தமிழோடு வாழ்பவன்..

My photo
சுபாங் ஜாயா, சிலாங்கூர், Malaysia
மனிதத்தை மதிக்கும் மனிதன்..

Saturday, February 28, 2009

புதுக்கவிதை கருத்தரங்கில் எனது ஆய்வுக் கட்டுரை (2006) - பகுதி 8

பரிசுக்குரிய கவிதைகள்
• முதல் பரிசு

காதல் என்பது பொதுவுடமை. இன்றைய காதல் இளையோர்களுக்கு மட்டுமே என்ற வழக்கமான சிந்தனைகளைத் தாண்டி ஒரு கவிதை! நமது இன்றைய நிலையையும், சமுதாயத்தில் காதல் படும் பாட்டையும், தள்ளாத வயதில் பெற்றவர்களுக்கு துணை ஒன்று தேவை என்று புரிந்துகொள்ளக்கூட நேரமில்லாத பிள்ளைகளின் கன்னங்களில், ‘பளார்’ என அறைந்தார்போல் அந்த தேவையின் நியதியை, காதலின் ஆழத்தை உணர்த்துகிறது இந்தக் கவிதை. வாழ்க்கையின் கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருப்பவர்களுக்கு, உண்ண உணவும், உடுக்க உடையும் மட்டும் போதும் என்று எண்ணுபவர்களுக்கு, இது ஒரு நல்ல சாட்டை அடி! பிள்ளைகளிடம் பெற்றவர்கள் சொல்லியழ முடியாத துயரத்தை, தவிப்பை கவிஞர் கவிதையாய் வடித்திருக்கிறார்.. நமது பண்பாட்டின் கண்ணாடிச் சுவர்களை உடைத்தெரியாமல்..

நம்ம காதல்
உன்மேல் எனக்கும்
என்மேல் உனக்கும்
காதல்தான்..!

கித்தா தோப்பில்
ஏணி வெட்டுவெட்டியபோதும்..

ஓடிப்போயி
மாரியம்மன் கோயிலில்
தாலி கட்டியபோதும்..

உன்மேல் எனக்கும்
என்மேல் உனக்கும்
காதல்தான்..!

பிள்ளைப் பொறப்புக்கு
நீ அம்மா வீட்டுக்குப்போனப்பவும்...
மூனு பிள்ளைங்களை பெத்து
முப்பது செஞ்சப்பவும்..

உன்மேல் எனக்கும்
என்மேல் உனக்கும்
காதல்தான்..!

பிள்ளைங்க வளர்ந்து
படிச்சி பாஸ் பண்ணி
வேலைக்குப் போனப்பவும்..

ஜோடியோட வீட்டுக்கே
வந்து நின்னப்பவும்...

உன்மேல் எனக்கும்
என்மேல் உனக்கும்காதல்தான்..!

காலம் மாறி
பருவம் மாறி
உருவம் மாறி போயி...

நீ மகள் வீட்டுலேயும்
நான் மகன் வீட்டுலேயும்
இருக்கறப்ப மட்டும்...

புரியவே இல்லை
பிள்ளைங்களுக்கு
நம்ம காதல்!

காதலர் தினம்
காதலுக்கு தானாம்
உலகமே சொல்லுது..!

நாம மட்டும்
ஒருத்தரை ஒருத்தர்
பார்க்க முடியாம..

ஒன்னா இருக்கலாம்
வா செல்லம்மா
முதியோர் இல்லத்துக்கு!

ஊருக்கும் உலகத்துக்கும்
புரிய வைப்போம்..

உன்மேல் எனக்கும்
என்மேல் உனக்கும்
உள்ள உண்மையான காதலை!

- இராம.சரஸ்வதி, பத்துகேவ்ஸ்

No comments: