தமிழோடு வாழ்பவன்..

My photo
சுபாங் ஜாயா, சிலாங்கூர், Malaysia
மனிதத்தை மதிக்கும் மனிதன்..
Showing posts with label ஆய்வு. Show all posts
Showing posts with label ஆய்வு. Show all posts

Saturday, February 28, 2009

புதுக்கவிதை கருத்தரங்கில் எனது ஆய்வுக் கட்டுரை (2006) - பகுதி 10

பாகம் ஒன்று

• முடிவு

கவிதைக்கு உயிராய் இருப்பது பாடுபொருள். உடலாய், அலங்காரமாய் அழகு சேர்ப்பது சொற்கள். இது இரண்டும் ஒருங்கே அமையப்பெற்றால், கவிதை கருத்தில் நிற்கும். காட்சி ஒன்றானாலும், காணும் கண்கள் வேறுபடும்போது.. கருத்தும் வேறுபடுகிறது. நல்ல கவிதைகள் கூட, கற்போரின் தகுதிக்கேற்ப, அவரவர் நிலையில் வேறு வேறாய் அர்த்தப்படுகின்றன. எனது சக்திக்கும், இரசனைக்கும், கருத்துக்கும் உட்பட்ட மூன்று கவிதைகளை இங்கே நான் பரிசுக்குரிய கவிதைகளாகவும், சில கவிதைகளை கவனத்தை ஈர்த்த கவிதைகளாகவும் தேர்ந்தெடுத்திருக்கின்றேன். இதில் மற்ரவர்களுக்கு முரண் இருந்தால், அதுவும் ஆரோக்கியமானதுதான், வரவேற்கப்படவேண்டியதுதான். சர்ச்சைக்குப் பின், தர்க்கத்துக்குப் பின் ஒரு புதிய தெளிவு பிறக்கும். அதை அனைவரும் அகன்ற மனதோடு ஏற்றுக்கொள்ள கடமைப்பட்டிருக்கின்றோம்.
நாட்டில், தமிழ் வாழ வேண்டும். தமிழ் இலக்கியங்கள் பல உருவாகி வாழ வேண்டும். வழி காட்ட வேண்டும். இன்னும் நிறைய இளம் கைகள் கவிதை எழுத தன் பென்சில்களை தீட்ட வேண்டும், பேனாக்களில் மையூற்ற வேண்டும்.

வாழ்க தமிழ்! வளர்க புதுக்கவிதை இம்மண்ணில்!!

புதுக்கவிதை கருத்தரங்கில் எனது ஆய்வுக் கட்டுரை (2006) - பகுதி 9

• சிறப்புப் பரிசு.

பல்கலைக்கழகங்களில், கல்விப் புதையலை தோண்டச் செல்லும் நம் மாணவர்களின் அன்றாட வாழ்க்கையில் இடம்பெறும் மிகச் சாதாரண விஷயங்களைச் சொல்லி, அவர்கள் செய்யும் சின்னச் சின்னச் செலவுகளில், செலவழிப்பது சில்லரைக் காசுகள் என்றாலும், அதன் பின்னால் ஒளிந்திருக்கும் பெற்றோரின் பெரிய பெரிய தியாகங்களை அழகாகச் சொல்லி இருக்கிறார், கவிஞர். தன்னை ஒரு ஆணாக உருவகப் படுத்தி எழுதியிருந்தாலும், “வானொலி வாங்க கூட்டுப்பணம் பிடித்தபோது”, “அலுக்காமல் அலங்கரித்துக்கொண்ட போது”.. என்ற வரிகளில்.. தன்னையும் அறியாமல், தான் ஒரு பெண் கவி என்பதை காட்டிக்கொடுத்து விடுகிறார். இருந்தாலும், கவிதையின் முடிவில், ஈன்றவளின் (பெற்றோரின்) தியாகத்தை எதார்த்தமாக சொல்லி, சட்டென்று நம்மை நெகிழ வைக்கிறார். கவிதையும் நெஞ்சில் நிற்கிறது.. கணக்கிறது!

முடியாது போடா...!

வெறுமை படரும்
ஹாஸ்டல் அறையில்
வைக்க
வானொலி வாங்க
கூட்டுப் பணம்
பிடித்த போது
தெரியவில்லை...!

பந்தாவுக்காக
நண்பர்கள்
மத்தியில்‘பிளாஞ்சா’
பண்ணும்போதும்
அறியவில்லை...!

காதலிக்காக
கஞ்சத்தனம்
இல்லாமல்
காசை
வாரி இறைத்தபோது
சத்தியமாய்
நினைவில்லை..!

தவறாமல்
சாப்பிட்டபோதும்..
அலுக்காமல்
அலங்கரித்துக்
கொண்ட போதும்...
எண்னவில்லை -
நான்என் வசமில்லை...!

ஒரு மாலைப் பொழுதில்
டாக்சி பயணம்...

‘முடியாது போடா,
நாலு வெள்ளித்தான் தருவேன்’
சீனனுடன்
சண்டை போட்ட
மூதாட்டியைப் பார்த்தவுடன்
பொட்டில் அடித்தது...

டாக்ஸி ஏறினால் பணம் செலவாகும்
என்று
நடந்தே
வீடு வந்து சேறும்
அம்மா!
-செ.ராஜேஸ்வரி
சுங்கைப்பட்டாணி
ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி

புதுக்கவிதை கருத்தரங்கில் எனது ஆய்வுக் கட்டுரை (2006) - பகுதி 7

கவிதையில் வேற்று மொழிகள்

ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கவிதைகளில், ஒரு சில நல்ல கவிஞர்கள் கூட, தமிழ்க் கவிதையில் அளவுக்கும் அதிகமாக அண்ணிய மொழியை சேர்த்து எழுதுவதைக் காண முடிகிறது! நல்ல கருத்து, சொல்லாட்சி, அழகியற்கூறுகள், எதார்த்தம்.. எல்லாம் இருந்தும்.. அண்ணிய மொழியின் ஆதிக்கம் ஒரு சில கவிதைகளின் தரத்தைக் குறைத்திருக்கிறது! சினிமா பாடல்களிலேயே அண்ணிய மொழி கலக்கக் கூடாது என்று போர்க்கொடி தூக்கும் நம்மவர்களுக்கு, இந்த கவிதைகளின் பால் ஈடுபாடு வருமா? உதாரணத்திற்கு, இந்த கவிதை:

நாங்க எல்லாம் மாறிட்டோம்
அதானால் பாதகமில்லை...

சமைக்கத் தெரியுமா?
எல்லார் துணிகளுக்கும்
‘வாஷிங் மிசினாய்’
இருக்கத் தெரியுமா?

‘இரவின் மடியில்’
நிலாப் பாடல்களை மறந்து
‘ஆராரோ ஆரிராரோ’
ஆலாபனை செய்து
‘டைமிங்’கோடு பாடத் தெரியுமா?

‘அண்ணாமலை’
‘மெட்டி ஒலி'களை மறந்து
குழந்தைக்கு
‘சூசூ’ கலக்கத் தெரியுமா?

தொட்டில் ஆட்டத்தெரியுமா?

மடிப்புக் கலையாமல்
‘ஐயன்’ போடத் தெரியுமா?

அனாமதேயக் ‘க்கால்’களை
‘க்கட்’ பண்ணத்தெரியுமா?

கஞ்சப் ‘பிஸ்னாரி’யாக
வாழும் முறைதெரியுமா?

அலுவலகத்தில்
'டப்புவே'யை
'யூஸ்' பண்னத் தெரியுமா?

வீடு வந்ததும்
கூட்டிப் பெருக்க தெரியுமா?

அந்தக் காலம் போல் இல்லை...
அதானால் பாதகமும் இல்லை...

எதற்கும்
தெரிந்து வைத்துக் கொள்
நண்பா..!
-ஏ.தேவராஜன் ஜாசின்.

கவிதை படிப்பதற்கு கலகலப்பாக இருந்தாலும்.. இது தமிழ்க் கவிதையா என்ற சந்தேகம் கூடவே எழுகிறது! இதையே மற்றவர்களும் பின் தொடர்ந்து எழுத ஆரம்பித்துவிட்டால் என்னவாகும்? இது இளைஞர்களுக்காக எழுதப்பட்டது என்றாலும்.. இன்னும் கொஞ்சம் தமிழ்ப் படுத்தி எழுதியிருக்கலாம் என்பதே என் கருத்து.

இன்னும் இருக்கிறது..