வார்கள்..!

Tuesday, March 17, 2009

ஒரு வழிப் பாதை.. !

ரவி, STPM முடித்த மாணவன். சாதாரண குடும்பத்தில் பிறந்தவன். அவன் நன்கு படித்து, மருத்துவராகி நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் சேவையாற்ற வேண்டும் என்று அவனது விதவைத் தாயார் அவன் படிப்பதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தார். அவனது தாயாரின் கனவை நனவாக்கவும்.. தனது எதிர்காலத்தை செழிப்பாக்கவும்.. ரவி.. முழு மூச்சாக, கல்வியில் மட்டும் கவனம் வைத்து, படிப்பை தொடர்ந்து, பரீட்சை எழுதி நல்ல மதிப்பெண்களையும் பெற்றிருந்தான். பல்கலைக்கழக வாய்ப்பிற்காக காத்திருக்கின்றான். பதில் வந்தது. ஆவலுடன் அஞ்சலைப் பிரித்தவனுக்கு, படித்தவனுக்கு, மகிழ்ச்சியைவிட அதிர்ச்சியே அதிகமாக இருந்தது.. ஆம்.. அவனுக்கு உள்நாட்டு பல்கலைக் கழகமொன்றில் பட்டப் படிப்பை தொடர வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால்.. அவன் விரும்பிய, அவன் தாயார் எதிர்பார்த்த.. மருத்துவத் துறையில் அல்ல. மாறாக, பொறியியல் துறையில்!

ரவியின் தாயாருக்கு வருத்தம்.. ரவிக்கோ பெருத்த ஏமாற்றம். ஏமாற்றம் எரிமலைப் பிழம்பு போல நெஞ்சில் அனல் கக்கி அவனுக்கு சினத்தை மூட்டியது. அவனது தாயாரின் வாடிய முகமோ அவனது சினத்தை சீண்டி அதிகமாக்கியது.. ஏமாற்றத்தோடு அன்றைய இரவு கண்ணயர்ந்தான்..

பொழுது விடிந்தது.. அன்பே உருவான அவனது அன்னை அவனை எழுப்பினார். “எந்தத் துறையானால் என்ன.. இந்தத் துறையிலும் உன்னால் சாதிக்க முடியும்.. நல்ல விதை எந்த நிலத்திலும் நின்று முளைக்கும்”, என்று அவனுக்கு ஆறுதல் கூறி, அந்த வாய்ப்பை நழுவ விட வேண்டாமென அறிவுறை கூறினார். தாயின் வாக்கே தன் போக்கென அவனும் பல்கலைக் கழகம் சென்றான். தன் தாயாரின் அன்புக் கட்டளையை கருத்தில் கொண்டு கற்றான். பல்கலைக் கழகத்தில் சிறந்த மாணவன் என்ற விருதோடு பட்டமும் பெற்றான். ஈன்றாள் அன்று அகம் குளிர்ந்தாள். இவன் மனம் மகிழ்ந்தான்.

பொறியியல் துறையில் பெற்ற அறிவு.. மருத்துவத் துறையில் இருந்த ஆர்வம்.. இரண்டும் அவனை ஒரு புதிய மருத்துவக் கருவியை கண்டுபிடிக்க தூண்டின. முயற்சி திருவினை பயத்தது. பார் போற்றும் பெயர் பெற்றான்.. அவனது இத்துனை வளர்ச்சிக்கும் தன் அன்னையின் அரவணைப்பே காரணம் என் பறை சாற்றினான். அப்போது அவனை ஈன்றவள் பெரிதுவந்தாள். அகக்கண்ண்கள் கலங்கி அதன் துளிகள் நிஜக் கண்களில் துளிர்த்தன.
அன்றைய இரவு.. சாதித்து விட்டோம் என்ற அமைதியோடு அன்னையின் மடியில் கண்ணயர்ந்தான்.

மீண்டும் பொழுது விடிந்தது.. அன்னை அவனை எழுப்பினாள்.. பதில் இல்லை.. அசைத்தாள்.. அசையவில்லை.. “ஐயகோ.. !!” என்று கதறினாள்..

அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறான் மகன்.. அவனது அசைவற்ற உடலையும் சேர்த்து! “அம்மா.. அழாதிங்க.. எனக்கு ஒன்னுமில்லை..!” அவள் காதுகளில் இவன் கத்துவது கேட்ட பாடில்லை! திகைக்கிறான்..

“என்ன? ஒன்றும் புரியவில்லையா?” ஒலித்தது ஒரு குரல்.. எங்கேயோ கேட்ட குரல்.. “அப்போழுதே சொன்னேனே.. அவசரப் படாதே என்று.. என் பேச்சை கேட்டாயா.. இப்பொழுது பார்.. உன் உணர்வற்ற உடலை கட்டியணைத்து கதறும் தாயின் கண்ணீரைக் கூட உன்னால் துடைக்க முடியாது.. பார்.. நன்றாகப் பார்..” என்றது அந்த குரல்..

“ஏன்.. என்ன ஆச்சி எனக்கு?”
“மறந்து விட்டாயா.. நேற்று இரவு மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லையே என்று விஷம் குடித்தாயே.. அதற்குள் மறந்து விட்டாயா?

“அப்படியென்றால்.. நான் படித்து பட்டம் வாங்கியது? விருது வாங்கியது..? கருவி கண்டு பிடித்தது??

“எல்லாம் நடந்திருக்கும்.. நீ அவசரப்படாமல் இருந்திருந்தால்..”

“அப்போ நீ..”

“நான் உன்னோட மனசாட்சி..! நீ இறந்து ஆறு மணி நேரமாகுது..”

“வேண்டாம்.. நான் சாக மாட்டேன்.. நான் சாக மாட்டேன்.. அம்மா..அம்மா..”

“அட பைத்தியமே.. நினைத்தவுடன் திரும்பிச் செல்லக் கூடிய இடத்திற்கா நீ வந்திருக்கிறாய்? இனி உன் விதி உன் கையில் இல்லை.. இது ஒரு வழிப் பாதை..!!”

-அசுபம்-

Saturday, March 14, 2009

தமிழின் சிறப்பு - ஓரெழுத்து வார்த்தைகள்

தமிழ் மொழி, மிகவும் தொண்மையானது. இது யாவரும் அறிந்ததே! தமிழில் நிறைய சிறப்புக்கள் உள்ளன.. அதில் ஒன்று : தமிழில்தான், அதிகமான ஓரெழுத்து சொற்கள் இருக்கின்றன. அதிலும் கூட, அந்த ஓரெழுத்து வார்த்தைகளுக்கு பல அர்த்தங்கள்!!!
உதாரணத்திற்கு :

அ - அழகு, சுட்டும் சுட்டெழுத்து (அங்கே)
ஆ - பசு, ஒரு வித மரம்
இ - இங்கே
ஈ - ஒரு சிறு உயிரினம்
உ - கடிதம் எழுதுவதற்கு முன் நிறைய பேர் 'உ' என்று எழுதுவர், அதன் அர்த்தம் தெரியாமலேயே. இந்த 'உ' சிவசக்தியை குறிக்கும்.
ஊ - ஊன் (தசை)

கை, மை, பை, வை.. இப்படி ஓரெழுத்து வார்த்தைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இது தமிழ் மொழியில் தொன்மையையும் வன்மையையும் காட்டுகிறது. இப்படி சிறப்பு வாய்ந்த தமிழை பேசுவதற்கே இன்று பலர் தயங்குகின்றனர்.

இனியாவது, நல்ல தமிழ் பேசுவோம்..!

(இது மலேசிய வானொலியில் காலைக்கதம்பம் நிகழ்ச்சியில் அறிவிப்பாளராக நான் சொன்ன கருத்து, இந்த கருத்தைச் சொல்லிவிட்டு நான் ஒலியேற்றிய பாடல் : தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு.. ஒரு
சரக்கிருக்குது முறுக்கிருக்குது மெட்டுப்போடு!)

Monday, March 2, 2009

சொன்னா கேக்கனும்!

(மலேசிய வானொலியில் அறிவிப்பாளராக இருந்தபோது, காலைக் கதம்ப நிகழ்ச்சியில் நான் சொன்ன தகவல்..)
சரி இப்பொழுது உங்களுக்கு ஒரு சின்ன பரிட்சை... சரியா? நீங்கள் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் பரவாயில்லை.. நான் சொல்வதை கவனமாக கேளுங்கள்...ரெடியா?

கொஞ்சம் அமைதியாக இருங்கள்.. கண்களை மூடிக்கொள்ளுங்கள்.. நான் சொல்வதை கவனமாக கேளுங்கள்.. எல்லோரும் இப்பொழுது, தயவு செய்து நீல நிறத்தை.. நீல வர்ணத்தை நினைக்காதீர்கள்... யாரும்.. நீல நிற வர்ணத்தை நினைக்காதீர்கள்... சொன்னா கேளுங்க.. நீல நிறத்தை எண்ணாதீர்கள்!!!!!
என்ன ஆச்சு? ஹஹஹ..நீல நிற வர்ணத்தை நினைக்காதீர்கள்... என்று நான் சொன்னதும்.. முதலில் உங்கள் மனக்கண்ணில் தோன்றியது என்ன நிறம்? நீல நிறம் தானே... உண்மையா? இதிலிருந்து என்ன தெரிகிறது? எப்பொழுதும், யாரிடமும் Negative கட்டளைகளை நேரடியாக சொல்லக்கூடாது. அவற்றை மறைமுகமாக சொல்வதுதான் சிறந்தது...!
நீல நிற வர்ணத்தை நினைக்காதீர்கள்...என்று சொல்வதற்கு பதில், சிகப்பு வர்ணத்தை நிணையுங்கள் என்று நான் சொல்லியிருந்தால், உங்களுக்கு நீல நிறம் பற்றிய சிந்தனையே தோன்றியிருக்காது அல்லவா...?

இங்கே குப்பை போடாதீர்கள் என்று எழுதி வைத்தால்.. அங்கேதான் அதிகம் குப்பையை கொட்டுவார்கள்.. இது நம் அன்றாட வாழ்க்கையில் நாம் பார்க்கும் சாதாரண விஷயம்தான்... இப்படி பல உதாரணங்களை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்... இது மனோவியல்..

பெற்றோர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்... பிள்ளைகளிடம் அதை செய்யாதே.. இதை செய்யாதே என்று சொல்வதை விட .. எதை செய்யலாம் எப்படி செய்யலாம் என்று சொல்லுங்கள்... அவர்களுக்கு அது சுலபமாக புரியும்... அவர்கள் உங்கள் சொற்படி நடப்பார்கள்.. சரியா?

இது அறிவுரை அல்ல.. ஆலோசனை..