தமிழோடு வாழ்பவன்..

My photo
சுபாங் ஜாயா, சிலாங்கூர், Malaysia
மனிதத்தை மதிக்கும் மனிதன்..

Sunday, February 22, 2009

புதுக்கவிதை கருத்தரங்கில் எனது ஆய்வுக் கட்டுரை - பகுதி 3 (2006)

இண்டெர்நெட் காதல்

கணினி தொழில்நுட்பம், காதலையும் விட்டு வைப்பதாக இல்லை. ‘சாட் ரூமில்’ முகம் தெரியாமலேயே தினம் தினம் நூற்றுக்கணக்கான காதல் பூக்கள் மலர்ந்துகொண்டிருக்கின்றன, நிமிடத்துக்கு நிமிடம். இதில் சில பூக்கள் மணம் வீசி மகரந்தங்களை பரப்பினாலும், பெரும்பாலான காதல், காமத்துக்காகவே என்றாகிவிட்டது. இதில் வேதனை என்னவென்றால், சில வேலைகளில்.. இந்த கவிதையை படித்துப் பாருங்கள்:

இண்டெர்நெட் காதல்!
இண்டெர்நெட்
காதல் வைரஸ்
ஆயிரம் வாட் ஈர்ப்பு..
சந்தோசம்..
பூர்வ ஜென்ம பந்தம்
வார்த்தை ஜாலம்
நேரில் காணாத வரை..!
கண்டதும்
வேதனை
ஏமாற்றம்
குற்ற உணர்வு..!
அப்பனும் மகளும்!

-சா.வேலா, மாசாய்


புதுக்கவிதையில் சமுதாயச் சிந்தனைகள்

ஒரு கவிஞன் சமுதாயச் பிரச்சனைகளை எழுத, தன் எழுதுகோலுக்கு மையூற்றுகிறானோ, அப்பொழுதுதான் ‘கவிஞன்’ என்கிற அங்கீகாரம் அவனுக்கு தரப்படுகின்றது. பிரச்சனைகளை கண்டு வெறுமனே புலம்பிக்கொண்டிருக்காமல், தூங்கிக்கொண்டிருக்கும் சமுதாயத்தை கவிதைச் சாட்டையால் ஓங்கி அடித்து எழுப்புபவன்தான் கவிஞன். இதைச் செய்ய கவிஞனுக்கு ஒரு தெளிந்த சிந்தனை தேவை. தைரியம் தேவை. அரசியல் வாள்கள் இவர்களின் கைகளை அறுத்தெரிய, பேனாக்களை பொடிப்பொடியாக்க காத்துக்கொண்டிருக்கும். இலக்கியமும் போர்க்களம்தான்.

இந்த ஆய்வுக்காக நான் எடுத்துக்கொண்ட புதுக்கவிதைகளில் ஏறக்குறைய 15 விழுக்காடு கவிதைகள், இதுபோன்ற சமுதாயச் சங்கதிகளை உள்ளடக்கியிருந்தவை. மாதச் சம்பளப் பிரச்சனை, பல்கலைக்கழக மாணவர் சேர்ப்பு பிரச்சனை, ஜாதிப் பிரச்சனை, அரசியல் சீர்கேடுகள், வட்டி முதலைகள்.. இப்படி என்னும் எத்தனையோ சமுதாயப் பிரச்சனைகளை, இந்த கவிதைகளில் பலவித கோணங்களில் படம் பிடித்துக் காட்டியிருந்தனர்.
எங்களின் ஒட்டுமொத்த இளைஞர் கூட்டமே, கூனிக் குறுகி வளைந்து கிடக்கும் முதுகெலும்போடு வாடிக்கிடக்கிறது. அந்த வாடிய பயிர்கள் வீறு கொண்டு எழ ‘வியாக்ரா’ வேண்டும் என ந.பச்சைபலனின், “வேண்டும் வியாக்ரா..” கவிதை நெஞ்சில் நிற்கிறது.
“எங்கள் பொருளாதாரக் கோடுகள்
பூஜ்யங்களை நோக்கியே
புன்னகைக்கின்றன..

எங்கள் கல்விக்கோடுகள்
மகஜர்களோடு
மல்யுத்தம் நடத்துகின்றன..

ஒட்டு மொத்தமாய்
எங்கள் இளைஞர்களின்
முதுகெலும்பைத் தடவிப்பார்த்தேன்..

எல்லாம்
வளைந்து வளைந்து
குனிந்தே இருக்கின்றன

இனி சிட்டுக்குருவி லேகியத்தாலும்
நாங்கள்
சமாதானமடைய சாத்தியமில்லை
வியக்ரா வேண்டும்..

இந்த கவிதை இன்றைய இளைஞர்களுக்கு நிச்சயம் ஒரு ‘வியாக்ரா’வாய் புத்துணர்வு ஊட்டியிருக்கும், ஒரு சில நிமிடங்களுக்காவது! கவிதையில், கவிஞரின் சொல்லாட்சி தெரிகிறது. கைகொடுத்திருக்கிறது. இருந்தாலும், கவிஞர் வியாக்ராவை விவரிக்காமலேயே விட்டு விட்டார். இருண்மைப் பண்பில் இவர் சொல்லி இருக்கும் ‘வியாக்ரா’ எதுவென்று, தொலத்துவிட்ட வாழ்க்கையை தேடி குனிந்து கிடக்கும் இளைஞர்களுக்கு விளங்குமா?

இன்றைய சூழ்நிலையில், நம்மவர்களின் பொருளாதார வலிமை என்ன என்பது அனைவரும் அறிந்ததே! நிலைமை இப்படி இருக்க, கல்வி ஒன்றினால்தான் சமுதாய மேம்பாடு கிடைக்கும் என்ற கட்டாயம். அந்த நம்பிக்கையும் நசுங்கிப்போகும் வகையில் நாட்டின் பல்கலைக்கழக மாணவர் சேர்ப்பு முறை! இந்த சமூக பிரச்சனையையும், கவிஞர்களின் பேனாக்கள் படம் பிடிக்க தவறவில்லை. சிலர் நாசுக்காக சொல்லியிருக்கின்றனர்.. ஒரு சிலர், சிதறு தேங்காயாய் பட்டென்று போட்டு உடைத்திருக்கின்றனர், இந்த கவிதை போல..

“கல்விக் கசடற கற்றும்
ஊசி போட
ஒருத்தனுக்கே இடம்...”
(தலைமையா.. இயலாமையா.. : வீர. இராமன், சிம்பாங் ரெங்கம்)

ஆதங்கத்தை வெளிப்படுத்துவது மட்டும் கவிஞர்களின் வேலையல்ல. அதற்கான தீர்வையும் தீர்க்கமாக சொல்ல வேண்டிய கட்டாயம், அவன் கவிதைகளுக்கு உண்டு. அப்படி, இந்த நான்கு மாத கவிதைகளில், தீர்க்கமான கருத்துக்களை அதிகம் காண முடியாதது வருத்தம் தான்! இனி வரும் காலங்களில், இந்த நிலை மாறும் என்று எதிர்பார்ப்போம்.

மாதச் சம்பளப் பிரச்சனையைச் சொல்ல வந்த கவிஞர்கள் பலர் தங்களுடைய பேனாக்களில் கண்ணீரூற்றி எழுதிருந்தனர்.. ஒரு சிலர் நெருப்பினால் சுட்டு சுட்டு எழுதியிருந்தனர். ஏழை பாட்டாளி மக்களுக்காக, அவர் படும் இன்னல்களுக்காக எழுதப்பட்ட கவிதைகளில், தோட்டப்புற வாழ்க்கையை படிமம் மற்றும் குறியீடு போன்ற உத்திகளில் மெருகேற்றி இருந்தனர். பட்டணத்தில் இருக்கும் பலரை, அவர்களின் நினைவலைகளை இந்த கவிதைகள் அவர்களின் கடந்த காலங்களை கண் முன்னே நிறுத்தி இருக்கும். அவர்களின் இன்றைய பிரச்சனைகளை உணர்த்தியிருக்கும்!

