தமிழோடு வாழ்பவன்..

My photo
சுபாங் ஜாயா, சிலாங்கூர், Malaysia
மனிதத்தை மதிக்கும் மனிதன்..

Thursday, October 29, 2009

மன இறுக்கம் தீர ஓர் உல்லாசப் பயணம்

இன்றுமுதல் சில நாட்களுக்கு தாய்லாந்தின் பூக்கெட் தீவிற்கு (மனைவியோடுதான்) உல்லாசப் பயணம் செல்கிறேன். சில மாதங்களாக ஏற்பட்ட மன உலைச்சல், அலைச்சல், இழப்புக்களினால் ஏற்பட்ட காயங்கள், சோகம், விரக்தி, வேலைப்பழுவினால் ஏற்பட்ட களைப்பு.. இவற்றை எல்லாம் பூக்கெட் தீவில் இறக்கி விட்டு வர வேண்டும் என்றே செல்கிறேன்.

அடுத்த வாரம் மீண்டும் இந்த வலைப்பதிவில் புதிய பதிவுகள் இட முயற்சிக்கின்றேன்..

"இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க..!"

Tuesday, August 25, 2009

சிறிய இடைவெளி

அன்பு வாசகர்களே..

கடந்த 7.08.2009-இல் எனது ஆருயிர் மாமா, எனது உயிரினும் மேலான சகோதரியின் கணவர், திரு வெங்கடேசன் அவர்கள் சிவபதம் அடைந்ததால்.. எனது இந்த வலைப்பதிவில் தொடர்ந்து இடுகைகள் இடம்பெறாமல் போனது. இன்னமும் மீளாத் துயரத்திலும் அதிர்ச்சியிலும் இருக்கும் நான் சில நாட்கள் கழித்து மீண்டும் எனது 'அத்வைத தாம்பத்யத்தையும்' பிற கவிதைகளையும் தொடர்வேன். நண்பர்கள், வாசகர்கள் அணைவரும் சற்று பொறுமை காப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் மற்ற அலுவலகளை கவனிக்கிறேன்.

கவித்தமிழின் பயணம் விரைவில் தொடரும்..

இக்கண்
K.கிருஷ்ணமூர்த்தி

Tuesday, July 28, 2009

என் தாயாரும் கிரெடிட் கார்டும்!

கிரெடிட் கார்டு (Credit Card) என்பது நமக்கெல்லாம் பரீட்சயம் ஆகும் முன்பே, பாடசாலைப் பக்கமே ஒதுங்காத என் தாயார் மட்டுமல்ல.. இன்னும் எத்தனையோ பேர் இந்த கிரெடிட் கார்டுகளை பயன் படுத்தி இருந்தார்கள். அதிலும், நம்மை எல்லாம் விட நேர்த்தியாகவும், புத்திசாலித்தனமாகவும் வட்டியே இல்லாத கிரெடிட் கார்டுகளை காலங்காலமாக பயன் படுத்தி இருக்கிறார்கள் என்று ஒரு முறை வானொலியில் சொன்னேன்.. உடனே தொலைபேசி அலறத் தொடங்கி விட்டது ஆர்வத்தில்..!

உங்களுக்கு ஏதாவது புரிகிறதா?!

மலேசியத் தோட்டப்புறத்தில் பிறந்தவன் நான். எங்கள் தோட்டங்களில் எல்லாம் ஒரு பழக்கம் இருக்கும். அதாவது, மீன் வியாபாரி, காய்கறி வியாபாரி, பலசரக்குக் கடை வியாபாரிகள் எல்லாம் '555' என்ற எண் பொறித்த (மலாய் மொழியில் Buku Tiga Lima என்று பிரபலம்) புத்தகத்தை வைத்திருப்பார்கள். அந்த புத்தகமோ, இன்றைய கிரெடிட் கார்டு அளவைப் போலத்தான் இருக்கும்.

இவர்களிடம் பொருள் வாங்குபவர்களுக்கு இந்த புத்தகத்தை ஆளுக்கு ஒன்றாக கொடுத்துவிட்டு, அவர்கள் வாங்கும் பொருட்களின் மதிப்பை அந்த புத்தகத்தில் எழுதிவிட்டு, தாங்களும் ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்துக் கொள்வார்கள். இந்த முறை இன்னமும் கூட சில தோட்டங்களில் நடைமுறையில் இருக்கிறது. மாதம் முடிந்ததும், சம்பளத் தேதி முடிந்ததும், வீடு வீடாய் சென்று கணக்கை சரிபார்த்து மொத்தத் தொகையை பெற்ற்றுக் கொள்வார்கள். அல்லது, வாடிக்கையாளர்கள் கடையில் சென்று பணத்தை செலுத்தி விடுவார்கள். பணம் செலுத்தாவிட்டால் அடுத்த மாதத்திற்கு உண்டான பொருட்களை வாங்க முடியாது.

இந்த '555' நோட்டுப் புத்தகத்தைத் தான் நான் கிரெடிட் கார்டு என்று சொன்னேன் அன்று. இதில் வசதி என்னவென்றால், மாத பாக்கியை தாமதமாக தந்தாலும் கிரெடிட் கார்டு போல் வட்டி இல்லை! பல வியாபாரிகள் பொருட்களை நமது வசிப்பிடத்திற்கே கொண்டு வந்து அத்தியாவசியப் பொருட்களை வினியோகிப்பதும், பணத்தை நம்மைத் தேடி வந்து பெற்றுக் கொள்வதும்தான் இதன் தனிப் பெரும் சிறப்பு. இது இப்போதுள்ள கிரெடிட் கார்டில் சாத்தியமா?

அந்த காலத்தில், ஒருவரின் நன்னடத்தை, வாக்குச் சுத்தம் போன்றவற்றை கொண்டு அவர்களுக்கு எவ்வளவு கடன் தரலாம் என்று நிர்ணயித்தனர். அதனால், பிரச்சனைகள் குறைவாக இருந்தன. இன்று..?! கிரெடிட் கார்டினால் உலக அளவில் பிரச்சனைகள்!!!

மீண்டும் சொல்கிறேன், நாம் எவ்வளவு தான் நவீனமானாலும்.. நம் முன்னோர்கள் நம்மைவிட புத்திசாலிகள்..! என் தாயார் என்னைவிட புத்திசாலியான கிரெடிட் கார்டு பயனீட்டாளர்..!!!!

K. கிருஷ்ணமூர்த்தி

Sunday, July 19, 2009

இப்படியும் செய்யலாம்..!

நமது வாழ்க்கை முறை நாளுக்கு நாள், சுறுசுறுப்பாகிக் கொண்டே போகின்றது. ஆனால், நாமோ, நாளுக்கு நாள் சோம்பலாகிக் கொண்டே போகின்றோம்.. உதாரணத்திற்கு, remote control இல்லாமல் நம்மால் படம் பார்க்க முடிகிறதா?! remote control கானாமல் போய் விட்டால் ஒரு கையே காணாமல் போனது போலாகிவிடும்! இல்லையா?

நாம் சின்ன சின்ன வேலைகளை செய்யும் பொழுது கூட நமது உடலில் இருக்கும் calories அளவு குறைகின்றது! இதனால் ஓரளவு நமது உடல் எடையை நம்மால் கட்டுப்படுத்த முடிகிறது..

ஒரு அரை மணி நேரம் வீட்டில் தூசு தட்டிக்கொண்டிருந்தாலே.. நாம் உடலிலுள்ள 50 கலரிக்கள் எரிந்துவிடும். அது மட்டுமல்ல, இது 10 நிமிடங்கள் மெது நடனமாடுவதற்கு சமம்.

அரை மணி நேரம் துணிகளை, கைகளை மாற்றி மாற்றி ஐயர்ன் செய்வது, 11 நிமிடங்கள் aerobics செய்வடற்கு சமம். இதனால் 70 கலரிக்கள் எரிகின்றன.

அரை மணி நேரம் ஜன்னலை துடைப்பதால், 125 கலரிக்கள் குறைகின்றன.

படுக்கை அறையை தட்டி சுத்தம் செய்வதால், 130 கலரிக்கள் எரிந்து போகின்றன. இது 12 நிமிட மெதுவோட்டத்திற்ற்கு அதாவது, jogging செய்வதற்குச் சமம்.

விடுமுறை நாட்களில், அரை மணி நேரம் காரை கழுவினால், அது 143 கலரிக்களை எரிக்கிறது. இது, வயிற்றுப்பகுதிக்கு நல்லதொரு உடற்பயிற்சி.

அரை மணி நேரம், நாம் குளிக்கும் அறையை தேய்த்து கழுவுவதால், 200 கலரிக்கள் குறைகின்றன. இது ஒரு 45 நிமிடங்கள் நடனப்பயிற்சிக்கு சமம்.

மாடிப்படிக்கட்டுகளில், அரை மணி நேரம் ஏறி இறங்கி வந்தால், 285 கலரிக்கள் குறைகின்றனவாம். இது இருதயத்துக்கு நல்ல உடற்பயிற்சி. 19 நிமிடங்கள் வேகமாக ஸ்கிப்பிங் செய்வதற்கு சமம் இது!

இதனால்தான், நமது முன்னோர்களும் பெற்றோர்களும், நமது வேலைகளை நம்மையே செய்ய சொல்கின்றனர் போல் தெரிகிறது. இதனால் நமக்கு உடல் சோர்வு குறைந்து சுறுசுறுப்பு வருகிறது, பொறுப்புணர்ச்சி வருகின்றது.. உடலும் ஆரோக்கியமாக இருக்கின்றது! எல்லாம் சரி.. இன்று உங்கள் படுக்கையை யார் சுத்தம் செய்தது?!

Monday, July 6, 2009

இன்னும் ஒரு முறை..

அது ஒரு கோடைக் காலம். நிலம் வரண்டு போயிருந்ததால், விவசாயி ஒருவன் மிகுந்த கவலை கொண்டான்.. பயிர்கள் வாடிவிடும் என்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் கலங்கினான்.. அப்போது அந்த ஊருக்கு ஒரு துறவி வந்தார். அவரிடம் விவசாயி யோசனை கேட்க சென்றான். துறவியோ நிஷ்டையில் இருந்தார். அவரை தொந்தரவு செய்ய மனமில்லாமல் விவசாயி காத்திருந்தான்.

துறவி கண் முழித்தார். விவசாயி வணங்கினான். துறவி ஆச்சர்யத்தோடு அவனைப் பார்த்துவிட்டு என்ன விஷயம் என்று வினவினார். அதற்கு விவசாயி, "சுவாமி, தாங்கள் முற்றும் உணர்ந்தவர். இந்த கோடைக்காலத்தில் நதியெல்லாம் வரண்டு விட்டது. எனது பயிர்களுக்கும் எனக்கும் நீர் இல்லாமல் தவிக்கிறேன். நீங்கள்தான் எனக்கு உதவி செய்ய வேண்டும்..", என்றான்.

அதற்கு துறவி, "இந்த லோகத்தில், எல்லாம் இருக்கிறது.. உன் தோட்டத்திலேயே தண்ணீரும் இருக்கிறது. கிணறு தோண்டினால், தண்ணீர் கிடைக்கும்..", என்று கூறிவிட்டு மீண்டும் கண் மூடி நிஷ்டையில் ஆழ்ந்தார்.

மகிழ்ந்த விவசாயி.. தன் தோட்டத்திற்குச் சென்று தோண்ட ஆரம்பித்தான். முதல் நாள் பத்து அடி ஆழம் தோண்டினான். தண்ணீர் வரவில்லை. மறுநாள், இன்னும் ஐந்தடி தோண்டினான்.. அப்போதும் தண்ணீர் வரவில்லை..! வாட்டமடைந்த விவசாயி, மீண்டும் துறவியிடம் சென்றான்.

"சுவாமி, தாங்கள் சொன்னது போல் தோண்டிப் பார்த்தேன்.. நீர் வரவில்லை!", என்றான். அதற்கு துறவி, " முயற்சியையும் நம்பிக்கையும் கைவிடாதே.. தொடர்ந்து தோண்டு.. தண்ணீர் வரும்.." என்றார்.

தோட்டத்திற்கு வந்த விவசாயி, மீண்டும் தோண்டினான்.. இருபது அடி.. முப்பது அடி.. நாற்பது அடி.. தோண்டித் தோண்டி களைத்துப் போன விவசாயி, நம்பிக்கை இழந்துவிட்டான். இனி துறவியின் பேச்சை நம்பி புண்ணியமில்லை என்று எண்ணி அந்த தோட்டத்தை விட்டுவிட்டு சென்று விட்டான்.

சில நாட்கள் கழித்து, அந்தப் பக்கமாக வந்த வழிப்போக்கன் ஒருவன், அந்த தோட்டத்தை பார்த்தான். ஆளே இல்லாமல் வாடி இருந்த தோட்டத்தையும்.. தோண்டப்பட்ட கிணறையும் பார்த்துவிட்டு.. நடந்தவற்றை யூகித்துக் கொண்டான். நம்பிக்கையோடு அந்த குழியில் இறங்கி தோண்ட ஆரம்பித்தான்.. ஐந்தடி ஆழம் தொடர்ந்து தோண்டியதும்.. தண்ணீர் வரும் அறிகுறி தெரிந்தது! மகிழ்சியில் துள்ளிக் குதித்தான்...!

இந்தக் கதையின் சாரம்: முயற்சி என்பதே நம்பிக்கையின் அடிப்படையில் செய்யப் படுவதுதான். நம்பிக்கை இழந்துவிட்டால், முயற்சி பலன் அளிக்காது! எடுத்த காரியம் வெற்றி அடையும் வரை தொடர்ந்து ஒரே சிந்தனையில் முயன்றால், நினைத்த காரியம் கைகூடும்! அத்தனை அடிகள் ஆழம் தோண்டிய அந்த விவசாயிக்கு.. இன்னும் ஐந்து அடிகள் தோண்டும் பொறுமை இருந்திருந்தால்!

Sunday, June 21, 2009

எல்லா நோய்களுக்கும் ஒரே மருத்துவம்..

எல்லா நோய்களுக்கும் ஒரே மருத்துவம்.. எண்ணெய் மருத்துவம்!

ஆச்சரியம், ஆனால் உண்மை! கிட்டத்தட்ட நம் உடலில் ஏற்படக்கூடிய எல்லாவிதமான நோய்களுக்கும் ஓர் எளிய, பாதுகாப்பான, மலிவான மருத்துவ முறை ஒன்று உண்டு என்றால், வியாக்காமல் என்ன செய்வது?

தும்மல், சளி, களைப்பு, தூக்கமின்மை, மூட்டு வலி, வாயுத்தொல்லை, ஒவ்வாமை (அலர்ஜி), தலைவலி, ஒற்றைத் தலைவலி, முழங்கால் வலி, ஆஸ்துமா, புற்று நோய், இதய நோய், பார்க்கின்சன் நோய்கள், பல் மற்றும் வாய் சம்பந்தமான நோய்கள், கண் காது மூக்கு சம்பந்தமான நோய்கள், வயிறு குடல் நோய்கள், மலச்சிக்கல், மூலம், இரத்த அழுத்தம், கல்லீரல், நுரையீரல் நோய்கள், பக்க வாதம், நரம்பு சம்பந்தமான நோய்கள், வெரிகோஸ் வெயின்ஸ், வலிப்பு, வாயுத்தொல்லை, மாதவிடாய் தொல்லைகள், மார்பக நோய்கள், கருப்பை தொடர்பான நோய்கள், முகப்பருக்கள், படை இப்படி எண்ணிலடங்கா நோய்களுக்கும் தொல்லைகளுக்கும் மிக எளிமையான மருத்துவக் கோட்பாடு ஒன்றினை மனித குலத்துக்கு தந்துள்ளனர் நம் முன்னோர்கள். அதையே அறிவியல் முறைப்படி ஆய்வு நடத்தி மெய்ப்பித்துக் காட்டினார் அந்நாளைய சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த அறிஞர், டாக்டர் மெத்கராஷ் என்பவர்.

அன்று, அவர் விளக்கியது ‘ஆயில் புல்லிங்’ (Oil Pulling) எண்ணும் மருத்துவம். இதனைத் தமிழில் எண்ணெய் மருத்துவம் என்று கொள்ளலாம்.

அதாவது, தூய்மை செய்யப்பட்ட நல்லெண்ணெயோ, ஓலிவ் எண்ணெயையோ, வேர்க்கடலை அல்லது சூரியகாந்தி எண்ணெயையோ, இரண்டு தேக்கரண்டி (10 மில்லி லிட்டர்) வாயில் விட்டு, அமைதியாக, ஓய்வாக அதனை வாயில் சப்பியவாறு, வாய் முழுவதும் பரந்து திரியும்படி கொப்பளியுங்கள். பற்களின் இடைவெளிகளுக்கிடையே ஊடுருவிச் செல்லுமாறும் கொப்பளியுங்கள். ஆனால் விழுங்கி விடாதீர்கள்!

இப்படியே தொடர்ந்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை கொப்பளியுங்கள். முதலில் வாய் முழுவதும் வழு வழுவென்று எண்ணெயின் தன்மை இருக்கும். ஆனால், சில நிமிடங்களில் அந்த தன்மை மாறி வாயினுள் எளிதாக நகரும். 15-20 நிமிடங்களில் எண்ணெயில் தன்மை முற்றாக நீர்த்துப்போய், நுரைத்து, வெண்மையாகிவிடும். அப்போது அதனை உமிழ்ந்து விடுங்கள். உமிந்த திரவம் வெள்ளையாக இல்லாது மஞ்சளாக இருந்தால், இன்னும் கொஞ்ச நேரம் கொப்பளிக்க வேண்டும் என்று அர்த்தம். அப்படி உமிழ்ந்ததும் வாயைக் கழுவி நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். இதனால், உங்கள் உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய கிருமிகள் எல்லாம் நீங்கள் உமிழ்ந்த நீர்மத்தில் முழுமையாக வெளியேற்றப் படுகின்றன.

இந்த எளிய எண்ணெய் மருத்துவத்தைச் செய்வதற்கு விடியற்காலை நேரமே சிறந்தது. காலையில் 6.30 மணிக்கெல்லாம் எழுந்து, வெறும் வயிற்றில், பல் துலக்கிய உடன் செய்தல் நலம். விரைவில் நிவாரணம் வேண்டுவோர், நாளொன்றுக்கு மூன்று முறை செய்யலாம். ஆனால், வெற்று வயிற்றுடன் தான் இதைச் செய்ய வேண்டுமென்பது விதி.

இந்த மருத்துவத்தைச் செய்யும் போது ஒவ்வாமையால் இருமல் ஏற்பட்டால், உடனே எண்ணெயையாவது அல்லது Brand-ஐயாவது மாற்றிவிடுங்கள். இதைச் செய்யும் பொழுது தவறுதலாக அதனை விழுங்கி விட்டாலும் பயப்பட வேண்டாம். வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி தவிர வேறொன்றும் நேராது!

இந்த மருத்துவத்தை, கொப்பளிக்க முடிந்த எவரும், எந்த வயதினரும் செய்யலாம். இதற்கு எந்த வித பத்தியமோ உணவுக் கட்டுப்பாடோ கிடையாது. எதாவது நோய் நிமித்தம் மாத்திரைகளை உட்கொள்பவராக இருந்தாலும் கவலை இல்லை. நீங்கள் அந்த மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்ளலாம். நோயின் தன்மை குறைந்தால், மருந்தின் அளவையும் மருத்துவரின் ஆலோசனையோடு குறைத்துக் கொள்ளலாம்.

இந்த மருத்துவத்தை செய்ய ஆரம்பித்ததும், சிலருக்கு, நோயின் தன்மை சற்று அதிகரித்து பின்னர் குறைகிறது. இது, நெடுநாளாய் வாட்டும் நோய் குணமாகப் போகிறது என்பதின் அறிகுறி. அணையப் போகும் நெருப்பு சுடர் விட்டு கொஞ்ச நேரம் எரியுமல்லவா..? அதுபோலத்தான்.

சரி.. இப்படி செய்வதால் எப்படி எல்லா நோய்களும் குணமாகும் என்று கேட்கிறீர்களா? அதற்கு சரியான விளக்கமும் அறிவியல் ரீதியில் தரப்படுகிறது. அதாவது, பல்வகையான நுண்ணுயிரிகளுக்கும், கிருமிகளுக்கும் நமது வாய்தான் நாற்றங்காலாகி நமக்கு தீமை செய்கிறது. இந்த எண்ணெய் கொப்பளிப்பு, அத்தகைய தீய, கொடிய கிருமிகளையும் நுண்ணுயிரிகளையும் அழித்து mucus membrane மூலமாக உடலில் நஞ்சு கலந்த வேதியல் பொருட்களை வெளியேற்றுகிறது. இதனால் நமது உடலின் Metabolism புத்துணர்வு பெற்று நாள்தோறும் நலத்துடன் மிளிர்கிறது.

இந்த எளிய வைத்திய முறையை பின் பற்றுவதோடு, தூய காற்றை சுவாசித்து, நிறைய நீர் பருகி, அளவான சுகாதாரமான உணவுகளை உட்கொண்டு நல்ல முறையில் உடற்பயிற்சி செய்து வந்தால், அந்நாளில் முண்ணோர்கள் சொன்ன நோயற்ற வாழ்வு வாழலாம்.

சுபம்

K.கிருஷ்ணமூர்த்தி

(மூலம்: ‘எண்ணெய் மருத்துவம்’ எனும் புத்தகம்)

Tuesday, June 16, 2009

யார் குற்றவாளி..?! (பகுதி 9 & 10)

காட்சி: 9.

நடிகர்கள் 1. இன்ஸ்பெக்டர் அர்ஜுன் 2. கான்ஸ்டபிள் காசி 3. ராதா
4. மரகதம் 5. ஷங்கர்


(ஷங்கர் பெட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பும் நேரம், மரகதம் அங்கே வருகிறாள்)

மரகதம் : என்னப்பா ஷங்கர்.. பெட்டி படுக்கை எல்லாம் எடுத்துகிட்டு எங்க கிளம்பிட்டே?

ராதா : அத்தை.. நீங்க எப்போ வந்தீங்க?

மரகதம் : இது.. என் மகன் வீடு.. இங்க நான் எப்போ வேணும்னாலும் வருவேன்.. ஏன்.. தப்பான நேரத்தில வந்திட்டேன்னு சங்கடமா இருக்கா?

ஷங்கர் : அண்ட்டி.. ஏன் அண்ட்டி என்னென்னமோ பேசறிங்க.. ரகுனாத் சார்தான் தப்பா புரிஞ்சிக்கிட்டு போய் சேர்ந்திட்டாரு..

மரகதம் : சேர வச்சிட்டிங்க.. பண்றதையெல்லாம் ஒன்னா சேர்ந்து பண்ணிட்டு.. இப்போ ஒன்னும் தெரியாதவங்க மாதிரி டிராமா பண்றிங்க.. உங்களை நான் சும்மா விட மாட்டேன்..

ராதா : உங்களுக்கு நான் என்ன சொல்லி புரிய வைப்பேனோ தெரியலை! நான் பண்ண ஒரே தப்பு.. உங்க மகன் எனக்கு பண்ண கொடுமையை எல்லாம் யாருகிட்டயும் சொல்லாம மறைச்சதுதான்..

மரகதம் : சரிதான் நிறுத்துடி! சாட்சி சொல்ல என் மகன் இல்லைன்னு.. புதுசா இப்படி கதையா? எத்தனை நாளைக்கு இப்படி நடிப்பிங்க.. உண்மை ஒரு நாள் வெளிய வரத்தான் போகுது..

(அர்ஜுனும் காசியும் அங்கே வருகின்றனர்)காசி : அந்த ஒரு நாள்.. இன்னைக்குத்தான்.. எங்க ஐய்யா எல்லாத்தையும் கண்டு பிடிச்சிட்டாரு!

மரகதம் : நல்ல வேளை வந்தீங்க.. நீங்க வர்றதுக்குள்ளே ஓடிரலாம்னு பெட்டி எல்லாம் எடுத்துக்கிட்டு கிளம்பிட்டாரு.. ஷங்கர்..

அர்ஜுன் : எனக்கு எல்லாம் தெரியும்.. ராதா.. ஷங்கர்.. ரெண்டு பேரும் என் கூட போலீஸ் ஸ்டேஷனுக்கு வாங்க..

ராதா : நாங்க எதுக்கு வரனும்..? இதுல எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை..

அர்ஜுன் : எதுவா இருந்தாலும்.. ஸ்டேஷன்ல பேசிக்கலாம்.. இப்ப கிளம்புங்க..

மரகதம் : கடவுள் கண்ணை திறந்திட்டாருடி.. நீ பண்ண காரியத்துக்கு..

அர்ஜுன் : (குறுக்கே பேசுகிறார்) அண்ட்டி.. நீங்களும்தான்.. எங்க கூட வாங்க..

மரகதம் : நானா? எதுக்கு? என் மகன் ராஜன் இல்லாம நான் வரமாட்டேன்..

அர்ஜுன் : அவரும் அங்கதான் வந்துகிட்டு இருக்காரு.. வாங்க..காட்சி: 10.

நடிகர்கள் 1. இன்ஸ்பெக்டர் அர்ஜுன் 2. கான்ஸ்டபிள் காசி 3. ராதா
4. மரகதம் 5. ஷங்கர் 6. பாலன் 7. ராஜன்


(அனைவரும் காவல் நிலையம் வருகின்றனர். அங்கே பாலனும் ராஜனும் இருக்கின்றனர்)

ராதா : பாலன்.. நீங்க என்ன பண்றிங்க இங்கே?

பாலன் : என்னை மண்ணிச்சிரு ராதா.. நான் எல்லாத்தையும் சொல்லிட்டேன்..

ராதா : என்ன உளர்றிங்க..

பாலன் : நீ அன்னைக்கு சொன்னதை.. இன்ஸ்பெக்டருகிட்ட சொல்லிட்டேன்..

ராதா : அது நான் ஏதோ ஆத்திரத்தில பேசனது.. அதுக்குன்னு நானே கொலை பண்ணதா ஆயிடுமா? என்னை யாரும் நம்ப மாட்டீங்களா?

அர்ஜுன் : ராதா.. மிஸ்டர் பாலன் கொடுத்த வாக்குமூலத்தின் படி.. மிஸ்டர் ரகுனாத் கொலை சம்பந்தமா.. உங்களை அரெஸ்ட் பண்றோம்..

ராதா : இன்ஸ்பெக்டர்.. ப்ளீஸ்.. என்னை நம்புங்க.. அவரை நான் கொலை பண்ணலை!

மரகதம் : எந்த கொலைகாரந்தான் தான் கொலை பண்ணதை ஒத்துக்குவான்..

அர்ஜுன் : இல்லைங்க ராதா.. இங்க இருக்கிற எல்லாரையும் விட.. மிஸ்டர் ரகுனாத்தோட சாவில உங்களுக்குத்தான் அதிக தொடர்பு இருக்கு.. மிஸ்டர் ரகுநாத் கவிதா என்ற பொண்ணு கூட தொடர்பு வைச்சிருக்கிறதா நீங்க தப்பா நினைச்சி.. அவசரப் பட்டிருக்கீங்க.. ரெண்டாவது.. அவரு உங்களையும் ஷங்கரையும் தப்பா பேசறதை உங்களால பொறுத்துக்க முடியலை.. அந்த கோவம் வேற.. மூனாவது.. ரகுநாத்.. மத்தவங்களுக்கு ஒரு நல்ல மனுஷனா இருந்திருந்தாலும்.. உங்களை கொடுமை படுத்தி இருக்காரு.. அதுல ஏற்பட்ட விரக்தி.. இது எல்லாம் சேர்ந்து உங்களைதான் குற்றவாளியா காட்டுது.. நிச்சயமா இந்த கொலையை நீங்கதான் பண்ணி இருக்கனும்!

(ராஜன் அங்கே வருகிறான்)

ராஜன் : இல்லை! எங்க அண்ணி இந்த கொலையை செய்யலை!

மரகதம் : டேய்.. என்னடா நீ? திடீர்னு வந்து என்னத்தை உளர்றே?!

ராஜன் : நீங்க சும்மா இருங்கம்மா..

அர்ஜுன் : அதெப்படி ராஜன்.. அவுங்க பண்ணலைன்னு இவ்ளோ உறுதியா சொல்றிங்க? எல்லாரும் அவுங்களைதான் குற்றவாளியா காட்டுறங்க.. எல்லா சாட்சியும் அவங்களுக்கு எதிரா இருக்கு.. கொலை பண்ண இடத்திலை அவுங்கதான் இருந்திருக்காங்க..

ராஜன் : ஐய்யோ.. அவுங்க அந்த இடத்தில இல்லை..

அர்ஜுன் : அப்படின்னா..? நீங்க இருந்திங்களா?!

(EFX: Music..)

அர்ஜுன் : சொல்லுங்க ராஜன்.. என்ன நடந்திச்சி?

ராஜன் : ஆமாம்.. அன்னைக்கு நாந்தான் இருந்தேன்.. எங்க அண்ணன் என்னை வரச் சொல்லி இருந்தாரு.. அவரை பார்க்கிறதுக்காக போனேன்.. அங்க, அவரு எங்க அண்ணியை பத்தி தப்பா சொல்லி என்னை அவங்களை கண்காணிக்க சொன்னாரு! அது எனக்கு கோவத்தை மூட்டுச்சி..

எங்க அண்ணியைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும்.. எவ்ளோ எடுத்து சொன்னேன்.. எங்க அண்ணன் கேட்கலை.. எங்களுக்குள்ளே வாக்குவாதம் முத்தி போச்சி.. அவரை ஆத்திரத்தில தள்ளி விட்டுட்டு.. நான் போயிட்டேன்.. அவ்வளவுதான் எனக்கு தெரியும்..

அர்ஜுன் : மீதியை நான் சொல்றேன்.. கீழே விழுந்த உங்க அண்ணனுக்கு.. தலையில அடி பட்டிருச்சி.. அதோட அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருச்சி.. post mortem ரிப்போர்ட் படி.. அவரோட சாவுக்கு காரணம்.. மாரடைப்புத்தான்.. நீங்க யாரும் அவரை கொலை பண்ணலை!

ஷங்கர் : அப்புறம் ஏன் எங்களை எல்லாம் கூட்டிகிட்டு வந்து தொல்லை பண்ணிங்க..

அர்ஜுன் : கோவிச்சிக்காதிங்க.. அதுக்கு பல காரணங்கள் இருக்கு..

முதலாவது.. ராதா மேல அவுங்க மாமியாருக்கு இருந்த சந்தேகத்தை போக்கனும்..

ரெண்டாவது.. ரகுநாத்துக்கும் கவிதாவுக்கும் இருந்தது கள்ளத்தொடர்பு இல்லேன்னு தெளிவு படுத்தனும்..

மூனாவது.. இன்சூரன்ஸ் பணத்துக்காக ராதாதான் கொலை பண்ணிட்டாங்கன்னு பாலனும் நினைச்சிக்கிட்டு இருக்காரு.. அது அப்படி இல்லைன்னு தெளிவு படுத்தனும்..

கடைசியா.. அன்னைக்கு அவருகூட சண்டை போட்டது யாருன்னு எனக்கு புரியாமலேயே இருந்திச்சி.. அதையும் தெரிஞ்சிக்கனும்.. இந்த எல்லா குழப்பத்துக்கும் விடை காணத்தான்.. ராதாவை குற்றவாளின்னு சொன்னேன்.. அதுக்கு நீங்க எல்லாரும் என்னை மன்னிச்சிருங்க..

மாமியார் : அம்மாடி ராதா.. என்னையும் மன்னிச்சிரும்மா..

ராதா : யாரும் யாரையும் மன்னிக்க வேணாம் அத்தை.. நடந்ததையெல்லாம் மறந்திட்டு.. இனிமேலயாவது சந்தோஷமா இருப்போம்.. வாங்க எல்லாரும் நம்ம வீட்டுக்கு போகலாம்..

காசி : கிள்ளாடி சார் நீங்க.. எல்லாத்தையும் தெரிஞ்சிகிட்டு என் கிட்ட கூட சொல்லாம மறைச்சிட்டிங்களே சார்.. குற்றவாளி யாருன்னு கேட்டு கேட்டு என் பொண்டாட்டி என்னை தூங்கவே விடலை சார்!

(அனைவரும் சிரிக்கின்றனர்)

..சுபம்..

Monday, June 15, 2009

யார் குற்றவாளி..? (பகுதி 7 & 8)

காட்சி: 7.

நடிகர்கள் 1. ராதா 2. ஷங்கர்

(ஷங்கர் வீட்டிற்கு வருகிறான்..)

ராதா : வா ஷங்கர்..

ஷங்கர் : என்ன ராதா.. என்னென்னமோ கேள்விப்பட்டேன்.. ஒரு வாரம் நான் ஊர்ல இல்லை.. அதுக்குள்ளே என்னென்னமோ நடந்திருச்சே..

ராதா : நடந்தது என்னவோ நடந்திருச்சி.. ஆனா எல்லாரு சந்தேகமும் என் மேல இல்லை விழுந்திருக்கு.. என்னை மாட்டிவிட என் மாமியாரு மட்டும் போதும் போல இருக்கு!

ஷங்கர் : அவரு உனக்கு பண்ண கொடுமைக்கு.. கடவுளா பார்த்து கொடுத்த தண்டனைன்னு எடுத்துக்க வேண்டியதுதான்..

ராதா : எதுக்கும் நீ கொஞ்சம் ஜாக்கிரதையா இரு.. போலீஸ்காரங்க எந்த நேரத்திலயும் உன்னை வந்து விசாரிக்கலாம்!

ஷங்கர் : அதெல்லாம் காலையிலயே வந்துட்டாங்க..

ராதா : வந்தாங்களா? என்ன கேட்டாங்க?

ஷங்கர் : வேற என்ன கேப்பாங்க.. உன் மாமியாருதான் உனக்கும் எனக்கும் தொடர்பு இருக்குன்னு வாய்க்கூசாம சொல்லி வைச்சிருக்காங்களே!

ராதா : அது அவுங்க தப்பில்லே! இந்த மனுசன் சாகரதுக்கு முன்னாடி அவுங்ககிட்ட அப்படி சொல்லி அழுது இருக்காரு! அதனாலதான் இந்த கொலைக்கும் எனக்கும் தொடர்பு இருக்குன்னு அவுங்க நினைக்கிறாங்க..
நல்ல வேளை.. நீ ஊர்ல இல்லாம இருந்தே.. இல்லேன்னா.. இன்னேரம் உன்னை தூக்கி உள்ளே வைச்சிருப்பாங்க..

ஷங்கர் : கூடிய சீக்கிரத்தில வைச்சிருவாங்கன்னு நினைக்கிறேன்..

ராதா : என்ன ஷங்கர்? ஏன் அப்படி சொல்றீங்க?

ஷங்கர் : ராதா.. உண்மையை சொல்லு.. என்ன நடந்திச்சி?

ராதா : ஷங்கர்? நீங்களுமா என்னை சந்தேகப் படறிங்க?

ஷங்கர் : எனக்கு வேற வழி தெரியலை.. என்னை நான் காப்பாத்தி ஆகனும்.. என்ன நடந்திச்சின்னு தெரிஞ்சாகனும்.. ராதா : ஹ¤ம்.. அவரை கொன்னது யாருன்னு தெரிஞ்சா.. அவங்களுக்கு ஆறடிக்கு ஒரு மாலையை வாங்கிப் போடுவேன்.. என்னை இந்த கொஞ்ச நாளா எப்படி எல்லாம் சித்ரவதை செஞ்சாரு தெரியுமா? உனக்கும் எனக்கும் தொடர்பு இருக்குன்னு சொல்லி.. எத்தனை நாள் என்னை கொடுமை படுத்தினாருன்னு தெரியுமா?!

ஷங்கர் : நீ செய்யலைன்னா.. வேற யாரு? அவருக்கு பிஸினஸ்ல எதிரிங்க யாராவது?

ராதா : அவரோட பிஸினசை பத்தி நான் கேட்டதே இல்லை.. அவரும் என்கிட்ட எதையும் சொன்னதில்லை... இதைச் சொன்னா.. போலீஸ்காரங்க என்னை ஒரு மாதிரியா பார்க்கிறாங்க! எனக்கு தெரிஞ்சு.. அவருக்கு இருந்த ஒரே தொடர்பு.. அந்த கவிதா தான்.. அதைப் பத்தி கேக்க போயிதான் எங்களுக்குள்ளே இவ்வளவு விரிசல் ஏற்பட்டுச்சி!

ஷங்கர் : இன்னேரம் அவளையும் விசாரிச்சிருப்பாங்க..?

ராதா : என்ன சொல்றிங்க? உங்களையும் என்னையும் தவிர.. இந்த விஷயம் வேற யாருக்கும் தெரியாது.. போலீஸ்காரங்க கேட்டப்போ கூட நான் சொல்லலையே!

ஷங்கர் : நான் சொல்லீட்டேன்..

ராதா : சொல்லீட்டிங்களா?! தப்பு பண்னீட்டிங்க ஷங்கர்.. தப்பு பண்ணீட்டிங்க!

ஷங்கர் : என்னை காப்பாத்திக்க எனக்கு வேற வழி தெரியலை! அதான் பயத்தில ஏதோ உளறி கொட்டீட்டேன்..

ராதா : ஐய்யோ! அதனால நமக்கு நன்மை எதுவும் இல்லை! அந்த கவிதாவை விசாரிச்சா.. அப்புறம் போலீஸ்காரங்க கவனமெல்லாம் மறுபடியும் என் பக்கம்தான் திரும்பும்!

ஷங்கர் : என்ன சொல்ற ராதா? எனக்கு ஒன்னுமே புரியலை!ராதா : ஷங்கர்.. உங்க கவிதா எதுக்காக என் புருஷனை கொல்லனும்? அதனால அவளுக்கு என்ன லாபம்? அவரு இருக்கிற வரைக்கும் அவளுக்கு பணம் கொடுத்து உதவினாரு.. இறந்திட்டா? அவளுக்கு என்ன பங்கா கிடைக்கப் போவுது? எந்த லாபமும் இல்லாம.. எதுக்கு அவ அவரை கொல்லப் போறா? அதனாலதான் அவளைப்பத்தி நான் வாயே திறக்கலை.. தங்க முட்டை இடுர வாத்தை யாராவது அறுப்பாங்களா?

ராதா : சரி சரி.. இனி நீ இங்க தங்கினா ரெண்டு பேருக்கும் ஆபத்து.. முதல்ல இடத்தை காலி பண்ணு!காட்சி: 8.

நடிகர்கள் 1. இன்ஸ்பெக்டர் அர்ஜுன் 2. கான்ஸ்டபிள் காசி

(காசி பேப்பரில் சில பெயர்களை எழுதி சுருட்டி எடுத்து வருகிறான்..)

காசி : சார்.. இதில ஒரு சீட்டை எடுங்க சார்!

அர்ஜுன் : என்னையா இது?

காசி : முடியலை சார்.. இதுக்கு மேலயும் இந்த கேஸ¤க்காக என்னால அலைய முடியலை சார்.. அதான் எல்லாரு பேரையும் எழுதி எடுத்துகிட்டு வந்திருக்கேன்.. நீங்க யாரு பேரை எடுக்கிறிங்களோ.. அவுங்க மேல கேஸை போட்டு உள்ளே தூக்கி போட்டுரலாம் சார்..

அர்ஜுன் : ஏன்.. அதையும் நீயே எடுக்க வேண்டியதுதானே!

காசி : ஹிஹி.. எடுத்துப் பார்த்தேன்.. செத்துப்போன ரகுனாத் பெயர் வந்திச்சி சார்.. அதான் கடுப்பாயி உங்க கிட்ட எடுத்திட்டு வந்தேன்..

அர்ஜுன் : நீ எதைத்தான் உருப்படியா செய்யிற..

காசி : அப்படின்னா.. நீங்க கண்டுபிடிக்க வேண்டியதுதானே சார்..

அர்ஜுன் : கண்டு பிடிச்சாச்சி..

காசி : எது.. கண்டு பிடிச்சாச்சா? யாரு சார்?

அர்ஜுன் : சொல்றேன் வா.. முதல்ல ராதா வீட்டுக்கு போவோம்..

காசி : அது வரைக்கும் தாங்காது சார்..

(தொடரும்..)

Thursday, June 11, 2009

யார் குற்றவாளி..?? (பகுதி 5 & 6)

காட்சி: 5.

நடிகர்கள் 1. இன்ஸ்பெக்டர் அர்ஜுன் 2. கான்ஸ்டபிள் காசி 3. ஷங்கர்

( இன்ஸ்பெக்டர் அர்ஜுன் காசியுடன் ஷங்கரின் அலுவலகத்திற்கு செல்கின்றனர்.)
(EFX : knock.. knock..)

அர்ஜுன் : மிஸ்டர் ஷங்கர்..

ஷங்கர் : ஆமாம்.. நீங்க..

காசி : சார்தான் இன்ஸ்பெக்டர் அர்ஜுன்.. நீங்க தங்கி இருக்கிற வீட்டுக்கு சொந்தக்காரர்..

மிஸ்டர் ரகுனாத்.. கொலை செய்யப் பட்டிருக்காரு.. தெரியுமா? அந்த கேஸை சார்கிட்டதான் கொடுத்திருக்காங்க..

ஷங்கர் : (ஆச்சரியமாக) கொலை செய்யப் பட்டாரா?

காசி : ஆமாம்.. எதுவுமே தெரியாத மாதிரி கேக்குறிங்க.. நீங்க அங்க தான தங்கி இருக்கிறிங்க?

அர்ஜுன் : மிஸ்டர் ஷங்கர்.. கடந்த வெள்ளிக்கிழமை சாயந்திரம் 3.00 மணியில இருந்து 5.00 மணி வரைக்கும் எங்க இருந்திங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?

ஷங்கர் : இன்ஸ்பெக்டர்.. நான் என் ஆபீஸ் விசயமா ஜோகூர் பாருவுக்கு போயிட்டு இன்னைக்கு காலையிலதான் திரும்பி வந்தேன்.. வீட்டுக்கு போகக் கூட நேரம் இல்லாம நேரா வேலைக்கு வந்திட்டேன்..

அர்ஜுன் : ம்ம்.. அப்போ.. இங்கே நடந்தது எதுவுமே உங்களுக்கு தெரியாதுன்னு சொல்றீங்க?
ஷங்கர் : நிச்சயமா தெரியாது..

அர்ஜுன் : ம்ம்.. சரி.. JB-யில எந்த ஹோட்டல்ல தங்கி இருந்திங்க? ரசீது இருக்கா..
ஷங்கர் : அது.. வந்து..

காசி : அதான் இவ்ளோ தூரம் வந்திட்டிங்களே.. முதல்ல ரசீதை காட்டுங்க..

ஷங்கர் : நான் ஹோட்டல்ல தங்கி இருக்கலை.. என்னோட நண்பர் ஒருத்தரோட வீட்டில தங்கி இருந்தேன்..

காசி : கவனிச்சிங்களா.. நண்பராம்! ஆம்பிளை நண்பரா...? இல்லை.. ஹஹஹ.. பொம்பளை நண்பரா??

ஷங்கர் : இங்க பாருங்க இன்ஸ்பெக்டர்.. இந்த மாதிரி அநாகரிகமா விசாரனை செய்யிறதா இருந்தா.. எனக்கு warrant அனுப்புங்க.. நானே நேர்ல வந்து பதில் சொல்றன்.. இப்போ நீங்க போகலாம்..

அர்ஜுன் : ம்ம்.. ஆக.. சட்டப்படி வரச்சொல்றீங்க.. ஏற்கெனவே உங்க மேல மிஸ்டர் ரகுனாத் அவுங்க அம்மா புகார் கொடுத்திருக்காங்க..

ஷங்கர் : என் மேலயா? என்னன்னு?

காசி : அதை அவரு சொல்ல மாட்டாரு! நான் தான் சொல்லனும்.. அதாவது.. உங்களுக்கும்.. திருமதி ராதா ரகுனாத்துக்கும் ஒரு மாதிரியான கசமுசா தொடர்பு இருக்கு.. அது ரகுனாத்துக்குக்கு தெரிஞ்சதும்.. அவரை நீங்க ரெண்டு பேரும் திட்டம் போட்டு தீர்த்துக் கட்டீட்டிங்கன்னு..

அர்ஜுன் : நாங்க நினைச்சா.. அந்த புகாரை வச்சி.. உங்களை அரெஸ்ட் பண்ணி உங்களை எங்க பாணியில விசாரனை பண்ண முடியும்.. ஆனா.. நீங்க ஒரு நல்ல கம்பெனியில வேலை செய்யிறிங்க.. அதை அனாவசியமா கெடுக்கக் கூடாதுன்னுதான் நாங்க கூட போலீஸ் உடையில வராம.. சாதாரண உடையில வந்திருக்கோம்.. சொல்லுங்க.. உங்களுக்கு நாங்க சட்டப்படி வரணும்னா.. அதுக்கும் நாங்க ரெடி..

காசி : சொல்லுங்க சார்.. உங்களுக்கும் அந்த ராதா மேடத்துக்கும் என்ன சம்பந்தம்.. அவுங்க மாமியார் சொல்ற மாதிரி ஏதாவது..

ஷங்கர் : ஐய்யய்யோ! அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை! நான் அவுங்க வீட்டுல தங்கி இருக்கேன்.. ராதாவுக்கு நான் தூரத்து சொந்தம்..

அர்ஜுன் : சொந்தம்னா..

ஷங்கர் : எனக்கு அவுங்க அத்தை பொன்னு!

காசி : அப்போ அவுங்க சொன்னது சரிதான்!!

அர்ஜுன் : ஸ்ஸ்ஸ்.. சொல்லுங்க..

ஷங்கர் : நாங்க ரெண்டு பேரும் சாதாரணமாத்தான் பழகறோம்.. ந்£ங்க நினைக்கிற மாதிரி ஏதும் இல்லை..

அர்ஜுன் : நாங்க நினைக்கலை.. எல்லாரும் சொல்றாங்க..

ஷங்கர் : சார்.. இதுல எனக்கு எந்த தொடர்பும் இல்லை.. ராதா எங்கிட்ட நல்லா பழகுவாங்க.. ஆரம்பத்துல நான் தனியாதான் ஒரு அறையில தங்கி இருந்தேன்.. எதேச்சையா என்னை பார்த்த ராதாதான் அவுங்க வீட்டுல வந்து தங்கிக்க சொன்னா..

அர்ஜுன் : உங்களுக்கும் ரகுனாத்துக்கும் ஏதாவது சண்டை.. கருத்து வேறுபாடு.. ஏதாவது..

ஷங்கர் : அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை.. அவரை நான் பாக்கிறதே ரொம்ப குறைவு..

காசி : ஆமாம்.. ஆமாம்.. அதுக்கெல்லாம் உங்களுக்கு எங்க நேரம் இருந்திருக்கும்..

அர்ஜுன் : சரி.. இந்த கொலையில உங்களுக்கு யாரு மேலயாவது சந்தேகம் இருக்கா?

ஷங்கர் : ம்ம்.. சந்தேகம்னா.. ரகுனாத்துக்கு கவிதாங்கிற ஒரு விதவைக்கும் தொடர்பு இருக்கிறதா ராதா என்கிட்ட சொல்லி இருக்கா..

அர்ஜுன் : ம்ம்.. கவிதா!!காட்சி: 6

நடிகர்கள் 1. இன்ஸ்பெக்டர் அர்ஜுன் 2. கான்ஸ்டபிள் காசி

(அர்ஜுனும் காசியும் கவிதாவை விசாரணை செய்துவிட்டு வருகின்றனர்..)

காசி : என்ன சார் இது? இவுங்க இப்படி சொல்றாங்க? நாம ஒன்னு நினைச்சா.. இப்போ கதை எப்படி எப்படியோ போவுதே!

அர்ஜுன் : யாரை நம்புறதுன்னு எனக்கும் தெரியலை.. ஆனா.. இந்த கவிதாவுக்கு கொலையில தொடர்பு இருக்கிற மாதிரி தோணலை..

காசி : ஏன் சார்.. இந்த இங்கிலீஷ் படத்தில வர்ற மாதிரி.. அவரோட இன்சூரன்ஸ் பணத்துக்கு ஆசைப்பட்டு ராதாவே அவரை கொன்னுட்டாங்களோ?!

அர்ஜுன் : பரவாயில்லையே.. ரொம்ப நாளைக்கு பிறகு உன் புத்தி கொஞ்சம் வேலை செய்யுதே!

காசி : அப்போ உடனே அவரு என்னென்ன இன்சூரன்ஸ் எடுத்திருக்காருன்னு செக் பண்ணிருவோம் சார்..

அர்ஜுன் : அதை நான் ஏற்கெனவே செஞ்சிட்டேன்.. ரகுனாத்.. தன் பேருல பெரிய அளவில இன்சூரன்ஸ் பண்ணி இருக்காரு.. அவரு கொலை செய்யப் படுறதுக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடி.. 2 மில்லியனுக்கு ஒரு பாலிசி எடுத்திருக்காரு!

காசி : சார்.. அந்த பாலிசிக்கு யார் சார் வாரிசு?!

அர்ஜுன் : அவரு எந்த ஒரு உயிலும் எழுதலை.. இன்சூரன்ஸ் கம்பெனியிலயும் வாரிசு யாரையும் நியமனம் பண்ணலை.. அதனால பெரும் பகுதி தொகை.. ராதாவுக்குத் தான் போகும்..

காசி : அப்புறம் என்ன சார்.. இதை விட இந்த கொலைக்கு வேற என்ன motif வேணும்..

அர்ஜுன் : அவசரப் படாதைய்யா... முதல்ல.. போயி அந்த டாக்டரை பார்த்து விசாரிக்கலாம்.. post mortem ரிப்போர்ட்டு என்ன சொல்லுதுன்னு பார்த்திட்டு.. பிறகு முடிவு பண்ணலாம்!

(தொடரும்..)

Wednesday, June 10, 2009

குற்றவாளி யார்..?? (பகுதி 3 & 4)

காட்சி: 3.


நடிகர்கள் 1. இன்ஸ்பெக்டர் அர்ஜுன் 2. கான்ஸ்டபள் காசி

(ராதாவின் வீட்டின் முன் சற்று தொலைவில் காரில் கான்ஸ்டபள் காசி தூங்கிக் கொண்டிருக்கிறார். அங்கே இன்ஸ்பெக்டர் அர்ஜுன் வருகிறார்.)


EFX : 1. குறட்டை சத்தம். 2. Car door opening sound

அர்ஜுன் : யோவ்.. காசி.. எழுந்திருய்யா..

காசி : அ.. குட் மார்னிங் சார்..

அர்ஜுன் : ஹ¤ம்.. உன்னை என்ன செய்ய சொல்லி இங்க அனுப்பினேன்..?

காசி : சார்.. அது வந்து.. ராதா மேடம் வீட்டுக்கு சந்தேகப் படும்படியா யாரும் வராங்களான்னு பார்க்க சொன்னீங்க சார்..

அர்ஜுன் : நீ என்ன பண்ணிகிட்டு இருக்கே?

காசி : சார்.. கோவிச்சிக்காதிங்க சார்.. நேத்து ராத்திரி வீட்டில இட்லிக்கு மாவாட்டினேன்.. அந்த அசதியில தூங்கிட்டேன் சார்..

அர்ஜுன் : ஏன்.. காலையிலேயே போய் இட்லியை செஞ்சு கொடுத்துட்டு வர வேண்டியதுதானே! காசி : அதுக்கு எதுக்கு சார் நான்.. அதை எங்க அப்பா கவனிச்சிக்குவாரு..

அர்ஜுன் : ஹ¤ம்.. நல்ல குடும்பம்! சரி சரி.. ராத்திரி யாராவது வந்தாங்களா?

காசி : அப்படி யாரும் வந்ததா தெரியலை சார்..

அர்ஜுன் : எப்படி தெரியும்? கண்ணை தொறந்து வைச்சிருந்தாதானே எதுவும் தெரியறதுக்கு! சரி சரி வா.. கிளம்புவோம்.. நிறைய வேலை இருக்கு!

(EFX : Car ignition.. Car moves)


காட்சி: 4.

நடிகர்கள் 1. ராதா 2. பாலன்

( ராதா தன் நண்பன் பாலனுக்கு போன் செய்கிறாள்.)

(EFX : Telephone)
பாலன் : ஹலோ..

ராதா : ஹலோ.. பாலன்.. நான் ராதா பேசறேன்..

பாலன் : எல்லாத்தையும் கேள்விப் பட்டேன்.. ஆனா.. காரியத்துக்கு என்னால வர முடியலை.. என்னை மன்னிச்சிரு ராதா..

ராதா : எல்லா காரியத்தையும் பண்ணீட்டு.. காரியத்துக்கு வர முடியலைன்னு சொல்றியா?

பாலன் : என்ன ராதா உளர்றே? நான் என்ன பண்ணேன்..

ராதா : ஹ¤ம். அன்னைக்கு நான் ஏதோ ஆத்திரத்தில என் புருஷன் செத்தாலும் தேவலைன்னு சொன்னேன்.. அப்போ நீ என்னை பார்த்த பார்வை.. அவரை கொல்றதுக்காகத்தான்னு எனக்கு தெரியாம போச்சு!

பாலன் : விளையாடாதே ராதா.. நானாவது.. அவரைக் கொல்றதாதவது! உனக்கென்ன பைத்தியமா? ஆத்திரத்தில நீதான் உணர்ச்சி வசப்பட்டு அவரைக் கொன்னுட்டேன்னு நான் நினைச்சி வேதனைப் பட்டுகிட்டு இருக்கேன்..

ராதா : (கத்துகிறாள்) பாலன்..

பாலன் : ஆத்திரப்படாத்தே ராதா... உண்மையிலேயே என்ன நடந்திச்சின்னு என் கிட்ட சொல்லு.. எனக்கு தெரிஞ்ச நல்ல வக்கீல் ஒருத்தரு இருக்காரு.. எதுவா இருந்தாலும் அவரு பார்த்துக்குவாரு.. நீ எதுக்கும் கவலைப்படாதே!

ராதா : நீங்க சொல்றதைப் பார்த்தா என்னமோ அவரை நானே கொலை பண்ண மாதிரி இல்லை பேசறிங்க..

பாலன் : அதான உண்மை..?

ராதா : ஐய்யோ பாலன்.. நீங்களும் எங்க மாமியார் மாதிரி பேசாதிங்க.. ஏற்கெனவே போலீஸ்காரங்க அவுங்க பேச்சை கேட்டுகிட்டு என்னை சுத்தி சுத்தி வராங்க.. இதுல நீங்க வேற இப்படி யாரு கிட்டயும் சொல்லி வைக்காதிங்க..!

பாலன் : நீங்க பண்ணலைன்னா.. பிறகு யாரு பண்ணி இருப்பா?!

(தொடரும்..)

குற்றவாளி யார்..? (பகுதி 1 & 2)

காட்சி: 1.

நடிகர்கள் 1. மரகதம் 2. ராதா

(ராதாவின் கணவர் எதிர்பாராதவிதமாக அவரது அலுவலகத்தில் மரணமடைந்து விடுகிறார். ராதாதான் அவரை கொலை செய்துவிட்டாள் என்று அவளின் மாமியார்- மரகதம் அவளை கடிந்து கொள்கிறார்.)

மரகதம் : எனக்கு தெரியும்.. நல்லா இருந்த என் மகனை நீதாண்டி கொன்னுட்டே..! செய்யிறதெல்லாம் செஞ்சிட்டு.. ஒன்னும் தெரியாதவ மாதிரி நிக்கிறதை பாரு.. தப்பிச்சிரலாம்னு மட்டும் நினைக்காதே.. உன்னை சும்மா விட மாட்டேன்.. என் சின்ன மகன் ராஜன் வரட்டும்..

ராதா : உங்களுக்கு என்ன அத்தை வந்திச்சி..? நானே அவரு போன சோகத்தில இருக்கேன்.. என்னை ஏன் இப்படி சித்ரவதை செய்யிறிங்க..?

மரகதம் : சோகத்தில இருக்கியா?! இல்லை சந்தோஷமா இருக்கியான்னு இப்போ தெரிஞ்சிடும்.. போலீஸ்காரன் வந்து.. கேக்கிற விதத்தில கேட்டா.. எல்லா உண்மையும் வெளிய வந்திடும்.. என் மகன் உனக்கு அப்படி என்ன குறை வைச்சான்? காசு பணம் சேர்த்து வைக்கலையா? வீடு வாசல்னு கட்டிக் கொடுக்கலையா?

ராதா : அதெல்லாம் இருந்தா மட்டும் போதுமா? (EFX) ஏன் என் வாயை கிளர்றிங்க..

மரகதம் : பார்த்தியா.. உன் வாயாலயே உண்மை வருது..

ராதா : ஐய்யோ .. அத்தை.. கொஞ்சம் நிப்பாட்ரிங்களா.. இத்தனை நாள் உங்க மகனோட தொல்லை.. இப்ப உங்க தொல்லை!

(EFX : போலீஸ் வண்டி வரும் சத்தம்..)

மரகதம் : இப்போ தெரிஞ்சிரும்! போலீஸ்காரங்க வந்தா.. எல்லாம் தெரிஞ்சிரும்!

காட்சி : 2.

நடிகர்கள் 1. ராஜன் 2. மரகதம்

( ராஜன் அவன் அம்மாவிடம் சத்தம் போடுகிறான் )

ராஜன் : இப்போ உங்களுக்கு சந்தோஷமா? ஏம்மா நீங்க மட்டும் இப்படியெல்லாம் யோசிக்கிறிங்க.. அண்ணியை பார்த்தா கொலைகாரி மாதிரியா தெரியுது?

மரகதம் : நீ பேசாம இருடா.. உனக்கு ஒன்னும் தெரியாது.. அவதான் உங்க அண்ணனை கொன்னுட்டா.. இன்னும் கொஞ்ச நாள்ல உனக்கும்.. எல்லாருக்கும் உண்மை என்னான்னு தெரியத்தான் போகுது..

ராஜன் : அம்மா.. உண்மை என்னான்னு தெரியாம நாம இப்படி அவசரப் பட்டா.. பாதிக்கப் படப்போறது நாமதான்.. நம்ம குடும்ப கௌரவம்தான்.. இது ஏன் உங்களுக்கு புரிய மாட்டுது..

மரகதம் : யாரு அவசரப் படறாங்க.. நான் எதையும் பெரிசா எடுத்துக்காம இருந்ததாலதான் இப்போ என் மகனையே இழந்திட்டு நிக்கிறேன்.. அண்ணைக்கே உங்க அண்ணன் தலைப்பாடா அடிசிகிட்டான்..

ராஜன் : என்னம்மா சொல்றீங்க?

மரகதம் : டேய்.. ராஜா.. உங்க அண்ணி.. தப்பானவடா!

ராஜன் : அம்மா! என்னம்மா நீங்களே இப்படி சொல்றீங்க..

மரகதம் : இதை நான் சொல்லலை.. சாகறதுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி உங்க அண்ணன் அவனே எங்கிட்ட சொல்லி அழுதான்.. இந்த பாவி அதை பெரிசா எடுத்துக்காம அவனுக்கு ஆறுதல் சொல்லி அனுப்பிட்டேன்.. (அழுகிறாள்)

தொடரும்..

Thursday, April 23, 2009

ஞாபகம் வருதே..!

நாம் ஒரு விஷயத்தை பார்க்கும் பொழுது, அந்த விஷயம் நமது மூளையில் 15 விழுக்காடு பதிவாகிறது. பாக்கி 85% நமக்கு மறந்து விடுகிறது.

அதே போல ஒரு விஷயத்தை கேட்பதால், காதால் கேட்படால், 12% நமது மூளை அந்த விஷயத்தை ஏற்றுக்கொள்கிறது! 88% மறந்து விடுகிறது..

தொடுவதால், ஒரு விஷயத்தை 5% மட்டும் நமது மூளை ஏற்றுக்கொள்கிறது.. 95% நமக்கு அந்த விஷயம் மறந்து விடுகிறதாம்..!

பிறகு எதைச் செய்தால்.. எதைச் செய்தால் நம் மூளை ஒரு விஷயத்தை ஏற்றுக்கொள்ளும்? நல்ல ஞாபகத்தில் இருக்கும்?

ஆம், ஒரு விஷயத்தை பற்றி நாம் வாசிக்கும் பொழுது அல்லது சொல்லிப்பார்க்கும் பொழுது, மீண்டும் மீண்டும் சொல்லிப்பார்க்கும் பொழுது அந்த விஷயம் நமது மூளையில் 85% விழுக்காடு வரை பதிவாகிறது!
அந்த விஷயததையே, எழுதி வாசித்தால், 85 சதவிகிதத்திலிருந்து, 95 சதவிகிதம் வரை நமது மூளையில் அது பதிவாகிறது!

இதனால்தன், மாணவர்களை, குறிப்பெழுதி படிக்க சொல்கிரார்கள். மீண்டும் மீண்டும் மீள்பார்வை, அதாவது revision செய்ய சொல்கிரார்கள். இது மாணவர்களுக்கு மட்டுமல்ல.. நம் எல்லோருக்குமே..

நல்ல ஞாபக சக்தி தேவை என்று நினைப்பவர்கள் அனைவருக்கும் இது பொருந்தும்.. ஆக, இனி முக்கியமான விஷயங்களை ஒரு புத்தகத்தில் குறித்து வைத்துக்கொண்டு, நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் பக்கங்களை புரட்டிப் பாருங்கள்.. நீங்கள் படித்த பல விஷயங்கள் உங்கள் ஞாபகத்தில் பசுமரத்தாணிபோல இருக்கும்...!

Monday, April 13, 2009

மயிலிறகு..

சின்ன வயதில், மயிலிறகை புத்தகத்தில் மறைத்து வைத்து, அது குட்டி போடும் என்று நீங்கள் காத்திருந்தது உண்டா? பென்சிலை திருகி அதற்கு தீனி போட்டது உண்டா? என்ன உங்கள் அருகில் இருப்பவர் முகத்தில் லேசான புன்னகை தோன்றுகிறதா ? அப்படியானால்.. அவரின் இளமைக்காலம் அவருக்கு நினைவவுக்கு வந்து விட்டது என்று அர்த்தம்..!
இது உங்களுக்கு மட்டுமல்ல, நம்மை போன்ற எத்தனையோ பேர் இளமைக்காலத்தில் செய்ததுதான்.. இன்னமும் பிள்ளைகள் செய்து கொண்டிருப்பதுதான்..!

சரி, மயிலிறகை புத்தகத்தில் வைக்கும் இந்த பழக்கம்.. எப்படி வழக்கத்தில் வந்தது?
அந்த காலத்தில், நமது முன்னோர்கள், ஒரு புத்தகத்தை படிக்கும் பொழுது, புத்தகக் குறியீடாக அதாவது bookmark-ஆக மயிலிறகை பயன் படுத்தி இருக்கலாம் என்று நினைக்கிறேன்.. அதுவே பிறகு வழக்கமாகிவிட்டது. அதற்கு குட்டி போடும் கதைகளும் பிறந்து விட்டன!
அது மட்டுமா? அந்த காலத்தில் மயிலிறகை மையில் நனைத்து, எழுதவும் பயன் படுத்தி இருக்கிறார்கள்.. இந்த மயிலிறகுக்கு.. தமிழில் ‘பீலி’ என்ற இன்னொரு பெயரும் உண்டு...
K.கிருஷ்ணமூர்த்தி

Thursday, April 2, 2009

மீன் தொட்டியும்.. வாழ்க்கையும்..

ஒரு கதை சொல்கிறேன் வாருங்கள்.. இது கட்டுக் கதை அல்ல... கற்றுக்கொள்ள வேண்டிய கதை.

ஜப்பானியர்கள் அதிகம் விரும்பி உண்ணக்கூடிய உணவு.. சுஷி! அதிலும் மீன் சுஷி என்றால் அங்கே மவுசு அதிகம், மீனுக்கும் மவுசு அதிகம்.

ஒரு காலத்தில் ஜப்பானில் மீன்பிடி தொழிலுக்கு பெரிய மருட்டலாக இருந்தது ஒரு பிரச்சனை. அதாவது, ஜப்பானியர்கள்.. பழைய மீன்களையோ, இறந்த மீன்களையோ விரும்பி உண்ண மாட்டார்கள். அவர்களுக்கு தேவை.. புதிய மீன்கள்.. வளப்பமான மீன்கள்.

அந்த காலத்தில், ஆழ் கடலில் மீன் பிடிக்கும் ஜப்பானியர்கள், பெரிய-பெரிய குளிர்சாதன பெட்டிகளை அமைத்து மீன்களை கரைக்கு எடுத்து வந்தனர். ஆனால், அந்த மீன்கள் விலை போகவில்லை. காரணம் அவை இறந்து போன மீன்கள்.. என்ன செய்வது..? அரசாங்கமே யோசித்தது.. மீனவர்களுக்கு உதவ..

பிறகு மீன்களை உயிரோடு கரைக்கு கொண்டு வர, கப்பலில் பெரிய பெரிய தொட்டிகள் கட்டி, அதில் நீரை நிரப்பி.. மீன்களை கொட்டி கொண்டு வந்தனர். தொட்டிகளில் அடைபட்டு, நீந்தாமல் சோம்பிக் கிடந்தன மீன்கள். கரைக்கு வந்த பிறகு, அந்த மீன்களும் விலை போகவில்லை! காரணம், சோம்பிக்கிடந்த மீன் இறைச்சி ருசியாக இல்லையாம்! என்ன செய்வது? மீண்டும் யோசித்தனர். பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டனர். இறுதியில் கணடாவைச் சேர்ந்த ஒரு ஆலோசகரை நியமித்தனர். அவர் சொன்ன ஆலோசனை என்ன தெரியுமா???


ஆம்.. மீன் தொட்டிகளில் சிறிய சுறா மீன்களை போடுங்கள் என்று சொன்னாராம். பிறகு என்ன நடந்தது தெரியுமா? சுறா மீன் பயத்தில் மீன்கள் நீந்திக்கொண்டே கரைக்கு வந்து சேர்ந்தன. சுறா மீன்களும் ஒன்றிரண்டு மீன்களை மட்டுமே தின்றன.. கரைக்கு வந்த மீன்களுக்கு.. இப்போது ருசியும் அதிகம்.. மவுசும் அதிகம்..!

ஆம்.. நமது வாழ்க்கையும் அந்த மீன் தொட்டி மாதிரிதான்.. சுறா மீன்கள் என்னும் சிறு சிறு போராட்டங்கள், தடங்கல்கள், பிரச்சனைகள், எதிரிகள் இவை எல்லாம் இருந்தால்தான்.. நாம் சுறுசுறுப்பாக இயங்க முடியும் என்று நினைத்துக் கொண்டு வாழ்க்கையை ஓட்டுங்கள்!

அன்புடன் K.கிருஷ்ணமூர்த்தி

Saturday, March 21, 2009

குழந்தை பாண்டம்

குயவர்கள் மண்பாண்டம் செய்வதை நீங்கள் பார்த்ததுண்டா?

சுழலும் சக்கரத்தில் களிமண்ணை வைத்து... பாண்டத்தை உருவாக்குவார்கள்.. ஒரு கையால் உள்ளிருந்து அணைத்தபடியும்.. மறு கையால் வெளியே இருந்து தட்டிக்கொடுத்தபடி அவர்கள் அந்த பாண்டங்களை உருவாக்குவார்கள்.. இந்த இரு கைகளின் அழுத்தமும் ஒரே அளவில் இருப்பது முக்கியம்.. பிறகு அவற்றை உலையில் போட்டு சூடு காட்டுவார்கள்.. அப்பொழுதுதான்.. அந்த பாண்டம் நமக்கு பயனளிக்க வல்லதாக இருக்கும்... ஏதாவது ஒரு கையின் அழுத்தம் அதிகமானாலும், அந்த பாண்டம் உருப்பெறாது!

குழந்தை வளர்ப்பும் அப்படித்தான்... பாசம் எனும் ஒரு கையால் அணைத்து... கண்டிப்பு என்னும் மறு கையால் கண்காணிப்போடு வளர்க்க வேண்டும்.. பாசம் கூடினாலோ.. கண்டிப்பு அளவுக்கு மீறினாலோ.. குழந்தைகள் நாம் நினைப்பதுதால் வளர மாட்டார்கள்.. இப்படி முறையாக வளர்த்த பிள்ளைகளை, வாழ்க்கை என்னும் உலையிலிட்டு சூடு காட்ட வேண்டும்.. அப்பொழுதுதான்.. நம் குழந்தைகள், நாட்டிற்கும் வீட்டிற்கும் நல்ல மக்களாக திகழ்வார்கள்..!

Tuesday, March 17, 2009

ஒரு வழிப் பாதை.. !

ரவி, STPM முடித்த மாணவன். சாதாரண குடும்பத்தில் பிறந்தவன். அவன் நன்கு படித்து, மருத்துவராகி நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் சேவையாற்ற வேண்டும் என்று அவனது விதவைத் தாயார் அவன் படிப்பதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தார். அவனது தாயாரின் கனவை நனவாக்கவும்.. தனது எதிர்காலத்தை செழிப்பாக்கவும்.. ரவி.. முழு மூச்சாக, கல்வியில் மட்டும் கவனம் வைத்து, படிப்பை தொடர்ந்து, பரீட்சை எழுதி நல்ல மதிப்பெண்களையும் பெற்றிருந்தான். பல்கலைக்கழக வாய்ப்பிற்காக காத்திருக்கின்றான். பதில் வந்தது. ஆவலுடன் அஞ்சலைப் பிரித்தவனுக்கு, படித்தவனுக்கு, மகிழ்ச்சியைவிட அதிர்ச்சியே அதிகமாக இருந்தது.. ஆம்.. அவனுக்கு உள்நாட்டு பல்கலைக் கழகமொன்றில் பட்டப் படிப்பை தொடர வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால்.. அவன் விரும்பிய, அவன் தாயார் எதிர்பார்த்த.. மருத்துவத் துறையில் அல்ல. மாறாக, பொறியியல் துறையில்!

ரவியின் தாயாருக்கு வருத்தம்.. ரவிக்கோ பெருத்த ஏமாற்றம். ஏமாற்றம் எரிமலைப் பிழம்பு போல நெஞ்சில் அனல் கக்கி அவனுக்கு சினத்தை மூட்டியது. அவனது தாயாரின் வாடிய முகமோ அவனது சினத்தை சீண்டி அதிகமாக்கியது.. ஏமாற்றத்தோடு அன்றைய இரவு கண்ணயர்ந்தான்..

பொழுது விடிந்தது.. அன்பே உருவான அவனது அன்னை அவனை எழுப்பினார். “எந்தத் துறையானால் என்ன.. இந்தத் துறையிலும் உன்னால் சாதிக்க முடியும்.. நல்ல விதை எந்த நிலத்திலும் நின்று முளைக்கும்”, என்று அவனுக்கு ஆறுதல் கூறி, அந்த வாய்ப்பை நழுவ விட வேண்டாமென அறிவுறை கூறினார். தாயின் வாக்கே தன் போக்கென அவனும் பல்கலைக் கழகம் சென்றான். தன் தாயாரின் அன்புக் கட்டளையை கருத்தில் கொண்டு கற்றான். பல்கலைக் கழகத்தில் சிறந்த மாணவன் என்ற விருதோடு பட்டமும் பெற்றான். ஈன்றாள் அன்று அகம் குளிர்ந்தாள். இவன் மனம் மகிழ்ந்தான்.

பொறியியல் துறையில் பெற்ற அறிவு.. மருத்துவத் துறையில் இருந்த ஆர்வம்.. இரண்டும் அவனை ஒரு புதிய மருத்துவக் கருவியை கண்டுபிடிக்க தூண்டின. முயற்சி திருவினை பயத்தது. பார் போற்றும் பெயர் பெற்றான்.. அவனது இத்துனை வளர்ச்சிக்கும் தன் அன்னையின் அரவணைப்பே காரணம் என் பறை சாற்றினான். அப்போது அவனை ஈன்றவள் பெரிதுவந்தாள். அகக்கண்ண்கள் கலங்கி அதன் துளிகள் நிஜக் கண்களில் துளிர்த்தன.
அன்றைய இரவு.. சாதித்து விட்டோம் என்ற அமைதியோடு அன்னையின் மடியில் கண்ணயர்ந்தான்.

மீண்டும் பொழுது விடிந்தது.. அன்னை அவனை எழுப்பினாள்.. பதில் இல்லை.. அசைத்தாள்.. அசையவில்லை.. “ஐயகோ.. !!” என்று கதறினாள்..

அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறான் மகன்.. அவனது அசைவற்ற உடலையும் சேர்த்து! “அம்மா.. அழாதிங்க.. எனக்கு ஒன்னுமில்லை..!” அவள் காதுகளில் இவன் கத்துவது கேட்ட பாடில்லை! திகைக்கிறான்..

“என்ன? ஒன்றும் புரியவில்லையா?” ஒலித்தது ஒரு குரல்.. எங்கேயோ கேட்ட குரல்.. “அப்போழுதே சொன்னேனே.. அவசரப் படாதே என்று.. என் பேச்சை கேட்டாயா.. இப்பொழுது பார்.. உன் உணர்வற்ற உடலை கட்டியணைத்து கதறும் தாயின் கண்ணீரைக் கூட உன்னால் துடைக்க முடியாது.. பார்.. நன்றாகப் பார்..” என்றது அந்த குரல்..

“ஏன்.. என்ன ஆச்சி எனக்கு?”
“மறந்து விட்டாயா.. நேற்று இரவு மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லையே என்று விஷம் குடித்தாயே.. அதற்குள் மறந்து விட்டாயா?

“அப்படியென்றால்.. நான் படித்து பட்டம் வாங்கியது? விருது வாங்கியது..? கருவி கண்டு பிடித்தது??

“எல்லாம் நடந்திருக்கும்.. நீ அவசரப்படாமல் இருந்திருந்தால்..”

“அப்போ நீ..”

“நான் உன்னோட மனசாட்சி..! நீ இறந்து ஆறு மணி நேரமாகுது..”

“வேண்டாம்.. நான் சாக மாட்டேன்.. நான் சாக மாட்டேன்.. அம்மா..அம்மா..”

“அட பைத்தியமே.. நினைத்தவுடன் திரும்பிச் செல்லக் கூடிய இடத்திற்கா நீ வந்திருக்கிறாய்? இனி உன் விதி உன் கையில் இல்லை.. இது ஒரு வழிப் பாதை..!!”

-அசுபம்-

Saturday, March 14, 2009

தமிழின் சிறப்பு - ஓரெழுத்து வார்த்தைகள்

தமிழ் மொழி, மிகவும் தொண்மையானது. இது யாவரும் அறிந்ததே! தமிழில் நிறைய சிறப்புக்கள் உள்ளன.. அதில் ஒன்று : தமிழில்தான், அதிகமான ஓரெழுத்து சொற்கள் இருக்கின்றன. அதிலும் கூட, அந்த ஓரெழுத்து வார்த்தைகளுக்கு பல அர்த்தங்கள்!!!
உதாரணத்திற்கு :

அ - அழகு, சுட்டும் சுட்டெழுத்து (அங்கே)
ஆ - பசு, ஒரு வித மரம்
இ - இங்கே
ஈ - ஒரு சிறு உயிரினம்
உ - கடிதம் எழுதுவதற்கு முன் நிறைய பேர் 'உ' என்று எழுதுவர், அதன் அர்த்தம் தெரியாமலேயே. இந்த 'உ' சிவசக்தியை குறிக்கும்.
ஊ - ஊன் (தசை)

கை, மை, பை, வை.. இப்படி ஓரெழுத்து வார்த்தைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இது தமிழ் மொழியில் தொன்மையையும் வன்மையையும் காட்டுகிறது. இப்படி சிறப்பு வாய்ந்த தமிழை பேசுவதற்கே இன்று பலர் தயங்குகின்றனர்.

இனியாவது, நல்ல தமிழ் பேசுவோம்..!

(இது மலேசிய வானொலியில் காலைக்கதம்பம் நிகழ்ச்சியில் அறிவிப்பாளராக நான் சொன்ன கருத்து, இந்த கருத்தைச் சொல்லிவிட்டு நான் ஒலியேற்றிய பாடல் : தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு.. ஒரு
சரக்கிருக்குது முறுக்கிருக்குது மெட்டுப்போடு!)

Monday, March 2, 2009

சொன்னா கேக்கனும்!

(மலேசிய வானொலியில் அறிவிப்பாளராக இருந்தபோது, காலைக் கதம்ப நிகழ்ச்சியில் நான் சொன்ன தகவல்..)
சரி இப்பொழுது உங்களுக்கு ஒரு சின்ன பரிட்சை... சரியா? நீங்கள் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் பரவாயில்லை.. நான் சொல்வதை கவனமாக கேளுங்கள்...ரெடியா?

கொஞ்சம் அமைதியாக இருங்கள்.. கண்களை மூடிக்கொள்ளுங்கள்.. நான் சொல்வதை கவனமாக கேளுங்கள்.. எல்லோரும் இப்பொழுது, தயவு செய்து நீல நிறத்தை.. நீல வர்ணத்தை நினைக்காதீர்கள்... யாரும்.. நீல நிற வர்ணத்தை நினைக்காதீர்கள்... சொன்னா கேளுங்க.. நீல நிறத்தை எண்ணாதீர்கள்!!!!!
என்ன ஆச்சு? ஹஹஹ..நீல நிற வர்ணத்தை நினைக்காதீர்கள்... என்று நான் சொன்னதும்.. முதலில் உங்கள் மனக்கண்ணில் தோன்றியது என்ன நிறம்? நீல நிறம் தானே... உண்மையா? இதிலிருந்து என்ன தெரிகிறது? எப்பொழுதும், யாரிடமும் Negative கட்டளைகளை நேரடியாக சொல்லக்கூடாது. அவற்றை மறைமுகமாக சொல்வதுதான் சிறந்தது...!
நீல நிற வர்ணத்தை நினைக்காதீர்கள்...என்று சொல்வதற்கு பதில், சிகப்பு வர்ணத்தை நிணையுங்கள் என்று நான் சொல்லியிருந்தால், உங்களுக்கு நீல நிறம் பற்றிய சிந்தனையே தோன்றியிருக்காது அல்லவா...?

இங்கே குப்பை போடாதீர்கள் என்று எழுதி வைத்தால்.. அங்கேதான் அதிகம் குப்பையை கொட்டுவார்கள்.. இது நம் அன்றாட வாழ்க்கையில் நாம் பார்க்கும் சாதாரண விஷயம்தான்... இப்படி பல உதாரணங்களை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்... இது மனோவியல்..

பெற்றோர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்... பிள்ளைகளிடம் அதை செய்யாதே.. இதை செய்யாதே என்று சொல்வதை விட .. எதை செய்யலாம் எப்படி செய்யலாம் என்று சொல்லுங்கள்... அவர்களுக்கு அது சுலபமாக புரியும்... அவர்கள் உங்கள் சொற்படி நடப்பார்கள்.. சரியா?

இது அறிவுரை அல்ல.. ஆலோசனை..

Saturday, February 28, 2009

புதுக்கவிதை கருத்தரங்கில் எனது ஆய்வுக் கட்டுரை (2006) - பகுதி 10

பாகம் ஒன்று

• முடிவு

கவிதைக்கு உயிராய் இருப்பது பாடுபொருள். உடலாய், அலங்காரமாய் அழகு சேர்ப்பது சொற்கள். இது இரண்டும் ஒருங்கே அமையப்பெற்றால், கவிதை கருத்தில் நிற்கும். காட்சி ஒன்றானாலும், காணும் கண்கள் வேறுபடும்போது.. கருத்தும் வேறுபடுகிறது. நல்ல கவிதைகள் கூட, கற்போரின் தகுதிக்கேற்ப, அவரவர் நிலையில் வேறு வேறாய் அர்த்தப்படுகின்றன. எனது சக்திக்கும், இரசனைக்கும், கருத்துக்கும் உட்பட்ட மூன்று கவிதைகளை இங்கே நான் பரிசுக்குரிய கவிதைகளாகவும், சில கவிதைகளை கவனத்தை ஈர்த்த கவிதைகளாகவும் தேர்ந்தெடுத்திருக்கின்றேன். இதில் மற்ரவர்களுக்கு முரண் இருந்தால், அதுவும் ஆரோக்கியமானதுதான், வரவேற்கப்படவேண்டியதுதான். சர்ச்சைக்குப் பின், தர்க்கத்துக்குப் பின் ஒரு புதிய தெளிவு பிறக்கும். அதை அனைவரும் அகன்ற மனதோடு ஏற்றுக்கொள்ள கடமைப்பட்டிருக்கின்றோம்.
நாட்டில், தமிழ் வாழ வேண்டும். தமிழ் இலக்கியங்கள் பல உருவாகி வாழ வேண்டும். வழி காட்ட வேண்டும். இன்னும் நிறைய இளம் கைகள் கவிதை எழுத தன் பென்சில்களை தீட்ட வேண்டும், பேனாக்களில் மையூற்ற வேண்டும்.

வாழ்க தமிழ்! வளர்க புதுக்கவிதை இம்மண்ணில்!!

புதுக்கவிதை கருத்தரங்கில் எனது ஆய்வுக் கட்டுரை (2006) - பகுதி 9

• சிறப்புப் பரிசு.

பல்கலைக்கழகங்களில், கல்விப் புதையலை தோண்டச் செல்லும் நம் மாணவர்களின் அன்றாட வாழ்க்கையில் இடம்பெறும் மிகச் சாதாரண விஷயங்களைச் சொல்லி, அவர்கள் செய்யும் சின்னச் சின்னச் செலவுகளில், செலவழிப்பது சில்லரைக் காசுகள் என்றாலும், அதன் பின்னால் ஒளிந்திருக்கும் பெற்றோரின் பெரிய பெரிய தியாகங்களை அழகாகச் சொல்லி இருக்கிறார், கவிஞர். தன்னை ஒரு ஆணாக உருவகப் படுத்தி எழுதியிருந்தாலும், “வானொலி வாங்க கூட்டுப்பணம் பிடித்தபோது”, “அலுக்காமல் அலங்கரித்துக்கொண்ட போது”.. என்ற வரிகளில்.. தன்னையும் அறியாமல், தான் ஒரு பெண் கவி என்பதை காட்டிக்கொடுத்து விடுகிறார். இருந்தாலும், கவிதையின் முடிவில், ஈன்றவளின் (பெற்றோரின்) தியாகத்தை எதார்த்தமாக சொல்லி, சட்டென்று நம்மை நெகிழ வைக்கிறார். கவிதையும் நெஞ்சில் நிற்கிறது.. கணக்கிறது!

முடியாது போடா...!

வெறுமை படரும்
ஹாஸ்டல் அறையில்
வைக்க
வானொலி வாங்க
கூட்டுப் பணம்
பிடித்த போது
தெரியவில்லை...!

பந்தாவுக்காக
நண்பர்கள்
மத்தியில்‘பிளாஞ்சா’
பண்ணும்போதும்
அறியவில்லை...!

காதலிக்காக
கஞ்சத்தனம்
இல்லாமல்
காசை
வாரி இறைத்தபோது
சத்தியமாய்
நினைவில்லை..!

தவறாமல்
சாப்பிட்டபோதும்..
அலுக்காமல்
அலங்கரித்துக்
கொண்ட போதும்...
எண்னவில்லை -
நான்என் வசமில்லை...!

ஒரு மாலைப் பொழுதில்
டாக்சி பயணம்...

‘முடியாது போடா,
நாலு வெள்ளித்தான் தருவேன்’
சீனனுடன்
சண்டை போட்ட
மூதாட்டியைப் பார்த்தவுடன்
பொட்டில் அடித்தது...

டாக்ஸி ஏறினால் பணம் செலவாகும்
என்று
நடந்தே
வீடு வந்து சேறும்
அம்மா!
-செ.ராஜேஸ்வரி
சுங்கைப்பட்டாணி
ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி

புதுக்கவிதை கருத்தரங்கில் எனது ஆய்வுக் கட்டுரை (2006) - பகுதி 8

பரிசுக்குரிய கவிதைகள்
• முதல் பரிசு

காதல் என்பது பொதுவுடமை. இன்றைய காதல் இளையோர்களுக்கு மட்டுமே என்ற வழக்கமான சிந்தனைகளைத் தாண்டி ஒரு கவிதை! நமது இன்றைய நிலையையும், சமுதாயத்தில் காதல் படும் பாட்டையும், தள்ளாத வயதில் பெற்றவர்களுக்கு துணை ஒன்று தேவை என்று புரிந்துகொள்ளக்கூட நேரமில்லாத பிள்ளைகளின் கன்னங்களில், ‘பளார்’ என அறைந்தார்போல் அந்த தேவையின் நியதியை, காதலின் ஆழத்தை உணர்த்துகிறது இந்தக் கவிதை. வாழ்க்கையின் கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருப்பவர்களுக்கு, உண்ண உணவும், உடுக்க உடையும் மட்டும் போதும் என்று எண்ணுபவர்களுக்கு, இது ஒரு நல்ல சாட்டை அடி! பிள்ளைகளிடம் பெற்றவர்கள் சொல்லியழ முடியாத துயரத்தை, தவிப்பை கவிஞர் கவிதையாய் வடித்திருக்கிறார்.. நமது பண்பாட்டின் கண்ணாடிச் சுவர்களை உடைத்தெரியாமல்..

நம்ம காதல்
உன்மேல் எனக்கும்
என்மேல் உனக்கும்
காதல்தான்..!

கித்தா தோப்பில்
ஏணி வெட்டுவெட்டியபோதும்..

ஓடிப்போயி
மாரியம்மன் கோயிலில்
தாலி கட்டியபோதும்..

உன்மேல் எனக்கும்
என்மேல் உனக்கும்
காதல்தான்..!

பிள்ளைப் பொறப்புக்கு
நீ அம்மா வீட்டுக்குப்போனப்பவும்...
மூனு பிள்ளைங்களை பெத்து
முப்பது செஞ்சப்பவும்..

உன்மேல் எனக்கும்
என்மேல் உனக்கும்
காதல்தான்..!

பிள்ளைங்க வளர்ந்து
படிச்சி பாஸ் பண்ணி
வேலைக்குப் போனப்பவும்..

ஜோடியோட வீட்டுக்கே
வந்து நின்னப்பவும்...

உன்மேல் எனக்கும்
என்மேல் உனக்கும்காதல்தான்..!

காலம் மாறி
பருவம் மாறி
உருவம் மாறி போயி...

நீ மகள் வீட்டுலேயும்
நான் மகன் வீட்டுலேயும்
இருக்கறப்ப மட்டும்...

புரியவே இல்லை
பிள்ளைங்களுக்கு
நம்ம காதல்!

காதலர் தினம்
காதலுக்கு தானாம்
உலகமே சொல்லுது..!

நாம மட்டும்
ஒருத்தரை ஒருத்தர்
பார்க்க முடியாம..

ஒன்னா இருக்கலாம்
வா செல்லம்மா
முதியோர் இல்லத்துக்கு!

ஊருக்கும் உலகத்துக்கும்
புரிய வைப்போம்..

உன்மேல் எனக்கும்
என்மேல் உனக்கும்
உள்ள உண்மையான காதலை!

- இராம.சரஸ்வதி, பத்துகேவ்ஸ்

புதுக்கவிதை கருத்தரங்கில் எனது ஆய்வுக் கட்டுரை (2006) - பகுதி 7

கவிதையில் வேற்று மொழிகள்

ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கவிதைகளில், ஒரு சில நல்ல கவிஞர்கள் கூட, தமிழ்க் கவிதையில் அளவுக்கும் அதிகமாக அண்ணிய மொழியை சேர்த்து எழுதுவதைக் காண முடிகிறது! நல்ல கருத்து, சொல்லாட்சி, அழகியற்கூறுகள், எதார்த்தம்.. எல்லாம் இருந்தும்.. அண்ணிய மொழியின் ஆதிக்கம் ஒரு சில கவிதைகளின் தரத்தைக் குறைத்திருக்கிறது! சினிமா பாடல்களிலேயே அண்ணிய மொழி கலக்கக் கூடாது என்று போர்க்கொடி தூக்கும் நம்மவர்களுக்கு, இந்த கவிதைகளின் பால் ஈடுபாடு வருமா? உதாரணத்திற்கு, இந்த கவிதை:

நாங்க எல்லாம் மாறிட்டோம்
அதானால் பாதகமில்லை...

சமைக்கத் தெரியுமா?
எல்லார் துணிகளுக்கும்
‘வாஷிங் மிசினாய்’
இருக்கத் தெரியுமா?

‘இரவின் மடியில்’
நிலாப் பாடல்களை மறந்து
‘ஆராரோ ஆரிராரோ’
ஆலாபனை செய்து
‘டைமிங்’கோடு பாடத் தெரியுமா?

‘அண்ணாமலை’
‘மெட்டி ஒலி'களை மறந்து
குழந்தைக்கு
‘சூசூ’ கலக்கத் தெரியுமா?

தொட்டில் ஆட்டத்தெரியுமா?

மடிப்புக் கலையாமல்
‘ஐயன்’ போடத் தெரியுமா?

அனாமதேயக் ‘க்கால்’களை
‘க்கட்’ பண்ணத்தெரியுமா?

கஞ்சப் ‘பிஸ்னாரி’யாக
வாழும் முறைதெரியுமா?

அலுவலகத்தில்
'டப்புவே'யை
'யூஸ்' பண்னத் தெரியுமா?

வீடு வந்ததும்
கூட்டிப் பெருக்க தெரியுமா?

அந்தக் காலம் போல் இல்லை...
அதானால் பாதகமும் இல்லை...

எதற்கும்
தெரிந்து வைத்துக் கொள்
நண்பா..!
-ஏ.தேவராஜன் ஜாசின்.

கவிதை படிப்பதற்கு கலகலப்பாக இருந்தாலும்.. இது தமிழ்க் கவிதையா என்ற சந்தேகம் கூடவே எழுகிறது! இதையே மற்றவர்களும் பின் தொடர்ந்து எழுத ஆரம்பித்துவிட்டால் என்னவாகும்? இது இளைஞர்களுக்காக எழுதப்பட்டது என்றாலும்.. இன்னும் கொஞ்சம் தமிழ்ப் படுத்தி எழுதியிருக்கலாம் என்பதே என் கருத்து.

இன்னும் இருக்கிறது..

Sunday, February 22, 2009

புதுக்கவிதை கருத்தரங்கில் எனது ஆய்வுக் கட்டுரை (2006) - பகுதி 6

குட்டிக் கவிதைகள்

இந்த நான்கு மாத காலத்தில் வெளிவந்த கவிதைகளில் 70 சதவிகிதம், குட்டிக் கவிதைகள். சொல்ல வந்த கருத்தை ‘சுருக்’கென்று சொல்லிவிடும் கவிதைகள். இவற்றில் 80 சதவிகிதம் கருத்தில் நிற்காத காதல் கவிதைகள் என்றாலும், ஒரு சில கவிதைகள் மனதில் ரோஜா முள்ளாக ஒட்டிக்கொள்ளவே செய்கிறன. இதோ, சில உதாரணங்கள்:

வயிற்றெரிச்சல்!
ஓட்டுப்போட
போனா
பேரையே காணோம்!

எந்தப் பெட்டிக்குள் போடுறது
என்
வயிற்றெரிச்சலை!
-புயல், ரவாங்

ஆவியின் ஜாதி..
இறந்தப் பின்னும் சமாதியில்...
ஜாதிப் பெயர்கள்.

ஆவியையும்
விட்டுவைப்பதில்லை
இவர்கள்!
-தயா யு.பி.தோட்டம்.

நிகழ்காலம்
அன்று
எங்களுக்குப் பெயர்
சொல்லபில்லைகள்
பிள்ளைகள் வேண்டும்
என்றோம்!

இன்று
பிள்ளைகள் தயவில்
எங்கள் முகவரி
முதியோர் இல்லத்தில்!...
-வசந்த முல்லை, புக்கிட் மெர்தாஜாம்

வேண்டாம்
பெண்களை பூக்களோடு
ஒப்பிடாதீர்கள்..

பூக்களெல்லாம்
இரத்தக் கண்ணீர்
வடிப்பதில்லை!

பெண்களை
நிலவுடன் ஒப்பிடாதீர்கள்..

நிலவு,
பாலியல் கொடுமையால்
இம்சிக்கப் படுவதில்லை!
-ச.விக்னேஸ்வரி, தாப்பா ரோட்

கடுகு சிறுத்தாலும் காரமற்றுப்போகுமா? கவிதை சிறுத்தாலும் கருத்தைக் கவராமல் போகுமா?! அவசர உலகத்தில், வாழ்க்கை சுறுசுறுப்பு ரயிலில் சுற்றிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பத்துப் பக்க கவிதைகளில், இதுபோன்ற கருத்துக்களைச் சொன்னால், பொறுமையுடன் நம்மால் படித்துக்கொண்டிருக்க முடியுமா? இல்லை, எழுதிக் கொடுக்க கவிஞனுக்குத்தான் நேரமிருக்கின்றதா?

புதுக்கவிதை கருத்தரங்கில் எனது ஆய்வுக் கட்டுரை (2006) - பகுதி 5

ஹைக்கூ கவிதைகள்

இதே காலகட்டத்தில், ஹைக்கூ கவிதைகளும் ஓரளவுக்கு வந்திருந்தன. மூன்றே அடிகளில் ஏழு உலகங்களை அளந்தார் ஸ்ரீகிருஷ்ணர், வாமணராக. மூன்று நான்கு அடிகளில் கருத்தை கவர்ந்து, கவனத்தை ஈர்க்கின்றனர், ஹைக்கூ கிருஷ்ணர்கள்! நாடு கண்டு வரும் முன்னேற்றத்தையும், தமிழ்பள்ளிகளின் இன்றைய நிலையையும் மிகச் சுலபாமாக, அனைவரும் புரிந்து கொள்ளும் அளவிற்கு, அழகாக படம் பிடித்துக் காட்டுகிறார் செர்டாங், ஆர்.சரவணன் இந்த ஹைக்கூவில்..

"தேசிய தினம் 47
உயர்ந்து நிற்கிறது
இரட்டைக் கோபுரம்
அண்ணாந்து பார்க்கிறது
தமிழ்ப்பள்ளி! "

இன்னும் சில நல்ல ஹைக்கூ கவிதைகள் இனையத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்தன, இவற்றைப்போல்:

சகுனம் பார்க்கும்
கணவனிடம்
எப்படித் தெரிவிப்பது
பூனை வளர்க்கும் ஆசையை?”

***
ஒரு கொசு
உயிரை விட்டது
ஜீனகாருண்ய
புத்தகத்தில்!”

உலகமெலாம் தமிழோசை பரவும் வகை செய்தல் வேண்டும் என்றான் பாவேந்தன். அதற்கேற்ப, இணையத்தின் வழியும் நல்ல விஷயங்களை தமிழ் வழி படிக்கின்ற வாய்ப்பும் இப்பொழுது இருக்கின்றது. உலகமே உள்ளங்கை அளவு குறுகிவிட்டது இணையத்தின் இயக்கத்தால். இணையத்தில் வரும் இதுபோன்ற ஒரு சில கவிதைகளை வாசகர்களின் வசதிக்காக இதழாசிரியர்கள் அவ்வப்போது பிரசுரிக்கிறார்கள். இறக்குமதி கவிதைகள் என்பதால், இவற்றையும் நாம் ஆய்வுக்கு உட்படுத்திக் கொள்ளவில்லை. இருந்தாலும், நல்ல கவிதைகள் இவை என்பதால், யாம் பெற்ற இன்பத்தை நீங்களும் பெறவேண்டும் என்ற நோக்கிலே, இவற்றையும் உங்கள் பார்வைக்கு படைக்கிறோம்.

(இன்னும் இருக்கிறது)

புதுக்கவிதை கருத்தரங்கில் எனது ஆய்வுக் கட்டுரை (2006) - பகுதி 4

புதுக்கவிதையில் வர்ணனை

புதுக்கவிதையின் முப்பெறும் உத்திகளில் ஒன்றான படிமமும் இந்த காலக்கட்டத்தில் வெளிவந்த கவிதைகளில், திறம்பட கையாளப் பட்டிருக்கின்ற்றது. இயற்கையை வர்ணிப்பதிலும் காதலை பாடும்பொழுதும், படிம உத்திகளை நிறைய கவிதைகளில் காணமுடிகிறது. பத்துமலையின் அழகினை, ஒரு கவிஞன் அழகாய் உருவகப் படுத்தி இருக்கிறான்:

“நடுக்குகையின் உச்சியில்
வானம் பார்க்க
வெற்றுக் குடை
விரித்திருக்கிறது
இயற்கை..!
-சந்துரு, சுங்கை திங்கி தோட்டம்
வர்ணனை இல்லாத காதலா? படிமம் இல்லாத காதல் கவிதையா? இந்த 121 நாட்களில் வந்த கவிதைகளில் எத்தனையோ வித்தியாசமான, வியக்கவைக்கும் அழகான வர்ணனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம், இது போல:

“அவசரமாய்
ஒரு காதல் கவிதை வேண்டும்..
காதலர் தினமாம்
கேட்கிறார்கள்..

ஏது எழுதுவது
நான்...?

உன் பார்வையில்
கவிழ்ந்து போன
கர்வத்தோடும்...
உன் புன்னகையில்
பூப்பெய்திய புலன்களோடும்... “
-செ.ராஜேஸ்வரி (சுங்கைப்பட்டாணி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி)

“உன் பார்வையில் கவிழ்ந்து போன கர்வத்தோடும்... உன் புன்னகையில் பூப்பெய்திய புலன்களோடும்...” எனும் வர்ணனை வரிகள், நெஞ்சில் நீங்கா இடம் பிடிக்கின்றன.

புதுக்கவிதை கருத்தரங்கில் எனது ஆய்வுக் கட்டுரை - பகுதி 3 (2006)

இண்டெர்நெட் காதல்

கணினி தொழில்நுட்பம், காதலையும் விட்டு வைப்பதாக இல்லை. ‘சாட் ரூமில்’ முகம் தெரியாமலேயே தினம் தினம் நூற்றுக்கணக்கான காதல் பூக்கள் மலர்ந்துகொண்டிருக்கின்றன, நிமிடத்துக்கு நிமிடம். இதில் சில பூக்கள் மணம் வீசி மகரந்தங்களை பரப்பினாலும், பெரும்பாலான காதல், காமத்துக்காகவே என்றாகிவிட்டது. இதில் வேதனை என்னவென்றால், சில வேலைகளில்.. இந்த கவிதையை படித்துப் பாருங்கள்:

இண்டெர்நெட் காதல்!
இண்டெர்நெட்
காதல் வைரஸ்
ஆயிரம் வாட் ஈர்ப்பு..
சந்தோசம்..
பூர்வ ஜென்ம பந்தம்
வார்த்தை ஜாலம்
நேரில் காணாத வரை..!
கண்டதும்
வேதனை
ஏமாற்றம்
குற்ற உணர்வு..!
அப்பனும் மகளும்!

-சா.வேலா, மாசாய்


புதுக்கவிதையில் சமுதாயச் சிந்தனைகள்

ஒரு கவிஞன் சமுதாயச் பிரச்சனைகளை எழுத, தன் எழுதுகோலுக்கு மையூற்றுகிறானோ, அப்பொழுதுதான் ‘கவிஞன்’ என்கிற அங்கீகாரம் அவனுக்கு தரப்படுகின்றது. பிரச்சனைகளை கண்டு வெறுமனே புலம்பிக்கொண்டிருக்காமல், தூங்கிக்கொண்டிருக்கும் சமுதாயத்தை கவிதைச் சாட்டையால் ஓங்கி அடித்து எழுப்புபவன்தான் கவிஞன். இதைச் செய்ய கவிஞனுக்கு ஒரு தெளிந்த சிந்தனை தேவை. தைரியம் தேவை. அரசியல் வாள்கள் இவர்களின் கைகளை அறுத்தெரிய, பேனாக்களை பொடிப்பொடியாக்க காத்துக்கொண்டிருக்கும். இலக்கியமும் போர்க்களம்தான்.

இந்த ஆய்வுக்காக நான் எடுத்துக்கொண்ட புதுக்கவிதைகளில் ஏறக்குறைய 15 விழுக்காடு கவிதைகள், இதுபோன்ற சமுதாயச் சங்கதிகளை உள்ளடக்கியிருந்தவை. மாதச் சம்பளப் பிரச்சனை, பல்கலைக்கழக மாணவர் சேர்ப்பு பிரச்சனை, ஜாதிப் பிரச்சனை, அரசியல் சீர்கேடுகள், வட்டி முதலைகள்.. இப்படி என்னும் எத்தனையோ சமுதாயப் பிரச்சனைகளை, இந்த கவிதைகளில் பலவித கோணங்களில் படம் பிடித்துக் காட்டியிருந்தனர்.
எங்களின் ஒட்டுமொத்த இளைஞர் கூட்டமே, கூனிக் குறுகி வளைந்து கிடக்கும் முதுகெலும்போடு வாடிக்கிடக்கிறது. அந்த வாடிய பயிர்கள் வீறு கொண்டு எழ ‘வியாக்ரா’ வேண்டும் என ந.பச்சைபலனின், “வேண்டும் வியாக்ரா..” கவிதை நெஞ்சில் நிற்கிறது.
“எங்கள் பொருளாதாரக் கோடுகள்
பூஜ்யங்களை நோக்கியே
புன்னகைக்கின்றன..

எங்கள் கல்விக்கோடுகள்
மகஜர்களோடு
மல்யுத்தம் நடத்துகின்றன..

ஒட்டு மொத்தமாய்
எங்கள் இளைஞர்களின்
முதுகெலும்பைத் தடவிப்பார்த்தேன்..

எல்லாம்
வளைந்து வளைந்து
குனிந்தே இருக்கின்றன

இனி சிட்டுக்குருவி லேகியத்தாலும்
நாங்கள்
சமாதானமடைய சாத்தியமில்லை
வியக்ரா வேண்டும்..

இந்த கவிதை இன்றைய இளைஞர்களுக்கு நிச்சயம் ஒரு ‘வியாக்ரா’வாய் புத்துணர்வு ஊட்டியிருக்கும், ஒரு சில நிமிடங்களுக்காவது! கவிதையில், கவிஞரின் சொல்லாட்சி தெரிகிறது. கைகொடுத்திருக்கிறது. இருந்தாலும், கவிஞர் வியாக்ராவை விவரிக்காமலேயே விட்டு விட்டார். இருண்மைப் பண்பில் இவர் சொல்லி இருக்கும் ‘வியாக்ரா’ எதுவென்று, தொலத்துவிட்ட வாழ்க்கையை தேடி குனிந்து கிடக்கும் இளைஞர்களுக்கு விளங்குமா?

இன்றைய சூழ்நிலையில், நம்மவர்களின் பொருளாதார வலிமை என்ன என்பது அனைவரும் அறிந்ததே! நிலைமை இப்படி இருக்க, கல்வி ஒன்றினால்தான் சமுதாய மேம்பாடு கிடைக்கும் என்ற கட்டாயம். அந்த நம்பிக்கையும் நசுங்கிப்போகும் வகையில் நாட்டின் பல்கலைக்கழக மாணவர் சேர்ப்பு முறை! இந்த சமூக பிரச்சனையையும், கவிஞர்களின் பேனாக்கள் படம் பிடிக்க தவறவில்லை. சிலர் நாசுக்காக சொல்லியிருக்கின்றனர்.. ஒரு சிலர், சிதறு தேங்காயாய் பட்டென்று போட்டு உடைத்திருக்கின்றனர், இந்த கவிதை போல..

“கல்விக் கசடற கற்றும்
ஊசி போட
ஒருத்தனுக்கே இடம்...”
(தலைமையா.. இயலாமையா.. : வீர. இராமன், சிம்பாங் ரெங்கம்)

ஆதங்கத்தை வெளிப்படுத்துவது மட்டும் கவிஞர்களின் வேலையல்ல. அதற்கான தீர்வையும் தீர்க்கமாக சொல்ல வேண்டிய கட்டாயம், அவன் கவிதைகளுக்கு உண்டு. அப்படி, இந்த நான்கு மாத கவிதைகளில், தீர்க்கமான கருத்துக்களை அதிகம் காண முடியாதது வருத்தம் தான்! இனி வரும் காலங்களில், இந்த நிலை மாறும் என்று எதிர்பார்ப்போம்.

மாதச் சம்பளப் பிரச்சனையைச் சொல்ல வந்த கவிஞர்கள் பலர் தங்களுடைய பேனாக்களில் கண்ணீரூற்றி எழுதிருந்தனர்.. ஒரு சிலர் நெருப்பினால் சுட்டு சுட்டு எழுதியிருந்தனர். ஏழை பாட்டாளி மக்களுக்காக, அவர் படும் இன்னல்களுக்காக எழுதப்பட்ட கவிதைகளில், தோட்டப்புற வாழ்க்கையை படிமம் மற்றும் குறியீடு போன்ற உத்திகளில் மெருகேற்றி இருந்தனர். பட்டணத்தில் இருக்கும் பலரை, அவர்களின் நினைவலைகளை இந்த கவிதைகள் அவர்களின் கடந்த காலங்களை கண் முன்னே நிறுத்தி இருக்கும். அவர்களின் இன்றைய பிரச்சனைகளை உணர்த்தியிருக்கும்!

ஒரு கவிஞர், தனது கோபத்தை தனை வளர்த்த மண்ணின் மீது காட்டுகின்றார். பொறுத்துக் கொண்டிருப்பதே பூமித்தாயின் குணம் என்பதாலோ என்னவோ..

“இந்த மண் ருசி
தெரிந்து வைத்திருக்கிறது..
வேண்டியவர்களுக்குப்
பழத்தையும் தானியத்தையும்
தருகிறது!
எங்களுக்கு
அருந்த முடியாத
ரப்பர் பால்!”
-(ரப்பர் பால்: சை.பீர்முகம்மது)

ஒரு உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். முன்னூறு ரிங்கிட் மாதச் சம்பளம் என்பது, நாட்டின் வறுமைக் கோட்டுக்கும் கீழே என்பதுதான் அது! அந்த முன்னூறு ரிங்கிட் சம்பளத்தைக் கூட தர தோட்ட முதலாளிகள் சங்கம் மறுப்பது வேடிக்கை. நாடே பொருளாதார நலிவில் சிக்குண்டபோது, ஒரே ஒரு துறை மட்டும்.. பன்மடங்கு இலாபத்தை ஈட்டியது! நிர்வாகத்துறையினருக்கு பல மாத போனஸ¤களும் கிடைத்தன. அதுதான் தோட்டத் தொழில்துறை. அமெரிக்க டாலரின் ஏற்றத்தோடு, செம்பனை மற்றும் ரப்பர் விலைகளும் அனைத்துலக சந்தையில் ஏற்றம் கண்டது. இலாபகரமான தொழிலாக இன்னமும் இருந்து வருகிறது. இருந்தும் மாதச்சம்பளப் பிரச்சனைக்கு மட்டும் இன்னமும் சுமூகமான தீர்வு ஒன்று பிறந்தபாடில்லை! பிறந்துவிட்டால், அரசியலில் சாதிக்க, சண்டை போட, அரசியல் நடத்த வேறொன்றும் இல்லாமல் போய்விடுமே என்ற அச்சமோ? தொழிலில் பன்மடங்கு இலாபங்கள் தோட்டங்களின் கூரைகளில் கொட்டிக்கொண்டிருக்க, ஒழுகும் கண்களுடன் தொழிலாளி! வெறும் முன்னூறு ரிங்கிட் மாதச்சம்பளம், அதைத் தீர்த்துவைக்க ஆளில்லாமல் ‘இழுவை’யில் நிற்கின்ற அவலத்தை..
“பால்தோட்ட பிதாக்களே!
இழுவையில் நிற்பது
‘முன்னூறா..
ஓய்ந்து போகாத ஏழையின்
கண்ணீரா...?”

என்ற ப.அ.சிவத்தின் வரிகள், ஏழைகளின் வேதனையை நமக்கு இனம் காட்டுகின்றன. நம் இளம் தொழிலதிபர்களை உலுக்கி எடுத்த இன்னொரு பிரச்சனையும் இந்த காலக்கட்டத்தில் அதிகம் பேசப்பட்டது. வட்டி முதலைகள். இந்த பிரச்சனையையும் படம் பிடித்து காட்டியிருந்தன ஓரிரு கவிதைகள், இப்படி:

“முதலை கூட இறந்துவிட்டால்
முதுகுதோல் பயன்படுமாம்..
வட்டி முதலை இறந்துவிட்டால்
கழுகுந் தின்ன பயப்படுமாம்!”
-(கலிகால அசுரன்: ஆர்.சரவணன், செர்டாங்.)
பி.கு: தோட்டத் தொழில் துறை நல்ல இலாபத்தை ஈட்டுகிறது என்று சொன்னேன். அன்று அது (2005) உண்மை. இன்று அந்த துறை சற்று பின்னடைவை எதிர் நோக்கியிருக்கிறது என்பதும் உண்மை..)
(இன்னும் தொடரும்)

Monday, February 16, 2009

புதுக்கவிதை கருத்தரங்கில் எனது ஆய்வுக்கட்டுரை- பகுதி 2 (நவம்பர் 2006)

இந்த நிலையிலும் தாய்த் தமிழைத தவறாது கற்பவர்களை நாம் மனமார பாராட்டத்தான் வேண்டும். கவிதை எழுத ஆர்வத்தோடு பேனா பிடிக்கும் அந்த கரங்களோடு கைகுலுக்கத்தான் வேண்டும். இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால், தென்றலில் வெளிவந்த ஒரு கவிதை!


Nii Illaamal...

Malai illaamal Niir Illai...

Kadal Illamal Alai Illai...

Kilai illamal ilai illai...

Pagal illaamal iravu illai...

Suvaasam illaamal uyir illai...

Uyir illaamal yaavum illai...

Nii illaamal naan illaai endrum!

-Bintang 2003, Seremban


ஆங்கில எழுத்துக்களை (Romanised Tamil) கொண்டு தமிழ்க் கவிதை! இது கவிதையா இல்லையா - விவாதிப்பதில் விருப்பமில்லை எனக்கு. இது போன்ற படைப்புக்கள் வெளிவர தொடங்கிவிட்டன. இந்த நிலைக்கு யார் காரணம்? தமிழில் எழுத படிக்க, கற்க வேண்டும் எனும் ஆவல் ஏற்படாமல் போனதற்கு யார் காரணம்?

இத்தனை சிரமங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் மத்தியில் புதுக்கவிதை தன் சிருங்கார சிறகுகளை விரித்து இலக்கிய வானில் இளைப்பாறாமல் பறக்கிறதென்றால்.. அதன் பெருமை, எங்கள்இளைய தேசத்துஇலக்கியவாதிகளையே சாறும். நல்ல கவிதை எழுதுபவர்களில் பெரும்பாலானோர், தமிழாசிரியர்களாகவும் பல்கலைக் கழக மாணவர்களாகவும் இருக்கின்றனர். இவர்களுக்கு மத்தியில் மரபை எழுதி பெயர் வாங்கிய கவிஞர்களும், புதுக்கவிதையின் வேருக்கு கொஞ்சம் உரமிட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி!!!

இலக்கிய களவுகள்
ஒரு சில கவிதைகளை படிக்கும் போது, “எங்கோ படித்தது போல இருக்கிறதே!” என்ற எண்ணம் தோன்றுகிறது. உதாரணத்திற்கு;

காதலித்துப்பார்
காதலித்துப் பார்- கதைகள் சொல்வாய்...
காதலித்துப்பார்- மழையும் மாளிகையாகும்
காதலித்துப்பார்- பாதங்களால் பாலம் கட்டுவாய்

இப்படி ஒரு கவிதையை, ஜொகூர் மாச்சாயிலிருந்து வீரா. இராமன், எழுதியிருந்தார். வைரமுத்துவின்இந்த பூக்கள் விற்பனைக்கல்லபுத்தகத்தை படித்தவர்களுக்கு, இதே தலைப்பில் அவர் இயற்றிய கவிதை நிச்சயம் நினைவுக்கு வரும்! இது இலக்கியத் திருட்டா அல்லது வைரமுத்துவின் தாக்கமா? சில வேளைகளில், இது போன்ற கவிதைகள் இதழாசிரியர்களின் கண்களில் கறுப்பைத் தடவி, விடிந்துவிடுகின்றன!

(திரு வீரா.இராமனுக்கு வயது அப்போதே ஐம்பது இருக்கும் என்பதை அவரில் இக்கருத்தரங்கில் நேரில் சந்தித்த போது உணர்ந்தேன்! அவர் தொடர்ந்து சொந்தமாக எழுத வேண்டும் என்பதே எனது அவா..)


கவிதைகளில் ‘சினிமா’ சாயல்
இந்த 121 நாட்களில் வெளிவந்த கவிதைகளை அலசிப்பார்க்கும் பொழுது, சினிமா பாடல் வரிகளை காப்பியடித்து, மாற்றியமைத்து வெளிவந்தபடைப்புக்களும்நிறையவே காணப்பட்டன. காப்பியடிப்பது கூட திறமைதன். ஆனால், அதைக்கூட சிலர் ஒழுங்காய்ச் செய்யவில்லை! இதோ ஒரு உதாரணம்:


பொறுப்பு
என் இனிமைக்கு நீ பொறுப்பு
என் தனிமைக்கு நீ பொறுப்பு
என் கனவுக்கு நீ பொறுப்பு
என் கண்ணீருக்கும் நீ பொறுப்பு..

உன் மலர்ச்சிக்கு நான் பொறுப்பு
உனை மணமுடிப்பதென் பொறுப்பு
உன் இரவுக்கு நான் பொறுப்பு
கனவுக்கு நான் பொறுப்பு!

-ஏஞ்சல் பொண்ணு, பூச்சோங்

அந்த வரிகளில் ஒரு சினிமா பாடல் தெரிகிறதே தவிர, கவிதை கடுகளவும் இல்லை! இதுபோன்ற நிறைய கவிதைகள் இந்த நான்கு மாதத்தில் வெளிவந்திருந்ததால், அவற்றையும் ஆய்வுக்கு நான் எடுத்துக்கொள்ளவில்லை.


ஆயின், நான்கு மாதங்களில் நல்ல படைப்புக்களே இல்லையா? என்று நீங்கள் கேட்கலாம். இருந்தன! புற்கள் எண்ணிக்கையில் அதிகம் என்றாலும், நெற்கதிர்கள் அதைவிட உயரம் என்பதால் அவற்றை கண்டுகொண்வதில் அதிக சிரமத்தை எதிர்கொள்ளவில்லை நான்.

புதுக்கவிதைகளில் உத்திகள்
இந்த நான்கு மாத கவிதைகளை வாசித்துப் பார்க்கும்பொழுது, என்னையும் அறியாமல், என் விழிகள் ஒருசில கவிதைகளை மொய்க்கத் தவறவில்லை. கவிஞர்களின் சிந்தனாசக்தியையும் அவர்கள் கையாண்ட உத்திகளையும் கண்டு நம் நாட்டிலும் எத்தனையோ படைப்பாளிகள் இலைமறைகாயாகஇருப்பது கண்டு மனம் கொஞ்சம் நிம்மதி அடைந்தது. ‘காய்கள்பழுத்தால், அதன் வாசமே அவற்றுக்கான முகவரியாகிவிடும் என்பதே என் கருத்து.

இந்த பெருமைக்கும் வளர்ச்சிக்கும், தமிழ் எழுத்தாளர் சங்கம் தொடர்ந்து நடத்தி வரும் புதுக்கவிதை திறனாய்வு கருத்தரங்குகள் முக்கிய காரணம் என்பதை இந்த கருத்தரங்களில் கலந்து கொள்பவர்கள் மறுக்க மாட்டார்கள். டாக்டர் வே. சபாபதி அவர்களின் பங்கையும் யாரும் மறக்க மாட்டார்கள். நன்றி மறப்பது, தமிழுக்கும் தமிழனுக்கும் தெரிந்திராத ஒரு பண்பு!

ஏனோதானோ என எழுதிய காலம் இப்பொழுது சற்று மாறத்தொடங்கி இருக்கிறது. அதற்கு, இந்த நான்கு மாதத்தில் உள்ளூர் புதினங்களிலும் பத்திரிக்கைகளிலும் வெளிவந்த கவிதைகளில் என் கவனத்தை ஈர்த்திழுத்த இந்த வரிகள் சான்று.

முரண்
காதல் பிடிக்காதவன்..
கவிதைக் கருத்தரங்கில்
முதல் வரிசையில்...!

கரு
இருவர் பசியாறலில்
ஒருவர் வயிறு நிரைந்தது!

உறக்கம்
மரண ஒத்திகை..

கணவு வாசல்..

நீ கூட குழந்தை உருவில்..!

-(மணிராமு, சுங்கைப்பட்டாணி)

கவிஞர், முரண், குறியீடு மற்றும் படிம உத்திகளை அழகியற் கூறுகளோடு கையாண்டிருக்கின்றார். ஒவ்வொரு பாடு பொருளையும் புதிய கோணத்தில் படம் பிடித்திருக்கிறார்.

இன்னும் நிறைய கவிஞர்கள், இதுபோன்ற உத்திகளை கவனமாகவே கையாண்டிருக்கிறார்கள். முரண், இவர்களில் அநேகருக்கு கச்சிதமாய்க் கைகொடுத்திருக்கிறது. இதோ அதற்கொரு சான்று:


“மண்ணிக்க வேண்டும்
ஆழமாய் நேசித்தால்
வெறுப்பு வரும் என்கிறார்கள்
முயற்சி செய்கிறேன்
உனை வெறுப்பதற்கு!!

-நிஷா, தலைநகர்.


கவிதைகளில் காதல்
காதல் கவிஞனை பிரசவிக்கின்றது. அதனால்தானோ என்னவோ, எப்பொழுதுமே கவிதைகளில், காதல் முதன்மை வகிக்கின்றது. இந்த நான்கு மாதத்தில் வெளிவந்த கவிதைகளில், 65 சதவிகிதம் காதலுக்காகவும், காதலர்களுக்காகவுமே பேனாக்களிடமிருந்து விடைபெற்றிருக்கின்றன. காதலின்பால் சிக்குண்டு தவிக்கும் இளசுகளின் அநுபவமே, பெரும்பாலும் அவர்களின் கவிதையாய் வெளிப்படுகிறது. சிலரின் கவிதைகளை படிக்கும் பொழுது, சிலிர்க்கிறது. சில கவிதைகளினால் சத்தமில்லா சிரிப்பு வருகின்றது. இன்னும் சிலரின் கவிதைகளை படிக்கும்போது, நமக்கும் காதல் வருகிறது, கவிதையின் மேல்! உதாரணத்திற்கு ஒரு வரி...


என் ஜீன்சுகளை
நனைத்திருக்கும்
அவளது கண்ணீரின் ஆழத்தில்
நான் மூழ்கிப்போனதுண்டு!”

-செல்வம் அர்ஜுனன், சுங்கைப்பட்டாணி.

காதலிலும் சரி, குடும்ப வாழ்விலும் சரி, ஆண்களை வீழ்த்த பெண்கள் பயன்படுத்துவது இரண்டு ஆயுதங்கள்: கவின் சிரிப்பு; கண்ணீர். இந்த இரு ஏவுகணைகளை எதிர்த்திடும் சக்தியும் யுக்தியும் இன்னும் கண்டு பிடிக்கப்படாத நிலையும், பாவம், கவிஞன் இவன் என் செய்வான்? அவன் சொல்ல வந்த கருத்தைஇருண்மை பண்புகலந்து கூறியிருப்பதாகவே நான் கருதுகிறேன்.

வழக்கமான காதல் கவிதைகளையே பார்க்க முடிந்த நமக்கு, .பச்சைபாலனின்காற்பந்து ரசிகன் காதலிக்கிறான்”, என்ற கவிதை நல்ல விருந்து! குறியீடு, படிமம், அங்கதம் என்று கவிதைக்கு அழகு சேர்த்திருக்கிறார்.

“உனை அடைய விடாமல்
தற்காப்பு அரணமைத்து
உன் அப்பா
தடுத்துக்கொண்டே இருக்கிறார்..

மஞ்சள் அட்டைக்கும்
தகுதி பெறாத
சின்னச் சின்னத் தவறுகளுக்கு
அவசரமாய் நீட்டுகிறார் சிவப்பு அட்டை!”

என்ற வரிகள்.. அவசர அவசரமாய் அடுத்த வரிகளை படிக்கச் சொல்லி கவனத்தையும் கண்களையும் தூண்டுகின்றன.

தடையெல்லாம் தாண்டி
பெனால்டி பெட்டிவரை முன்னேறினாலும்
உன் இதய வலைக்குள்
புகுந்து விடும் யுக்தி
எனக்கு இன்னும் புரியவே இல்லை!”

வித்தியாசமான சிந்தனைகள்.. அழகான குறியீடுகள்.. மனதில் நிற்கின்றன. இதில், பெரிய கருத்துக்கள் ஒன்றும் இல்லையென்றாலும், சொல்ல வந்த விஷயத்தை, அழகியற்கூறுகளோடு சொல்லி இருக்கிறார் கவிஞர். அவருக்கு, புதுக்கவிதையின் முப்பெறும் உத்திகளும் கை கொடுத்திருக்கின்றன.

(இன்னும் தொடரும்..)

Sunday, February 15, 2009

புதுக்கவிதை கருத்தரங்கில் எனது ஆய்வுக்கட்டுரை- பகுதி 1 (நவம்பர் 2006)

என்னுரை.

என்னுள்..

‘ழ’கரமாய், இலயித்துக் கொண்டிருப்பவளே....

என்னைச் சிகரமாய் செதுக்கிக் கொண்டிருப்பவளே..

தமிழே..

உன்னை உரிமையோடு வணங்கி என் உரையை தொடங்குகின்றேன்..

என்னுள் நீயிருந்து.. காப்பாய் தேவி!!


புதுக்கவிதை.

கவிஞர்கள் பலருக்கு இது ஒரு கெட்ட வார்த்தை. இளைய தலைமுறை இலக்கியவாதிகளுக்கோ, இது ஒரு போதிமரம். அவர்களின் சிந்தனா சக்தியும், கற்பனை ஆற்றலும் கூடு கட்டி வாழும் ஆலமரம்.


எந்த மொழிக் கவிதை என்றாலும், சொல்ல வரும் கருத்துக்கள் அழகியற்கூறுகளோடு (Aesthetic elements) சொல்லப்படும்போதுதான், கவிதை.. கவிதையாகின்றது. காண்போரையும் கற்போரையும் கவர்ந்து ஈர்க்கிறது. அங்கதமானாலும், படிமமானாலும், குறியீடானாலும் தொண்மையானாலும்.. இந்த உத்திகள் எல்லாம் அழகியற்கூறுகளால் வடித்தெடுக்கப்படும்போதுதான், வார்த்தெடுக்கப்படும்போதுதான், அந்த கவிதை கணக்கிறது, சுவைக்கிறது, மனதில் பதிகிறது. வார்த்தைகள் வரையும் ஓவியம்தானே கவிதை! இந்த விஷயத்தில், புதுக்கவிதை ஓரளவுக்கு வெற்றி நடை போடுகிறது என்பதுதான் உண்மை.


புதுக்கவிதை, தமிழ் தாய் கண்ணயர, களைப்பாற கட்டப்பட்ட ‘புதிய’ தொட்டில் அல்ல. அவள் வெற்றி நடை போட்டு, தமிழ் வாழும் உள்ளங்களிலும் இல்லங்களிலும் வசந்தமாய் பவனி வர, அமைத்துக் கொடுக்கப்பட்ட ‘புதிய’ நெடுஞ்சாலை!


கைப்புண்ணுக்கு அறுவைச்சிகிச்சை தேவையில்லை.. ஐயோடின் போதும்! எங்கள் பாமரர்களின் சோகத்துக்கு, சுகத்துக்கு, போராட்டங்களுக்கு, புதுக்கவிதை போதும்! இன்னொரு புதுக்கவிதை இந்த நேரத்தில் நினைவுக்கு வருகிறது..


ஊமை

அன்னிய மொழியின் ஆதிக்கம்..

பேசத்தெரிந்தும்

ஊமையாய் கிராமவாசி !

-யாரோ


வேற்றுமொழி தெரியாததால், வாயிருந்தும்.. நன்றாய் பேசத்தெரிந்தும்.. பேசமுடியாத கிராமவாசிகளை, பாமரர்களை.. ஊமை என்கிறார் கவிஞர். நல்ல சொல்லாற்றல் இருந்தும், சிந்தனாசக்தி இருந்தும்.. யாப்பு தெரியாத எங்கள் இளைய சகோதரர்களும் ‘ஊமை’யாகிவிட்டனர் ‘மரபு’களின் மத்தியில்!
அப்படியென்றால் புதுக்கவிதையை எப்படி வேண்டுமானாலும் எழுதலாமா? அதெல்லாம் புதுக்கவிதை என்றாகிவிடுமா? அதுவும் இல்லை..


இந்த நான்கு மாதத்தில் வெளிவந்த கவிதைகளை பார்க்கும் பொழுது, பல படைப்பாளிகள், உரை நடையை உடைத்துப் போட்டு கவிதையாக்கியிருப்பது வேதனையளிக்கிறது. உதாரணத்திற்கு:

மாதச் சம்பளம்

மலை ஏறி

மரத்தைச் சீவுகிறார்கள்

மழை பாராமல்

வியர்வை சிந்துகிறார்கள்..
குறை அறியாமல்

இரவும் பகலும்

பாடுபடுகிறார்கள்..

ஆனால்

அவர்களின் குறை அறிந்தும்

ஊதியத்தை உயர்த்த மறுக்கிறார்கள்..
-(யுவனேஷ்வரன் வேலு, காராக் - நயனம் 3.3.2004)


இது கவிதையா? உரைநடையாகத் தானே தெரிகிறது. புதுக்கவிதையின் பலமே, புதிய சிந்தனைகள்தான், புதிய விஷயங்கள்தான், அழகியற்கூறுகள்தான். அவை இல்லாவிட்டால், புதுக்கவிதை என்ற வாள், இலக்கியப் போருக்கு உகந்ததாகாது! மாதச்சம்பளத்தை, அதன் முக்கியத்துவத்தை புதிய கோணத்தில் படப்பிடிக்க இவரது எழுதுகோல் தவறிவிட்டது!


உலகம் தொழில்நுட்பத்தை நோக்கி விரைவு இரயிலில் விரைந்து கொண்டிருக்க, இன்னமும் மாதச் சம்பளப் போராட்டம் நமக்கு தேவையா? அது ரப்பர் பாலாய் இழுத்துக்கொண்டேதான் இருக்கும். ரப்பர் தோட்டங்களில் கேள்விக்குறியாய் வளைந்து போனவனை தொழில்நுட்பத் தோட்டத்திற்கு புதுக்கவிதை பேனாக்கள் துரத்தவேண்டாமா? புதிய சிந்தனைதானே புதுக்கவிதை பேனாக்களின் மை!


வெறும் உரைநடையை உடைத்து போட்டு கருத்தே இல்லாத இன்னும் எத்தனையோ படைப்புக்கள், நம்மை முகஞ்சுளிக்க வைக்கின்றன. இப்பொழுதெல்லாம், புதினங்கள் சிலருக்கு தபால் நிலையங்களாக மாறிவிட்டன. டி.ராஜேந்தர் ஸ்டைலில், நிறைய வசன நடை ‘கவிதை’கள்.. இதோ இன்னொரு உதாரணம்:


முற்றுப்புள்ளி

அன்பே என் வள்ளி

தந்தேனே என் அன்பை அள்ளி

மறுத்தாயே காதலை காரணம் சொல்லி

இறுதியில் வைத்தாயே என் மனதில் கொள்ளி

ஆக மொத்தம்நம் காதலுக்கு முற்றுப்புள்ளி!

(நியூ சிட்டிசன், ஜாசின்)


இதுபோன்ற படைப்புக்களையும் இதழாசிரியர்கள் பிரசுரிக்கத்தான் செய்கிறார்கள். வாடிக்கையாளர்களை... கவிதை எழுத ஊக்குவிக்கிறார்களோ...?! இதுவே வாடிக்கையாகிவிடாமல் இருந்தால், கவிதை பிழைக்கும்.


இன்னும் ஒரு சிலர், பொன்மொழிகளை உடைத்துப்போட்டு, கவிதையாக்க முயன்றிருக்கிறார்கள்! ஒன்றன்கீழ் ஒன்றாக உரைநடைகளையும், பொன்மொழிகளையும் உடைத்துப்போடும் இது போன்ற ஒரு சிலரால்தான், புதுக்கவிதை எனும் வார்த்தையே ஒரு சிலருக்கு பிடிப்பதில்லை! உதாரணத்திற்கு:


பிரச்சனை!

பிரச்சனைகளைத் தீர்ப்பவன் தெம்படைகிறான்

சினம் கொள்பவன்அமைதி இழக்கிறான்..

சிந்தித்துச் செயல்பட்டால்
மன அமைதியும் நிம்மதியும்

நிரந்தரமாகி விடும்!

-வெற்றி இதழில் வந்த ‘கவிதை’.


ஏதோ, காலண்டரில் படித்த பொன்மொழிகளை ஒன்றன் கீழ் ஒன்றாக அடுக்கி வைத்திருக்கிறார். இதை எப்படி கவிதை என்பது?!


எதிர்பார்க்காத ஒரு விஷயத்தை யதார்த்தமாக ஒரு கவிஞன், வித்தியாசமாக படம் பிடித்துச் சொல்கிறானென்றால், என்னைப் பொருத்தவரை, அதுதான் கவிதை. இதைப்போல..


புத்தகம்

சொல்லிலும்

‘கம்’ இருப்பதால்தான்

அதனை

யாரும் திறப்பதில்லையோ?!

(பா.ராஜேஸ்வரி, குளுவாங்)


• ஆய்வு
இந்த ஆய்வுக்காக, கடந்த ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் (2004), நான்கு மாதங்களில் வெளிவந்த தென்றல், மன்னன், நயனம், வெற்றி, செம்பருத்தி, முத்தமிழ் போன்ற புதினங்களும், மக்கள் ஓசை, மலேசிய நண்பன், வானம்பாடி, உயர்வோம் போன்ற பத்திரிக்கைகளும் என் பார்வைக்காய் என்னிடம் தரப்பட்டன. இவற்றில் நான் கண்ட மொத்த படைப்புக்கள் 682. இவை அத்தனையையும் வாசித்தேன், ஆராய்ந்தேன். சிலவற்றின் தலைப்பே அவற்றுக்கான முகவரியாய், படிக்கும் ஆவலை தூண்டின. சிலவோ, முதல் வரியிலேயே... என் பொறுமையின் எல்லையை சோதித்தன! ஆய்வோடு நின்றுவிடாமல் அபிப்பிராயம் கூறுவதும் கடமை என்று உணர்கிறேன். ஆகவே, இது வெறும் ஆய்வு மட்டும் அல்ல, விமர்சனம்.


கிடைக்கப்பெற்ற 682 படைப்புக்களில், பாராட்டுக் கவிதை, இரங்கற்பா, நன்றி கூறும் கவிதை, கட்டுரைகளில் தலைகாட்டிய கவிதைகள், தொடர்கவிதைகள் போன்றவை ஆய்வுக்கு ஏற்புடையவை அல்ல என்பதால் அவற்றை தவிர்த்து விட்டேன்! மேலும் பல படைப்புக்களை கவிதைகளாக ஏற்றுக்கொள்ள ‘இலக்கியக் கண்’ மறுத்ததால், 340 கவிதைகளை மட்டும் ஆய்வுக்கும் விமர்சனத்திற்கும் எடுத்துக்கொண்டேன்.


கவிதையின் ஆய்வை தொடங்குமுன், கவிதை எழுதுபவர்களின் பின்னணியை சற்று ஆராய்ந்து பார்க்கவேண்டுமல்லவா?


தோட்டத் தொழிலாளர்களாய் இங்கு நாம் குடியேறுவதற்கு முன்பாகவே, கடாரத்தை வென்று ஆட்சி புரிந்தவர்கள் நாம். இந்த சரித்திரம் கொஞ்சம் கொஞ்சமாய் ஏடுகளிலிருந்து ‘சரிக்க’ப் பட்டுக்கொண்டிருக்கிறது என்பது வேதனை. இது இப்போதுள்ள சரித்திர பாடப்புத்தகங்களை பார்ப்பவர்களுக்கு புரியும். நம்மவர்களே இப்பொழுது தம் பிள்ளைகளை தமிழ்பள்ளிகளுக்கு அனுப்ப தயங்குகின்றனர் என்பது இன்னொரு வேதனை! இது அவர்களின் குற்றமும் இல்லை. தமிழ்ப் பள்ளிகளின் குற்றம். தரம் இருந்தால், எந்த ஒரு பொருளுக்கும் தேவை (demand) இருக்கும். இந்த நிலையில், தமிழர்கள் மத்தியில் தமிழ் கற்பவர்கள் குறைவு. அப்படி கற்பவர்கள், ஆறாம் வகுப்பிற்கு மேல் அதை தொடர்வது அதைவிட குறைவு! காரணம், அரசாங்கத் தேர்வுகளில் தமிழ் வினாத்தாட்களை திருத்தும் ஆசிரியர்களின் போக்கு. தமிழ் மொழியில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை ஆராய்ந்தால் இந்த உண்மை புரியும். ஆறாம் படிவத்தில் தமிழ் மொழி தாளுக்கும் மற்ற மொழி தாட்களுக்கும் உள்ள வித்தியாசத்தை ஆராய்பவர்களுக்கு இந்த உண்மை புரியும்!


இங்கே, எந்தப் பள்ளியிலும், ஆறாம் படிவத்துக்கான வகுப்புக்கள் நடத்தப்படுவதில்லை. ஆனால். இன்னமும் நிறைய மாணவர்கள் ஆறாம் படிவத்தில் தமிழை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், எத்தனை பேர் நல்ல முறையில் தேர்ச்சி பெறுகின்றனர்?!


தமிழ் மொழி தேர்வில் தோற்றவர்கள்தான் அதிகம் எனும் நிலையில், தமிழை ஒரு பாடமாக எடுக்க எந்த ஒரு சராசரி மாணவனும் முன்வர மாட்டான். தமிழ் சோறு போடாது என்பது போய்.. இப்பொழுது தமிழ் ‘மார்க்’ போடாது என்றாகி விட்டது! இது தமிழ் தாட்களை தாயாரிப்பவர்களும், திருத்துபவர்களும் இம்மண்ணில் புரிந்த சாதனை. இன்னும் கொஞ்ச நாட்களில் யாருமே தமிழ் தாட்களின் பக்கம், மறந்தும் தலை வைக்கக் கூடாது என்ற எண்ணமோ! அவர்களுக்கு பிறகு, அந்த பதவிகளே இருக்கக்கூடாது என்ற ‘பெரிய’ மனமோ தெரியவில்லை.. ஆனாலும், தமிழ் ‘செடி’யல்ல.. விருட்சம்..!

(தொடரும்)