தமிழோடு வாழ்பவன்..
Thursday, April 2, 2009
மீன் தொட்டியும்.. வாழ்க்கையும்..
ஜப்பானியர்கள் அதிகம் விரும்பி உண்ணக்கூடிய உணவு.. சுஷி! அதிலும் மீன் சுஷி என்றால் அங்கே மவுசு அதிகம், மீனுக்கும் மவுசு அதிகம்.
ஒரு காலத்தில் ஜப்பானில் மீன்பிடி தொழிலுக்கு பெரிய மருட்டலாக இருந்தது ஒரு பிரச்சனை. அதாவது, ஜப்பானியர்கள்.. பழைய மீன்களையோ, இறந்த மீன்களையோ விரும்பி உண்ண மாட்டார்கள். அவர்களுக்கு தேவை.. புதிய மீன்கள்.. வளப்பமான மீன்கள்.
அந்த காலத்தில், ஆழ் கடலில் மீன் பிடிக்கும் ஜப்பானியர்கள், பெரிய-பெரிய குளிர்சாதன பெட்டிகளை அமைத்து மீன்களை கரைக்கு எடுத்து வந்தனர். ஆனால், அந்த மீன்கள் விலை போகவில்லை. காரணம் அவை இறந்து போன மீன்கள்.. என்ன செய்வது..? அரசாங்கமே யோசித்தது.. மீனவர்களுக்கு உதவ..
பிறகு மீன்களை உயிரோடு கரைக்கு கொண்டு வர, கப்பலில் பெரிய பெரிய தொட்டிகள் கட்டி, அதில் நீரை நிரப்பி.. மீன்களை கொட்டி கொண்டு வந்தனர். தொட்டிகளில் அடைபட்டு, நீந்தாமல் சோம்பிக் கிடந்தன மீன்கள். கரைக்கு வந்த பிறகு, அந்த மீன்களும் விலை போகவில்லை! காரணம், சோம்பிக்கிடந்த மீன் இறைச்சி ருசியாக இல்லையாம்! என்ன செய்வது? மீண்டும் யோசித்தனர். பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டனர். இறுதியில் கணடாவைச் சேர்ந்த ஒரு ஆலோசகரை நியமித்தனர். அவர் சொன்ன ஆலோசனை என்ன தெரியுமா???
ஆம்.. மீன் தொட்டிகளில் சிறிய சுறா மீன்களை போடுங்கள் என்று சொன்னாராம். பிறகு என்ன நடந்தது தெரியுமா? சுறா மீன் பயத்தில் மீன்கள் நீந்திக்கொண்டே கரைக்கு வந்து சேர்ந்தன. சுறா மீன்களும் ஒன்றிரண்டு மீன்களை மட்டுமே தின்றன.. கரைக்கு வந்த மீன்களுக்கு.. இப்போது ருசியும் அதிகம்.. மவுசும் அதிகம்..!
ஆம்.. நமது வாழ்க்கையும் அந்த மீன் தொட்டி மாதிரிதான்.. சுறா மீன்கள் என்னும் சிறு சிறு போராட்டங்கள், தடங்கல்கள், பிரச்சனைகள், எதிரிகள் இவை எல்லாம் இருந்தால்தான்.. நாம் சுறுசுறுப்பாக இயங்க முடியும் என்று நினைத்துக் கொண்டு வாழ்க்கையை ஓட்டுங்கள்!
அன்புடன் K.கிருஷ்ணமூர்த்தி
Saturday, March 21, 2009
குழந்தை பாண்டம்
சுழலும் சக்கரத்தில் களிமண்ணை வைத்து... பாண்டத்தை உருவாக்குவார்கள்.. ஒரு கையால் உள்ளிருந்து அணைத்தபடியும்.. மறு கையால் வெளியே இருந்து தட்டிக்கொடுத்தபடி அவர்கள் அந்த பாண்டங்களை உருவாக்குவார்கள்.. இந்த இரு கைகளின் அழுத்தமும் ஒரே அளவில் இருப்பது முக்கியம்.. பிறகு அவற்றை உலையில் போட்டு சூடு காட்டுவார்கள்.. அப்பொழுதுதான்.. அந்த பாண்டம் நமக்கு பயனளிக்க வல்லதாக இருக்கும்... ஏதாவது ஒரு கையின் அழுத்தம் அதிகமானாலும், அந்த பாண்டம் உருப்பெறாது!
குழந்தை வளர்ப்பும் அப்படித்தான்... பாசம் எனும் ஒரு கையால் அணைத்து... கண்டிப்பு என்னும் மறு கையால் கண்காணிப்போடு வளர்க்க வேண்டும்.. பாசம் கூடினாலோ.. கண்டிப்பு அளவுக்கு மீறினாலோ.. குழந்தைகள் நாம் நினைப்பதுதால் வளர மாட்டார்கள்.. இப்படி முறையாக வளர்த்த பிள்ளைகளை, வாழ்க்கை என்னும் உலையிலிட்டு சூடு காட்ட வேண்டும்.. அப்பொழுதுதான்.. நம் குழந்தைகள், நாட்டிற்கும் வீட்டிற்கும் நல்ல மக்களாக திகழ்வார்கள்..!
Sunday, February 15, 2009
புதுக்கவிதை கருத்தரங்கில் எனது ஆய்வுக்கட்டுரை- பகுதி 1 (நவம்பர் 2006)
என்னுரை.
என்னுள்..
‘ழ’கரமாய், இலயித்துக் கொண்டிருப்பவளே....
என்னைச் சிகரமாய் செதுக்கிக் கொண்டிருப்பவளே..
தமிழே..
உன்னை உரிமையோடு வணங்கி என் உரையை தொடங்குகின்றேன்..
என்னுள் நீயிருந்து.. காப்பாய் தேவி!!
புதுக்கவிதை.
கவிஞர்கள் பலருக்கு இது ஒரு கெட்ட வார்த்தை. இளைய தலைமுறை இலக்கியவாதிகளுக்கோ, இது ஒரு போதிமரம். அவர்களின் சிந்தனா சக்தியும், கற்பனை ஆற்றலும் கூடு கட்டி வாழும் ஆலமரம்.
எந்த மொழிக் கவிதை என்றாலும், சொல்ல வரும் கருத்துக்கள் அழகியற்கூறுகளோடு (Aesthetic elements) சொல்லப்படும்போதுதான், கவிதை.. கவிதையாகின்றது. காண்போரையும் கற்போரையும் கவர்ந்து ஈர்க்கிறது. அங்கதமானாலும், படிமமானாலும், குறியீடானாலும் தொண்மையானாலும்.. இந்த உத்திகள் எல்லாம் அழகியற்கூறுகளால் வடித்தெடுக்கப்படும்போதுதான், வார்த்தெடுக்கப்படும்போதுதான், அந்த கவிதை கணக்கிறது, சுவைக்கிறது, மனதில் பதிகிறது. வார்த்தைகள் வரையும் ஓவியம்தானே கவிதை! இந்த விஷயத்தில், புதுக்கவிதை ஓரளவுக்கு வெற்றி நடை போடுகிறது என்பதுதான் உண்மை.
புதுக்கவிதை, தமிழ் தாய் கண்ணயர, களைப்பாற கட்டப்பட்ட ‘புதிய’ தொட்டில் அல்ல. அவள் வெற்றி நடை போட்டு, தமிழ் வாழும் உள்ளங்களிலும் இல்லங்களிலும் வசந்தமாய் பவனி வர, அமைத்துக் கொடுக்கப்பட்ட ‘புதிய’ நெடுஞ்சாலை!
கைப்புண்ணுக்கு அறுவைச்சிகிச்சை தேவையில்லை.. ஐயோடின் போதும்! எங்கள் பாமரர்களின் சோகத்துக்கு, சுகத்துக்கு, போராட்டங்களுக்கு, புதுக்கவிதை போதும்! இன்னொரு புதுக்கவிதை இந்த நேரத்தில் நினைவுக்கு வருகிறது..
ஊமை
அன்னிய மொழியின் ஆதிக்கம்..
பேசத்தெரிந்தும்
ஊமையாய் கிராமவாசி !
-யாரோ
வேற்றுமொழி தெரியாததால், வாயிருந்தும்.. நன்றாய் பேசத்தெரிந்தும்.. பேசமுடியாத கிராமவாசிகளை, பாமரர்களை.. ஊமை என்கிறார் கவிஞர். நல்ல சொல்லாற்றல் இருந்தும், சிந்தனாசக்தி இருந்தும்.. யாப்பு தெரியாத எங்கள் இளைய சகோதரர்களும் ‘ஊமை’யாகிவிட்டனர் ‘மரபு’களின் மத்தியில்!
அப்படியென்றால் புதுக்கவிதையை எப்படி வேண்டுமானாலும் எழுதலாமா? அதெல்லாம் புதுக்கவிதை என்றாகிவிடுமா? அதுவும் இல்லை..
இந்த நான்கு மாதத்தில் வெளிவந்த கவிதைகளை பார்க்கும் பொழுது, பல படைப்பாளிகள், உரை நடையை உடைத்துப் போட்டு கவிதையாக்கியிருப்பது வேதனையளிக்கிறது. உதாரணத்திற்கு:
மாதச் சம்பளம்
மலை ஏறி
மரத்தைச் சீவுகிறார்கள்
மழை பாராமல்
வியர்வை சிந்துகிறார்கள்..
குறை அறியாமல்
இரவும் பகலும்
பாடுபடுகிறார்கள்..
ஆனால்
அவர்களின் குறை அறிந்தும்
ஊதியத்தை உயர்த்த மறுக்கிறார்கள்..
-(யுவனேஷ்வரன் வேலு, காராக் - நயனம் 3.3.2004)
இது கவிதையா? உரைநடையாகத் தானே தெரிகிறது. புதுக்கவிதையின் பலமே, புதிய சிந்தனைகள்தான், புதிய விஷயங்கள்தான், அழகியற்கூறுகள்தான். அவை இல்லாவிட்டால், புதுக்கவிதை என்ற வாள், இலக்கியப் போருக்கு உகந்ததாகாது! மாதச்சம்பளத்தை, அதன் முக்கியத்துவத்தை புதிய கோணத்தில் படப்பிடிக்க இவரது எழுதுகோல் தவறிவிட்டது!
உலகம் தொழில்நுட்பத்தை நோக்கி விரைவு இரயிலில் விரைந்து கொண்டிருக்க, இன்னமும் மாதச் சம்பளப் போராட்டம் நமக்கு தேவையா? அது ரப்பர் பாலாய் இழுத்துக்கொண்டேதான் இருக்கும். ரப்பர் தோட்டங்களில் கேள்விக்குறியாய் வளைந்து போனவனை தொழில்நுட்பத் தோட்டத்திற்கு புதுக்கவிதை பேனாக்கள் துரத்தவேண்டாமா? புதிய சிந்தனைதானே புதுக்கவிதை பேனாக்களின் மை!
வெறும் உரைநடையை உடைத்து போட்டு கருத்தே இல்லாத இன்னும் எத்தனையோ படைப்புக்கள், நம்மை முகஞ்சுளிக்க வைக்கின்றன. இப்பொழுதெல்லாம், புதினங்கள் சிலருக்கு தபால் நிலையங்களாக மாறிவிட்டன. டி.ராஜேந்தர் ஸ்டைலில், நிறைய வசன நடை ‘கவிதை’கள்.. இதோ இன்னொரு உதாரணம்:
முற்றுப்புள்ளி
அன்பே என் வள்ளி
தந்தேனே என் அன்பை அள்ளி
மறுத்தாயே காதலை காரணம் சொல்லி
இறுதியில் வைத்தாயே என் மனதில் கொள்ளி
ஆக மொத்தம்நம் காதலுக்கு முற்றுப்புள்ளி!
(நியூ சிட்டிசன், ஜாசின்)
இதுபோன்ற படைப்புக்களையும் இதழாசிரியர்கள் பிரசுரிக்கத்தான் செய்கிறார்கள். வாடிக்கையாளர்களை... கவிதை எழுத ஊக்குவிக்கிறார்களோ...?! இதுவே வாடிக்கையாகிவிடாமல் இருந்தால், கவிதை பிழைக்கும்.
இன்னும் ஒரு சிலர், பொன்மொழிகளை உடைத்துப்போட்டு, கவிதையாக்க முயன்றிருக்கிறார்கள்! ஒன்றன்கீழ் ஒன்றாக உரைநடைகளையும், பொன்மொழிகளையும் உடைத்துப்போடும் இது போன்ற ஒரு சிலரால்தான், புதுக்கவிதை எனும் வார்த்தையே ஒரு சிலருக்கு பிடிப்பதில்லை! உதாரணத்திற்கு:
பிரச்சனை!
பிரச்சனைகளைத் தீர்ப்பவன் தெம்படைகிறான்
சினம் கொள்பவன்அமைதி இழக்கிறான்..
சிந்தித்துச் செயல்பட்டால்
மன அமைதியும் நிம்மதியும்
நிரந்தரமாகி விடும்!
-வெற்றி இதழில் வந்த ‘கவிதை’.
ஏதோ, காலண்டரில் படித்த பொன்மொழிகளை ஒன்றன் கீழ் ஒன்றாக அடுக்கி வைத்திருக்கிறார். இதை எப்படி கவிதை என்பது?!
எதிர்பார்க்காத ஒரு விஷயத்தை யதார்த்தமாக ஒரு கவிஞன், வித்தியாசமாக படம் பிடித்துச் சொல்கிறானென்றால், என்னைப் பொருத்தவரை, அதுதான் கவிதை. இதைப்போல..
புத்தகம்
சொல்லிலும்
‘கம்’ இருப்பதால்தான்
அதனை
யாரும் திறப்பதில்லையோ?!
(பா.ராஜேஸ்வரி, குளுவாங்)
• ஆய்வு
இந்த ஆய்வுக்காக, கடந்த ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் (2004), நான்கு மாதங்களில் வெளிவந்த தென்றல், மன்னன், நயனம், வெற்றி, செம்பருத்தி, முத்தமிழ் போன்ற புதினங்களும், மக்கள் ஓசை, மலேசிய நண்பன், வானம்பாடி, உயர்வோம் போன்ற பத்திரிக்கைகளும் என் பார்வைக்காய் என்னிடம் தரப்பட்டன. இவற்றில் நான் கண்ட மொத்த படைப்புக்கள் 682. இவை அத்தனையையும் வாசித்தேன், ஆராய்ந்தேன். சிலவற்றின் தலைப்பே அவற்றுக்கான முகவரியாய், படிக்கும் ஆவலை தூண்டின. சிலவோ, முதல் வரியிலேயே... என் பொறுமையின் எல்லையை சோதித்தன! ஆய்வோடு நின்றுவிடாமல் அபிப்பிராயம் கூறுவதும் கடமை என்று உணர்கிறேன். ஆகவே, இது வெறும் ஆய்வு மட்டும் அல்ல, விமர்சனம்.
கிடைக்கப்பெற்ற 682 படைப்புக்களில், பாராட்டுக் கவிதை, இரங்கற்பா, நன்றி கூறும் கவிதை, கட்டுரைகளில் தலைகாட்டிய கவிதைகள், தொடர்கவிதைகள் போன்றவை ஆய்வுக்கு ஏற்புடையவை அல்ல என்பதால் அவற்றை தவிர்த்து விட்டேன்! மேலும் பல படைப்புக்களை கவிதைகளாக ஏற்றுக்கொள்ள ‘இலக்கியக் கண்’ மறுத்ததால், 340 கவிதைகளை மட்டும் ஆய்வுக்கும் விமர்சனத்திற்கும் எடுத்துக்கொண்டேன்.
கவிதையின் ஆய்வை தொடங்குமுன், கவிதை எழுதுபவர்களின் பின்னணியை சற்று ஆராய்ந்து பார்க்கவேண்டுமல்லவா?
தோட்டத் தொழிலாளர்களாய் இங்கு நாம் குடியேறுவதற்கு முன்பாகவே, கடாரத்தை வென்று ஆட்சி புரிந்தவர்கள் நாம். இந்த சரித்திரம் கொஞ்சம் கொஞ்சமாய் ஏடுகளிலிருந்து ‘சரிக்க’ப் பட்டுக்கொண்டிருக்கிறது என்பது வேதனை. இது இப்போதுள்ள சரித்திர பாடப்புத்தகங்களை பார்ப்பவர்களுக்கு புரியும். நம்மவர்களே இப்பொழுது தம் பிள்ளைகளை தமிழ்பள்ளிகளுக்கு அனுப்ப தயங்குகின்றனர் என்பது இன்னொரு வேதனை! இது அவர்களின் குற்றமும் இல்லை. தமிழ்ப் பள்ளிகளின் குற்றம். தரம் இருந்தால், எந்த ஒரு பொருளுக்கும் தேவை (demand) இருக்கும். இந்த நிலையில், தமிழர்கள் மத்தியில் தமிழ் கற்பவர்கள் குறைவு. அப்படி கற்பவர்கள், ஆறாம் வகுப்பிற்கு மேல் அதை தொடர்வது அதைவிட குறைவு! காரணம், அரசாங்கத் தேர்வுகளில் தமிழ் வினாத்தாட்களை திருத்தும் ஆசிரியர்களின் போக்கு. தமிழ் மொழியில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை ஆராய்ந்தால் இந்த உண்மை புரியும். ஆறாம் படிவத்தில் தமிழ் மொழி தாளுக்கும் மற்ற மொழி தாட்களுக்கும் உள்ள வித்தியாசத்தை ஆராய்பவர்களுக்கு இந்த உண்மை புரியும்!
இங்கே, எந்தப் பள்ளியிலும், ஆறாம் படிவத்துக்கான வகுப்புக்கள் நடத்தப்படுவதில்லை. ஆனால். இன்னமும் நிறைய மாணவர்கள் ஆறாம் படிவத்தில் தமிழை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், எத்தனை பேர் நல்ல முறையில் தேர்ச்சி பெறுகின்றனர்?!
தமிழ் மொழி தேர்வில் தோற்றவர்கள்தான் அதிகம் எனும் நிலையில், தமிழை ஒரு பாடமாக எடுக்க எந்த ஒரு சராசரி மாணவனும் முன்வர மாட்டான். தமிழ் சோறு போடாது என்பது போய்.. இப்பொழுது தமிழ் ‘மார்க்’ போடாது என்றாகி விட்டது! இது தமிழ் தாட்களை தாயாரிப்பவர்களும், திருத்துபவர்களும் இம்மண்ணில் புரிந்த சாதனை. இன்னும் கொஞ்ச நாட்களில் யாருமே தமிழ் தாட்களின் பக்கம், மறந்தும் தலை வைக்கக் கூடாது என்ற எண்ணமோ! அவர்களுக்கு பிறகு, அந்த பதவிகளே இருக்கக்கூடாது என்ற ‘பெரிய’ மனமோ தெரியவில்லை.. ஆனாலும், தமிழ் ‘செடி’யல்ல.. விருட்சம்..!
(தொடரும்)