ஒரு கவிஞர், தனது கோபத்தை தனை வளர்த்த மண்ணின் மீது காட்டுகின்றார். பொறுத்துக் கொண்டிருப்பதே பூமித்தாயின் குணம் என்பதாலோ என்னவோ..

“இந்த மண் ருசி
தெரிந்து வைத்திருக்கிறது..
வேண்டியவர்களுக்குப்
பழத்தையும் தானியத்தையும்
தருகிறது!
எங்களுக்கு
அருந்த முடியாத
ரப்பர் பால்!”
-(ரப்பர் பால்: சை.பீர்முகம்மது)

ஒரு உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். முன்னூறு ரிங்கிட் மாதச் சம்பளம் என்பது, நாட்டின் வறுமைக் கோட்டுக்கும் கீழே என்பதுதான் அது! அந்த முன்னூறு ரிங்கிட் சம்பளத்தைக் கூட தர தோட்ட முதலாளிகள் சங்கம் மறுப்பது வேடிக்கை. நாடே பொருளாதார நலிவில் சிக்குண்டபோது, ஒரே ஒரு துறை மட்டும்.. பன்மடங்கு இலாபத்தை ஈட்டியது! நிர்வாகத்துறையினருக்கு பல மாத போனஸ¤களும் கிடைத்தன. அதுதான் தோட்டத் தொழில்துறை. அமெரிக்க டாலரின் ஏற்றத்தோடு, செம்பனை மற்றும் ரப்பர் விலைகளும் அனைத்துலக சந்தையில் ஏற்றம் கண்டது. இலாபகரமான தொழிலாக இன்னமும் இருந்து வருகிறது. இருந்தும் மாதச்சம்பளப் பிரச்சனைக்கு மட்டும் இன்னமும் சுமூகமான தீர்வு ஒன்று பிறந்தபாடில்லை! பிறந்துவிட்டால், அரசியலில் சாதிக்க, சண்டை போட, அரசியல் நடத்த வேறொன்றும் இல்லாமல் போய்விடுமே என்ற அச்சமோ? தொழிலில் பன்மடங்கு இலாபங்கள் தோட்டங்களின் கூரைகளில் கொட்டிக்கொண்டிருக்க, ஒழுகும் கண்களுடன் தொழிலாளி! வெறும் முன்னூறு ரிங்கிட் மாதச்சம்பளம், அதைத் தீர்த்துவைக்க ஆளில்லாமல் ‘இழுவை’யில் நிற்கின்ற அவலத்தை..
“பால்தோட்ட பிதாக்களே!
இழுவையில் நிற்பது
‘முன்னூறா..
ஓய்ந்து போகாத ஏழையின்
கண்ணீரா...?”

என்ற ப.அ.சிவத்தின் வரிகள், ஏழைகளின் வேதனையை நமக்கு இனம் காட்டுகின்றன. நம் இளம் தொழிலதிபர்களை உலுக்கி எடுத்த இன்னொரு பிரச்சனையும் இந்த காலக்கட்டத்தில் அதிகம் பேசப்பட்டது. வட்டி முதலைகள். இந்த பிரச்சனையையும் படம் பிடித்து காட்டியிருந்தன ஓரிரு கவிதைகள், இப்படி:

“முதலை கூட இறந்துவிட்டால்
முதுகுதோல் பயன்படுமாம்..
வட்டி முதலை இறந்துவிட்டால்
கழுகுந் தின்ன பயப்படுமாம்!”
-(கலிகால அசுரன்: ஆர்.சரவணன், செர்டாங்.)
பி.கு: தோட்டத் தொழில் துறை நல்ல இலாபத்தை ஈட்டுகிறது என்று சொன்னேன். அன்று அது (2005) உண்மை. இன்று அந்த துறை சற்று பின்னடைவை எதிர் நோக்கியிருக்கிறது என்பதும் உண்மை..)
(இன்னும் தொடரும்)

No comments: