தமிழோடு வாழ்பவன்..

My photo
சுபாங் ஜாயா, சிலாங்கூர், Malaysia
மனிதத்தை மதிக்கும் மனிதன்..

Monday, September 21, 2015

ஆராரோ ஆரிரரோ..

இந்த உலகின் எந்த மூலையிலாவது, இந்த ஆராரோ ஆரிரரோ தாலாட்டைக் கேட்காத தமிழ்க் குழந்தைகள் இருக்க முடியுமா? அதனை பாடாத தமிழ்த் தாய்மார்கள்தான் இருக்க முடியுமா? தமிழே தெரியாத தமிழ் பெண் என்றாலும் இந்த தாலாட்டும் அதன் சந்தமும் தெரியாமல் இருக்க முடியுமா?

இந்த தாலாட்டின் பொருள்தான் என்ன? காலங்காலமாய் அழியாமல் இருக்கும் இந்த தாலாட்டில் நிச்சயம் பொருள் பொதிந்திருக்க வேண்டும் அல்லவா? வாருங்கள்.. சற்றே அந்த பொருளை புரிந்து கொள்வோம்..

ஆராரோ ஆரிரரோ.. ஆராரோ ஆரிரரோ..

இதுதான், இந்த வரிகள்தான் எல்லா தமிழ் தாலாட்டுக்களுக்கும் மையம்.

இந்த ஆராரோ என்றால் என்ன? தமிழ் சித்தர்கள் பாடல்கள் பலவற்றில், யார் எனும் வார்த்தைக்கு பதிலாக ஆர் என்ற வார்த்தையையே பயன் படுத்தினார்கள். ஆக, ஆர் என்றால், யார் என்று பொருள் கொள்ள வேண்டும். இப்பொழுது இந்த பதத்தை பிரித்துப் படியுங்கள்.

ஆர் ஆரோ.. ஆர் ரிராரோ...
யார் யாரோ.. யார் இவரோ..

இதன் பெய்ப்பொருள் என்ன? இந்த ஜென்மத்தில் என் வயிற்றில் பிறந்த மகனே.. நீ முன்னம்.. முற்பிறவில் யாரோ? யார் யாரோ? பல முன் ஜென்மங்களில் யாருக்கெல்லாம் மகனாய் பிறந்தாயோ?

மீண்டும் ஒரு ஆரிரரோ..

ஆர் ஆரோ.. ஆர் ரிராரோ...
யார் யாரோ.. யார் இவரோ..

இப்பொழுது;

இந்த ஜென்மத்தில் என் வயிற்றில் பிறந்த மகனே.. நீ இனி.. அடுத்த பிறவில் யாரோ? யாராய் பிறப்பாயோ? அடுத்து வரப்போகும் பல ஜென்மங்களில் யாருக்கெல்லாம் மகனாய் பிறப்பாயோ?

எவ்வளவு பெரிய சித்தாந்த தெளிவினை இந்த ஆராரோ தாலாட்டில் வைத்து பாடியுள்ளனர் என்று தெரிந்த பொழுது.. தமிழனாக பிறந்ததற்கு, தமிழ் கற்றறிந்ததற்கு கோடி தவம் செய்த மகிழ்ச்சி உள்ளத்தில் பெருக்கோடியது!

K.கிருஷ்ணமூர்த்தி

(குறிப்பு: இந்தச் செய்தியை எங்களுக்கு சொன்னவர், டாக்டர் பால தருமலிங்கம் ஐயா அவர்கள். மலேசிய இந்து அகாடமியின் (மலேசிய இந்து கல்விக்கழகம்) தேசியப் பொதுச் செயலாளர். )


No comments: