பல்கலைக்கழகங்களில், கல்விப் புதையலை தோண்டச் செல்லும் நம் மாணவர்களின் அன்றாட வாழ்க்கையில் இடம்பெறும் மிகச் சாதாரண விஷயங்களைச் சொல்லி, அவர்கள் செய்யும் சின்னச் சின்னச் செலவுகளில், செலவழிப்பது சில்லரைக் காசுகள் என்றாலும், அதன் பின்னால் ஒளிந்திருக்கும் பெற்றோரின் பெரிய பெரிய தியாகங்களை அழகாகச் சொல்லி இருக்கிறார், கவிஞர். தன்னை ஒரு ஆணாக உருவகப் படுத்தி எழுதியிருந்தாலும், “வானொலி வாங்க கூட்டுப்பணம் பிடித்தபோது”, “அலுக்காமல் அலங்கரித்துக்கொண்ட போது”.. என்ற வரிகளில்.. தன்னையும் அறியாமல், தான் ஒரு பெண் கவி என்பதை காட்டிக்கொடுத்து விடுகிறார். இருந்தாலும், கவிதையின் முடிவில், ஈன்றவளின் (பெற்றோரின்) தியாகத்தை எதார்த்தமாக சொல்லி, சட்டென்று நம்மை நெகிழ வைக்கிறார். கவிதையும் நெஞ்சில் நிற்கிறது.. கணக்கிறது!
முடியாது போடா...!
வெறுமை படரும்
ஹாஸ்டல் அறையில்
வைக்க
வானொலி வாங்க
கூட்டுப் பணம்
பிடித்த போது
தெரியவில்லை...!
பந்தாவுக்காக
நண்பர்கள்
மத்தியில்‘பிளாஞ்சா’
பண்ணும்போதும்
அறியவில்லை...!
காதலிக்காக
கஞ்சத்தனம்
இல்லாமல்
காசை
வாரி இறைத்தபோது
சத்தியமாய்
நினைவில்லை..!
தவறாமல்
சாப்பிட்டபோதும்..
அலுக்காமல்
அலங்கரித்துக்
கொண்ட போதும்...
எண்னவில்லை -
நான்என் வசமில்லை...!
ஒரு மாலைப் பொழுதில்
டாக்சி பயணம்...
‘முடியாது போடா,
நாலு வெள்ளித்தான் தருவேன்’
சீனனுடன்
சண்டை போட்ட
மூதாட்டியைப் பார்த்தவுடன்
பொட்டில் அடித்தது...
டாக்ஸி ஏறினால் பணம் செலவாகும்
என்று
நடந்தே
வீடு வந்து சேறும்
அம்மா!
-செ.ராஜேஸ்வரி
சுங்கைப்பட்டாணி
ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி
No comments:
Post a Comment